கடோத்கஜன் எலும்பு கண்டெடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி!
மகாபாரத போரில் உயிரிழந்த கடோத்கஜன் எலும்பு குருஷேத்ரத்தில் கண்டெடுக்கப்பட்டது என்று ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
வதந்தியின் விவரம்:
மிகப்பெரிய எலும்பை அகழாய்வில் கண்டெடுத்தது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், "குருக்ஷேத்திரத்தில் கண்டெடுக்கப்பட்ட 18 அடி உயர அஸ்தி பஞ்சரம் இது பீமரின் மகன் கடோத்கஜன் என்று எண்ணப்படுகிறது, டிஸ்கவரி சானல் இதை ஒளிபரப்பு செய்தது" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை தேசதுரோகிகளை கிழிக்கலாம் வாங்க என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Vijay Kumar என்பவர் 2020 ஆகஸ்ட் 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
மகாபாரத போரில் உயிரிழந்த பீமனின் மகன் கடோத்கஜன் எலும்பு கண்டுபிடித்துள்ளதாக பகிர்ந்து வருகின்றனர். அப்படி ஒன்றைக் கண்டறிந்தால் உலகின் வரலாறே மாற்றி எழுதப்பட்டிருக்கும். குருஷேத்ரத்தில் எந்த இடத்தில் கிடைத்ததோ அந்த இடம் உலகின் மிக முக்கியமான சுற்றுலா தலம் ஆகியிருக்கும். எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இதே படத்தை பைபிள் கதை ஒன்றில் வரும் கோலியாத் என்பவனின் எலும்புக் கூடு ஜெருசலேம் அருகே கிடைத்தது என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வந்திருப்பதையும் அது தவறான தகவல் என்று ஃபேக்ட் செக் கட்டுரைகள் வெளியாகி இருப்பதும் தெரிந்தது.
நம் ஊருக்கு ஏற்ற வகையில் கதையை மாற்றி கடோத்கஜன் என்று பதிவிட்டிருப்பது தெரிந்தது. இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது, உண்மையா, போட்டோஷாப் செய்யப்பட்டதா என்று தொடர்ந்து தேடினோம். அப்போது நேஷனல் ஜியோகிராபி சேனலில் மிகப்பெரிய எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பரவும் போலித் தகவல் என்று குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டிருப்பது தெரிந்தது.
ஆனால் அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படம் இல்லை. இருப்பினும் இதில் கிடைத்த தகவல் அடிப்படையில் போலியான அகழாய்வு, பெரிய எலும்புக்கூடு உள்ளிட்ட கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம்.
அப்போது, 2011ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டோஷாப் போட்டி ஒன்றுக்காக உருவாக்கப்பட்ட போட்டோஷாப் படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பலரும் வித விதமான வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்று தகவல் கிடைத்தது. நம்முடைய கீ வார்த்தை தேடலை மேம்படுத்தி வேறு வேறு வகையில் தேடினோம். அப்போது டிசைன்கிரவ்ட் என்ற இணையதளத்தில் நாம் தேடும் அந்த படம் கிடைத்தது.
வொயிட்மேத்57 என்ற அமெரிக்க டிசைனரால் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டது. சைஸ் மேட்டர்ஸ் 4 என்ற நிகழ்வுக்காக இந்த போட்டோஷாப் படம் உருவாக்கப்பட்டது. இதற்கு ஐந்துக்கு மூன்று நட்சத்திரங்கள் வழங்கப்பட்டன என்று குறிப்பிட்டிருந்தனர்.
குருஷேத்ரத்தில் கடோத்கஜன் எலும்பு கிடைந்ததா என்று தேடியபோது அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. இதன் மூலம் குருஷேத்ரத்தில் கடோத்கஜன் எலும்பு கிடைத்ததாக பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:கடோத்கஜன் எலும்பு கண்டெடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False