
ரிஷிகேஷில் உள்ள முருகன் கோயில் கொடி மரத்தின் மீது மயில் அமர்ந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
கோவில் கொடி மரணத்தின் மீது மயில் ஒன்று பறந்து வந்து அமர்கிறது. நிலைத் தகவலில், “திரு முருகன் கோவில் (ரிஷிகேஷ் உத்தரகண்ட்)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை RSS TAMILNADU ☑ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Hemant என்பவர் 2020 ஜூலை 19ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்க்கடவுள் முருகனுக்கு வட இந்தியாவிலும் கோவில் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அதே நேரத்தில் இந்த கோவில் ரிஷிகேஷில் உள்ள முருகன் கோவிலா என்று சந்தேகமாக இருந்தது. பார்க்க கொஞ்சம் ஜெயின் கோவில் போல இருக்கிறது. மேலும், அதன் கொடி மரம் வழக்கமான இந்து கோவில்களில் உள்ளது போல இல்லை. ஜெயின் கோவிலில் உள்ளது போல இருப்பதால் இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இது அவுரங்கபாத்தில் உள்ள சிவன் கோவில் என்று சிலர் பகிர்ந்திருந்தனர். சிலர் இது குஜராத்தில் உள்ள ஜெயின் கோவில் என்று குறிப்பிட்டிருந்தனர்.
முதலில் இது அவுரங்காபாத்தில் உள்ள சிவன் கோவிலா என்று பார்த்தபோது இரண்டு கோவிலுக்கும் வித்தியாசம் இருப்பதைக் காண முடிந்தது. அவுரங்கபாத்தில் உள்ள காதேஷ்வர் மகாதேவ் மந்திர் படத்தை கூகுள் செய்து பார்த்தோம். அதில் உள்ள கோபுரம் சரிவாக உள்ளது. ஆனால், மயில் வந்து அமரும் கோபுறம் சற்று வளைவாக உள்ளது. அதே போல் கோபுரத்துக்குப் பின்புறம் சிறிய கொடி மரமும் இல்லை. எனவே, மயில் அமர்ந்த கோவில் இது இல்லை என்பது தெளிவாகிறது.
குஜராத்தில் இந்த கோவில் உள்ளதா என்று தேடியபோது இதே பெயரில் பல கோவில்கள் இருந்தன. அதனால் எந்த கோவில் என்று கண்டறிவது சிரமமாக இருந்தது. கொடி மரத்தைப் பார்த்தபோது ஜெயின் கோவில்களில் உள்ளது போன்ற கொடி போலவே அது இருந்தது.
ரிஷிகேஷில் முருகன் கோவில் எந்த இடத்தில் உள்ளது என்று தேடிப் பார்த்தோம். தண்டாயுதபாணி திருக்கோவில், வீரபத்திர மார்க் பகுதியில் இருப்பது தெரிந்தது. அதன் தோற்றம் தமிழகத்தில் இருப்பது போலவே இருந்தது. அதை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வகித்து வருவதை தமிழில் பெயர்ப் பலகை இருப்பதை வைத்தே தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த கோவிலுக்கும் மயில் வந்து அமர்ந்த கோவிலுக்கும் தோற்றத்தில் எந்த தொடர்பும் இல்லை.
வேறு ஏதாவது முருகன் கோவில் உள்ளதா என்று தேடியபோது, வட இந்தியாவில் உள்ள ஒரே ஒரு முருகன் கோவில் என்று வேறு ஒரு கோவில் பற்றிய தகவல் கிடைத்தது. ஆனால் அது மந்தாகினி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தனர். அந்த கோவிலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கோவில் போல இல்லை.
நம்முடைய ஆய்வில்,
இந்த வீடியோவை அவுரங்கபாத்தில் உள்ள சிவன் கோவில் என்று சிலர் பகிர்ந்திருப்பது நமக்குக் கிடைத்துள்ளது.
அவுரங்கபாத் சிவன் கோவில் தோற்றத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இது குஜராத்தில் உள்ள ஜெயின் கோவில் என்று பலரும் பகிர்ந்து வருவது நமக்குத் தெரியவந்துள்ளது.
ஜெயின் கோவிலில் உள்ளது போலவே இதில் கொடி மரம் மற்றும் கொடி பறப்பது தெரிகிறது. இதன் மூலம் இது ஜெயின் கோவில் என்பது தெரியவருகிறது.
ரிஷிகேஷில் உள்ள கார்த்திகேயா கோவிலின் தோற்றம் நம் ஊரில் உள்ள முருகன் கோவில் போலவே இருப்பது தெரியவந்துள்ளது. வீடியோவில் உள்ளது போன்ற வெள்ளை நிற கோபுரம் அதற்கு இல்லை.
எனவே, இந்த வீடியோ ரிஷிகேஷ் முருகன் கோவிலில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு சிறிது உண்மையுடன் நிறைய தவறான தகவல் சேர்த்து வெளியிடப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
