உலகின் பழமையான ராசா மசூதியில் சிவலிங்கம்? – ஃபேஸ்புக் வதந்தி

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

அரபு நாட்டில் உள்ள உலகின் மிகப் பழமையான ராசா மசூதியில் சிவ லிங்கம் உள்ளது என்று ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

இஸ்லாமிய கட்டிடக்கலையில் உருவாக்கப்பட்ட கட்டிடம் ஒன்றில் நந்திகளுக்கு நடுவே சிவலிங்கம் உள்ளது. நிலைத் தகவலில், “உலகின் மிக பழமையான ராசா மசூதி!அரபு நாட்டில் உள்ளது! இதன் சிறப்பம்சம் என்னவென்றால் சிவலிங்கம் மற்றும் இரண்டு நந்திகள் இதில் பொறிக்கப்பட்டுள்ளதுதான்! ஜூம் செய்து பார்க்கவும்!” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை திருமலா திருப்பதி சேவை குழு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sashikala Ramakrishnan‎ என்பவர் 2020 பிப்ரவரி 18ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அரபு நாட்டில் உள்ள மிகப்பழமையான மசூதி என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், இந்த கட்டிடம் பார்க்க மசூதி போல இல்லை. மிகச்சிறிதாக நினைவுச் சின்னம் போல உள்ளது. மேலும், இந்த கட்டிடத்துக்கு பின்னால் மினி வேன் ஒன்றில் மக்கள் தொத்திக்கொண்டு பயணிக்கும் காட்சி தெரிகிறது.

சௌதி அரேபியாவில் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்டில் இப்படி மினி வேனில் மக்கள் தொற்றிக்கொண்டு செல்வார்களா என்று தெரியவில்லை.  மேலும் மிகப் பழமையான மசூதி என்றால் குறைந்தபட்சம் சுற்றிலும் கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள் என்று இருந்திருக்கும். ஆனால் நடுக் காட்டில் உள்ளது போல இது உள்ளது. இவை எல்லாம் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த கட்டிடம் பற்றிய தகவல் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், சமீப காலமாக அரேபியாவில் உள்ள உலகின் மிகப் பழமையான ராசா மசூதி என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது.

உண்மையில் அரபு நாட்டில் ராசா மசூதி என்று உலகின் மிகப்பழமையான மசூதி ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். உலகின் மிகப் பழமையான மசூதிகள் மற்றும் அரபு நாட்டில் உள்ள பழமையான மசூதிகள் பட்டியலை எடுத்து ஆய்வு செய்தோம். ராசா என்ற பெயரில் மசூதியே இல்லை என்பது தெரியவந்தது.

மேலும், உலகின் பழமையான மசூதிகள் எல்லாம் மிகப் பிரம்மாண்டமாக இருந்தன. ஃபேஸ்புக் பதிவில் வெளியான படத்தைப் பார்க்கும் போது அந்த இடத்துக்குள் 5-10 பேருக்கு மேல் தொழுகை செய்ய முடியாது போல இருந்தது.

en.wikipedia.orgArchived Link 1
halaltrip.comArchived Link 2

தொடர்ந்து தேடியபோது இந்த படத்தை டிரிப் அட்வைசர் என்ற இணையதளத்தில் யாரோ பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. டெல்லி – ஆக்ரா சுற்றுலா பேக்கேஜ் என்று இதைக் குறிப்பிட்டிருந்தனர். 2015ம் ஆண்டு இந்த படத்தை அவர்கள் பதிவேற்றம் செய்திருந்ததும் தெரிந்தது. ஆனால் அதில் இந்த படம் எங்கே எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. மற்றபடி இந்த புகைப்படம் வேறு எந்த இடத்திலும் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் Hoax Slayer என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் அரேபியாவில் உள்ள பழமையான மசூதி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் அந்த பதிவில், பிரதமர் நரேந்திர மோடி பின்தொடரும் நபரே இப்படி வதந்தியை பரப்பியது அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தனர்.

Facebook LinkArchived Link

நம்முடைய ஆய்வில்

உலகின் மிகப் பழமையான மசூதிகளில் எதுவும் ராசா என்ற பெயரில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரேபியாவில் உள்ள பழமையான மசூதிகள் எதுவும் இந்த படத்துடன் ஒத்துப்போகவில்லை.

படத்தின் பின்னணியில் மினி வேனில் மக்கள் பயணம் செய்யும் காட்சி தெளிவாகத் தெரிகிறது. அதைப் பார்க்கும்போது வட இந்தியாவில் எங்கோ எடுக்கப்பட்டது போல உள்ளது.

டிரிப் அட்வைசர் இணையதளத்தில் டெல்லி – ஆக்ரா பேக்கேஜ் டூர் என்று குறிப்பிட்ட பதிவில் இந்த படம் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், அரேபியாவில் உள்ள மிகப் பழமையான ராசா மசூதியில் சிவலிங்கம் உள்ளது என்று பகிரப்பட்டுள்ள தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:உலகின் பழமையான ராசா மசூதியில் சிவலிங்கம்? – ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Chendur Pandian 

Result: False