42 மணி நேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஜூஸ்! – விபரீதத்தை ஏற்படுத்தும் ஃபேஸ்புக் பதிவு

சமூக ஊடகம் மருத்துவம் I Medical

42 மணி நேரத்தில் புற்றுநோயை அழிக்கும் அற்புத ஜூஸ் என்று ஒரு ரெசிப்பி சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

CANCER 2.png

Facebook Link I Archived Link 1 I Article Link I Archived Link 2

 “42 மணிநேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் அற்புத ஜூஸ் பற்றித் தெரியுமா? அனைவரும் பகிருங்கள்” என்று ஒரு செய்தி லிங்க் பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தி இணைப்பைத் தமிழ் டாக்டர் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூலை 10, 2019 அன்று வெளியிட்டுள்ளனர். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

புற்றுநோய் செல்களை 42 மணி நேரத்தில் அழிக்கும் ஜூஸ் என்று குறிப்பிட்டுள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. புற்றுநோய் சிகிச்சைக்குப் பல லட்ச ரூபாய் ஆகும் என்பதால், சிகிச்சை பெற முடியாத நிலையில் பலரும் உயிரிழக்கின்றனர். புற்றுநோய் பாதிப்பு பற்றி தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆரோக்கியமானதுதான். கேரட், பீட்ரூட் உள்ளிட்டவை புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படக் கூடியதுதான். ஆனால்,  42 மணி நேரத்தில் புற்றுநோய் செல்களை அழித்துவிடும் என்றால் இன்றைக்கு உலகில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளே தேவையில்லை என்ற நிலை வந்துவிடும். புற்றுநோய்களை 42 மணி நேரத்தில் அழிக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த ஜூஸ் உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

ஃபேஸ்புக் பதிவில் உள்ள செய்தியை கிளிக் செய்து பார்த்தோம். அதில், புற்றுநோய்க்கு கடுமையான சிகிச்சை மேற்கொள்ள விரும்பாதவர்கள் இந்த ஜூஸ் சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

CANCER 3.png

பீட்ரூட், கேரட், செலரி, முள்ளங்கி, உருளைக்கிழங்கு கலந்து இந்த ஜூஸ் தயாரிக்க வேண்டும் என்று ரெசிப்பியை அளித்திருந்தனர். தினமும் இரண்டு முறை இந்த ஜூஸை குடித்தால் புற்றுநோய் செல்கள் அழிந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், பீட்ரூட், கேரட், செலரி உள்ளிட்ட காய்கறி, கிழங்குகளின் பலன்களைப் பட்டியலிட்டு இருந்தனர்.

உண்மையில் இந்த ஜூஸ் 42 மணி நேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்குமா, இதற்கு ஏதேனும் அறிவியல் ஆய்வு உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த ஜூஸ் உள்ளிட்ட வேறு சில ஜூஸ், மூலிகை டீயை மட்டும் 42 நாட்களுக்கு அருந்தி வந்தால் புற்றுநோய் குணமாகும் என்று ஒரு செய்தி கிடைத்தது.

CANCER 4.png

அந்த சிகிச்சை முறையைப் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். “Breuss Cancer Cure” என்ற பெயரில் புற்றுநோய் சிகிச்சை முறை ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்தது. Breuss என்பவர் இந்த சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார். 1950ம் ஆண்டில் 2000ம் பேர் இந்த சிகிச்சை முறையால் குணடைந்துள்ளதாக புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆராய்ச்சி அடிப்படையில் இந்த சிகிச்சை முறை பலன் தருமா என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. ஆனால், இந்த சிகிச்சையை பெற்று புற்றுநோயில் இருந்து மீண்ட பலரும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர்.

CANCER 5.png

இந்த சிகிச்சை முறையில் 42 நாட்களுக்கு திட உணவு எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. பீட்ரூட், கேரட், முள்ளங்கி, செலரி வேர் உள்ளிட்ட காய்கறி, கிழங்கு வகைகளை வைத்து ஜூஸ் தயாரித்து அருந்த வேண்டும். இதனுடன் மூலிகை டீ அருந்தலாம். எந்த வகையான புற்றுநோய்க்கு என்ன என்ன காய்கறி ஜூஸ், எந்த மாதிரியான மூலிகை டீ அருந்த வேண்டும் என்று Breuss விளக்கமா எழுதியுள்ளார். Breuss எழுதியதை மொழியாக்கம் செய்ததில் பல தவறு நடந்துள்ளதாகவும் இதனால் குழப்பம் நிலவுவதாகவும் தகவல் நமக்கு கிடைத்தது.

நம்முடைய உடலில் உள்ள செல்களின் மாறுபாடான வளர்ச்சிதான் புற்றுநோய். நம்முடைய உடலில் தினமும் ஏராளமான மாறுபாடான செல்கள் (புற்றுநோய் செல்கள்) உருவாகின்றன. அவற்றை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அழித்து வெளியேற்றிவிடுகிறது. நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் அடையும்போது புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைகின்றன. பீட்ரூட், கேரட், செலரி உள்ளிட்ட காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. இவற்றைத் தொடர்ந்து எடுத்துவந்தால் புற்றுநோய் மட்டுமல்ல எந்த நோயும் நம்மைத் தாக்காது.

Breuss புற்றுநோய் சிகிச்சை 42 நாட்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அதுவும் புற்றுநோய் வகைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளும் ஜூஸ், மூலிகை டீ மாறுபடும் என்று தெரிவித்துள்ளனர். திட உணவு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று பல கட்டுப்பாடுகள் இந்த சிகிச்சையில் உள்ளன. புற்றுநோய் சிகிச்சை எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு செய்தியில், இந்த ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு தடவை எடுத்துக்கொண்டால் போதும்… 42 மணி நேரத்தில் புற்றுநோய் செல்கள் அழிந்துவிடும் என்று தவறான தகவலை அளித்துள்ளது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு மற்றும் செய்தி தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:42 மணி நேரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஜூஸ்! – விபரீதத்தை ஏற்படுத்தும் ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False