ஃபேஸ்புக்கில் பரவும் காஞ்சி அத்தி வரதரின் அலங்காரம் இல்லாத புகைப்படம் உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

அலங்காரம் இல்லாத காஞ்சிபுரம் அத்தி வரதர் படம் என்று ஒரு பெருமாள் சிலை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

ATHI VARADAR 2.png

Facebook Link I Archived Link

பெருமாள் விக்ரகம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அத்தி வரதர்… காஞ்சிபுரம் அத்தி வரதரின் அலங்காரமில்லாதத் துல்லியமான அரிய புகைப்படம் இது” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தை, 2019 ஜூலை 13ம் தேதி ஆன்மீகமும்… ஜோதிடமும்… என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sashikala Ramakrishnan‎ என்பவர் பகிர்ந்துள்ளார்.

உண்மை அறிவோம்:

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் அத்தி வரதர் மக்களுக்கு காட்சித் தருகிறார். அத்தி வரதர் பற்றி பல்வேறு உண்மை மற்றும் வதந்திகள் பரவிக்கொண்டே இருக்கின்றன. அத்தி வரதர் காட்சி தருவதற்கு முன்பாகவே, இதுதான் அத்தி வரதர் என்று ஒரு வீடியோவை வைரல் ஆக்கினர். அது தவறான தகவல் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கண்டறிந்து செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் அத்தி வரதரின் அலங்காரம் இல்லாத புகைப்படம் என்று ஒரு சாமி சிலையின் படத்தை பகிர்ந்துள்ளனர். இதற்கு கமெண்ட் செய்திருந்த பலரும் இது தவறான தகவல் என்று குறிப்பிட்டிருந்தனர். ஒருவர் இந்த சாமி சிலை சேலத்தில் ஒரு கோவிலில் உள்ளது என்றார்.

ATHI VARADAR 3.png

இது தொடர்பாக சேலத்தில் உள்ள, பத்திரிகையாளர் ஒருவரிடம் படத்தை காண்பித்து இந்த விக்ரகம் சேலத்தில் உள்ளது என்று சொல்கிறார்களே அது உண்மையா என்று விசாரித்துத் தரும்படி கேட்டோம். அவர், “இது சேலம் பட்டை கோவில் என்று அழைக்கப்படும் ஶ்ரீவரதராஜ பெருமாள் கோவில் விக்ரகம்தான்” என்றார்.

இதை உறுதி செய்ய வேறு ஆதாரம் உள்ளதா என்று தேடினோம். அப்போது, பட்டை கோவில் ஶ்ரீவரதராஜ பெருமாள் கோவில் என்று ஒரு ஃபேஸ்புக் பக்கம் நமக்குக் கிடைத்தது. அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தைப் போன்ற விக்ரகத்தின் படங்கள் கிடைத்தன.

Archived Link

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இருந்த படமும், பட்டை பெருமாள் கோவில் பெருமாள் படமும் ஒரே மாதிரி இருந்தன. சங்கு, தலையில் அலங்காரத்துக்காக கட்டப்பட்டிருந்த கயிறின் நிறம் கூட ஒன்றாக இருந்தது. எனவே, மேற்கண்ட படம் சேலம் கோவிலில் உள்ள பெருமாள் சிலைதான் என்பது உறுதியானது.

ATHI VARADAR 4.png

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தையும், காஞ்சிபுரம் அத்தி வரதரின் க்ளோஸ் அப் படத்தையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தோம். சேலம் பட்டை கோவில் வரதர் படத்தில் சங்கு (படத்தில் சக்கரம் தெரியவில்லை) அவருடன் ஒட்டியபடி இருந்தது. ஆனால், காஞ்சிபுரம் அத்தி வரதர் விக்ரகத்தில் சங்கு, சக்கரம் சற்று தள்ளியே இருந்தது. மூக்குப் பகுதியிலும் வித்தியாசமாக இருந்தது.

ATHI VARADAR 5.png

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் காஞ்சிபுரம் அத்தி வரதரின் அலங்காரம் செய்வதற்கு முன்பு எடுக்கப்பட்ட படம் இல்லை. இது சேலம் பட்டை பெருமாள் கோவில் படம் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஃபேஸ்புக்கில் பரவும் காஞ்சி அத்தி வரதரின் அலங்காரம் இல்லாத புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False