
இ-பாஸ் இன்றி சென்றதற்காக உங்க வீட்டுப் பிள்ளையாக நினைத்து மன்னிச்சிருங்க என்று ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டது போன்று ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ரஜினியின் ட்விட் பதிவு ஒன்று ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதில், “நான் E-Pass இல்லாம பண்ணை வீட்டுக்கு போனதை எல்லோரும் உங்க வீட்டு பிள்ளையா நினச்சு மன்னிச்சிருங்க” என உள்ளது. அதை வைத்து மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை, attuliyangal_memes என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் 2020 ஜூலை 23ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் லைக்ஸ் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ரஜினி அனுமதி பெற்று சென்றார் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார். ரஜினியின் இ-பாஸ் இணையத்தில் வெளியானது. அப்படி இருக்கும்போது ரஜினி மன்னிப்பு கேட்டார் என்று பகிர்வது ஆச்சரியமாக இருந்தது.

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இன்ஸ்டாகிராம் பதிவில் உள்ள ட்வீட், பார்க்க ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் போல இருக்கிறது. ட்விட்டர் ஐ.டியில் official என்று உள்ளது. இது உண்மையாக இருக்கும் என்று நினைத்து பலரும் இதை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது.

உண்மையில் இது ரஜினிகாந்த் போட்டதுதானா என்று ஆய்வு செய்தோம். ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கம் வெரிஃபைடு பக்கமாக உள்ளது. அதன் ஐடி @rajinikanth என்று இருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ள ட்வீட் ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள @Rajiniofflஐ பார்த்தோம். ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ளது போலவே ப்ரொஃபைல், டி.பி வைத்திருந்தனர். ஆனால் துக்ளக் படிக்கும் அறிவாளி என்று இருந்தது. எனவே, ரஜினிகாந்தை ட்ரோல் செய்யும் வகையில் போலியான ட்வீட் பக்கத்தை உருவாக்கியிருக்கலாம் என்று தெரிந்தது.

அதில் “நான் E – Pass இல்லாம பண்ணை வீட்டுக்கு போனதை எல்லாரும் உங்க வீட்டுப் பிள்ளையா நினச்சு மன்னிச்சிருங்க ” என்ற பதிவும் இருந்தது. மேலும் பல போலியான பதிவுகளை அந்த ட்விட்டர் ஐடி-யைக் கொண்டு ரஜினி சொல்லாத பல கருத்துக்கள் வெளியிடப்பட்டு, ரஜினிகாந்த் அதை கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

நம்முடைய ஆய்வில்,
ரஜினிகாந்த் உரிய இ-பாஸ் பெற்று சென்று வந்ததாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியது தெரியவந்துள்ளது.
மன்னிப்பு கேட்பதாக வெளியான பதிவு ரஜினியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் ரஜினிகாந்தின் அசல் ட்விட்டர் பக்கம் போலவே, போலியான ஒரு அக்கவுண்டை உருவாக்கி, ரஜினிகாந்த் கூறாததை எல்லாம் அவர் பெயரில் விஷமத்தனமாக பரப்பி வருவதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இ-பாஸ் விவகாரம்; மன்னிப்பு கேட்டாரா ரஜினிகாந்த்?- இன்ஸ்டாகிராம் விஷமம்
Fact Check By: Chendur PandianResult: False
