
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா மகிழ்ச்சியில் பிரதமர் மோடி திளைத்த போது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
மோடி ஹெலிகாப்டரில் இருந்து இங்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தது போது… உலகத்திலேயே நோய் தோற்றுப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இந்தியா.. அதிக உயிரிழப்பு பட்டியலில் மூன்றாம் இடத்தில் இந்தியா. ஆறு மாத காலமாக வேலையில்லாமல் பசி பட்டினியால் இந்திய மக்கள். 40 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 90 ரூபாய்க்கு விற்கும் இந்தியா. மக்கள் சேவைக்கான அனைத்து துறையும் தனியாருக்கு விற்று இந்தியா.. எப்பேர்பட்ட சந்தோஷத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே… இவர்கள் இந்தியாவை ஆள்வது இந்தியாவின் சாபம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை தமிழன் மீம்ஸ் 4.0 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஆகஸ்ட் 5ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்த போது என்று படத்துடன் பதிவிட்டுள்ளனர். நாம் அந்த கருத்துக்குள் செல்லவில்லை. அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. இந்த புகைப்படம் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்தபோது எடுத்ததா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.
கொரோனா பாதிப்பு காரணமாக ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு மக்கள் கூட்டமாக சேர தடை விதிக்கப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த படத்தில் கொரோனா விதிமுறைகளை எல்லாம் மீறி மக்கள் கூடி நின்று வரவேற்றது போல படம் உள்ளது. அதை வைத்து மகிழ்ச்சியில் திளைத்த பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையில் இது எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். முதலில், மோடி அயோத்திக்கு வந்த வீடியோ காட்சிகளைப் பார்த்தோம். அதில் கூட்டம் எதுவும் இல்லை. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட தனக்கு இடப்பட்ட வட்டத்துக்குள் நிற்பதைக் காண முடிந்தது. எனவே, இது பழைய படம் என்பது உறுதியானது.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடியபோது, கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒடிஷாவில் மோடியின் விமானத்தை ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆய்வு செய்தது தொடர்பான செய்தியில் இந்த புகைப்படத்தை வைத்திருப்பதைக் காண முடிந்தது. எனவே, பழைய படத்தை வைத்து இப்போது உள்ளது போல பதிவிட்டிருப்பது தெரிந்தது.
அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5ம் தேதி நடந்தது. மோடி அயோத்திக்கு வந்து சேர்ந்த நேரத்தில் இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு இருந்தது.
சங்கர் என்பவர் இந்த படத்துடன் “கொரொனாவினால் மக்கள் மடிந்து கொண்டிருக்கையில் இப்படி ஒரு கொண்டாட்ட மனநிலை ஒரு சாடிஸ்டுக்கு மட்டுமே வரும்” என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
எனவே, இது அயோத்திக்கு மோடி வந்த படம் என்பது போல பலரும் பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது. இதன் அடிப்படையில் மிஸ்லீடிங் செய்யக்கூடிய படமாக இது உள்ளது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா; மகிழ்ச்சியில் மோடி: புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Misleading
