கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததா? - வைரல் ஃபேஸ்புக் வதந்தி
கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நிலத்தடியில் இருந்து நடராஜர் சிலை எடுக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் "கீழடியில் கிடைக்கபெற்ற அம்பலத்தாடும் திருகூத்தர் நடராஜ பெருமான்!!" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Mohan என்பவர் 2020 ஜூன் 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொத்தகை, அகரம், மணலூர் பகுதியில் தற்போது 6வது கட்டமாக அகழாய்வு 2020 மே மாதம் 23ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி சிறிய குவளை, பானைகள், நத்தை ஓடுகள், தங்கக் காசுகள் கிடைத்ததாக செய்தி வெளியானது. இந்த நிலையில் நடராஜர் சிலை கிடைத்ததாக சமூக ஊடகங்களில் பலரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
வீடியோவைப் பார்க்கும்போது அது அகழாய்வு செய்ய தோண்டப்பட்ட குழி போல இல்லை. கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட இடத்திலிருந்து நடராஜர் சிலை எடுக்கப்பட்டது போல, அருகில் போலீசார் எல்லாம் உள்ளனர். கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சிலையை வெளியே எடுத்தது போல உள்ளது. மேலும், குவளை, நாணயம் கிடைத்த போது எல்லாம் அறிவித்த தொல்லியல்துறை, இவ்வளவு பேர் முன்னிலையில், இவ்வளவு பெரிய நடராஜர் சிலை கிடைத்திருந்தால் அதை சொல்லாமல் விட்டிருப்பார்களா என்ற கேள்வி எழுந்தது.
இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. கூகுளில் தேடியபோது எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
இதற்கு முன்பு பூமியிலிருந்து கிடைத்த நடராஜர் சிலை செய்திகளுடன் இந்த படத்தை ஒப்பிட்டுப் பார்த்தோம். 2019ல் அதிராமபுரத்தில் நடராஜர் சிலை கிடைத்ததாக தினத்தந்தி செய்தி கிடைத்தது. ஆனால், இரண்டு சிலையும் வெவ்வேறாக இருந்தது. அதேபோல் காட்டுமன்னார்கோவில், புதுக்கோட்டை என்று பல இடங்களில் நடராஜர் சிலை கிடைத்துள்ளது. அவை எதுவும் இந்த நடராஜர் சிலையுடன் ஒத்துப்போகவில்லை.
ஃபேஸ்புக், யூடியூபில் இந்த வீடியோவை இதற்கு முன்பு யாராவது பகிர்ந்துள்ளார்களா என்று தேடினோம். அப்போது, திண்டுக்கல்லில் கிடைத்ததாகவும், மயிலாடுதுறையில் கிடைத்ததாகவும் சில பதிவுகள் நமக்கு கிடைத்தன. 2020 ஜூன் 18ம் தேதி வெளியாகி இருந்த ஒரு பதிவில் கண்ணத்தங்குடியில் இந்த சிலை கிடைத்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அது தொடர்பாக தேடியபோது வேறு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. கீழடியில் நடராஜர் சிலை கிடைத்தது என்று ஜூன் 22ம் தேதியில் இருந்து பரபப்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாகவே திண்டுக்கல், கண்ணத்தங்குடியில் கிடைத்ததாக பதிவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தேடியபோது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கோவிலுக்கு சுற்றச்சுவர் அமைக்க பள்ளம் தோண்டியபோது ஐந்து அடி நடராஜர் சிலை கிடைத்தது என்று புதிய தலைமுறை வெளியிட்ட வீடியோ கிடைத்தது. அந்த வீடியோவில் உள்ள இடம், நடராஜர் சிலை, சிலையை வெளியே எடுக்கும்போது நிற்கும் காவலர், சட்டை அணியாமல் நீல நிற லுங்கி கட்டிய பெரியவர் என அனைத்தும் பார்க்க ஒரே மாதிரி இருந்தது.
பள்ளத்தில் இருந்து பழைய சிலைகளை எடுத்துக் கொடுக்கும்போது மேலே வெள்ளைச் சட்டை, கண்ணாடி அணிந்த நபர் ஒருவர் வாங்குவதை புதிய தலைமுறை வெளியிட்ட வீடியோவில் காண முடிகிறது. அதே நபர் கீழடியில் எடுக்கப்பட்டது என்று பகிரப்படும் ஃபேஸ்புக் வீடியோவிலும் உள்ளார். எனவே, இந்த வீடியோவை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கலாம் என்று தெரிந்தது.
கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததா என்று தமிழக தொல்லியல் துறையைத் தொடர்புகொண்டு கேட்டோம். இது தொடர்பாக டெக்னிக்கல் டீம்தான் பதில் சொல்ல வேண்டும், எங்களுக்கு இது பற்றி தெரியாது என்றனர். எனவே, தமிழக தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜனைத் தொடர்புகொண்டு கேட்டோம். முழு தகவலை நம்மிடம் பெற்றுக்கொண்ட அவர், விசாரித்து வருவதாக கூறினார்.
அதன்பிறகு அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “இது தவறான தகவல். இந்த வீடியோ கீழடியில் எடுக்கப்பட்டது இல்லை. கீழடியில் எந்த ஒரு மதம் தொடர்பான சின்னமும் கிடைக்கவில்லை. தற்போது ஏழு இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது. அப்படி ஏதாவது கிடைத்தால் கண்டிப்பாக மக்களுக்குச் சொல்வோம்” என்றார்.
நம்முடைய ஆய்வில்,
கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு திருத்துறைப்பூண்டியில் நடராஜர் சிலை கிடைத்தபோது எடுக்கப்பட்ட வீடியோவும், கீழடியில் எடுக்கப்பட்டது என்று பகிரப்படும் வீடியோவும் ஒத்துப்போவது உறுதியாகி உள்ளது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை பலரும் பல இடங்களில் கிடைத்ததாக பதிவிட்டு வருவதை ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளோம்.
தமிழக தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியரான் இந்த தகவலை மறுத்துள்ளார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் கீழடி அகழாய்வின்போது நடராஜர் சிலை கிடைத்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததா? - வைரல் ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False