130 ஆண்டுக்கு முந்தைய நாகர்கோவில்- திருவனந்தபுரம் சாலையின் புகைப்படம் இதுவா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

1891ம் ஆண்டு எடுக்கப்பட்ட நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையின் தோற்றம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

ஃபேஸ்புக்கில் Ebron JSabin என்பவர் 2020 ஜூலை 27ம் தேதி ஒரு பதிவை ஷேர் செய்திருந்தார். உண்மையில் அந்த பதிவு 2019ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி KK BOYS என்ற ஐடி கொண்ட நபரால் பதிவிடப்பட்டு இருந்தது. அந்த புகைப்படத்தின் மீது, “1891ல் எடுக்கப்பட்ட நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையின் தோற்றம். 130 ஆண்டுகள் பழைய புகைப்படம் பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை ஏராளமானோர் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் மிகவும் பசுமையான மாவட்டங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. தென்னை மரங்கள் நிறைந்து காணப்படும் மாவட்டம் என்பதால், இந்த படம் உண்மையானதாக இருக்கும் என்று பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

இது உண்மையில் நாகர்கோவில் – திருவனந்தபுரம் சாலையா என்று அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இது 1880ல் இலங்கையில் உள்ள கொழும்பில் எடுக்கப்பட்டது என்று பதிவுகள் நமக்கு கிடைத்தன. alamy.com கூட கொழும்பில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு இந்த படத்தை விற்பனைக்கு வைத்திருந்ததைக் காண முடிந்தது.

alamy.comArchived Link 1
monovisions.comArchived Link 2

நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையின் படம் என்று கூறுவதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. இதன் மூலம் கொழுப்பின் பழைய படத்தை எடுத்து, நாகர்கோவில் – திருவனந்தபுரம் நெடுஞ்சாலையின் பழைய படம் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:130 ஆண்டுக்கு முந்தைய நாகர்கோவில்- திருவனந்தபுரம் சாலையின் புகைப்படம் இதுவா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •