
‘’அயோத்தி ராமர் கோயில் கட்டுமிடத்தில் தலைமை பூசாரி பலாத்காரம் செய்த காட்சி,’’ என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
ஜூலை 15, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில் ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்து, அதன் மேலே, ‘’இனி ராம பக்தாளிடமிருந்து பெண்களை காப்பாற்றனும் போல, ராமன் என்ன பண்ணானோ அதைத்தான் ராம பக்தாளும் பண்றானுங்க,’’ என்று எழுதியுள்ளனர்.
இப்பதிவில் உள்ள ஸ்கிரின்ஷாட்டை மீண்டும் ஒருமுறை முழுதாக கீழே இணைத்துள்ளோம்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு முதலில் பார்க்க சற்று வேடிக்கையாக இருந்தாலும், அதன் கமெண்ட் பகுதியில் பார்வையிட்டபோது, இது வேண்டுமென்றே அரசியல் ரீதியான பிரசாரம் செய்வதற்காக, உள்நோக்கத்துடன் பகிரப்பட்ட பதிவு என்று தெரியவந்தது.
உண்மையில், இவர்கள் குறிப்பிடும் புகைப்படம், கடந்த சில ஆண்டுகளாகவே, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒன்றாகும்.
இதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இது பல்வேறு மொழிகளில் அரசியல் உள்நோக்கத்துடன் பகிரப்பட்டு வருவதாக தெரியவந்தது.
மேலும், இது ஒரு டிவி சீரியல் தொடர்பான ஷூட்டிங் காட்சியாகும். பலாத்காரம் செய்பவர்கள் யாரும் இப்படி கேமிராமேன், போலீசாரை அருகில் வைத்துக் கொண்டு செய்ய மாட்டார்கள். அதை விட முக்கியமாக, காவி உடை அணிந்தவர்கள் எல்லாம் பாஜகவினர் அல்லது அயோத்தி கோயில் பூசாரி என்று கூறி தகவல் பகிர்வதை இந்திய அளவில் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அப்படி ஆதாரமின்றி பகிரப்பட்ட வதந்திதான் இதுவும்.
இந்தியில் தொடங்கிய இந்த வதந்தி படிப்படியாக பல மொழிகளுக்கு பரவி, தற்போது தமிழை வந்தடைந்துள்ளது.
உண்மைச் செய்தி என்னவெனில், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தியில் உள்ள ஒரு கோயிலின் தலைமை பூசாரி கிருஷ்ண கந்தாச்சாரியா என்பவர், பல நாட்களாக, பெண் ஒருவரை கோயில் வளாகத்தில் வைத்து பலாத்காரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி அப்போதே பல ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.
எனவே, 2019ம் ஆண்டில் அயோத்தியில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரியும் தலைமை பூசாரி பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட செய்தியை வைத்துக் கொண்டு, தவறான புகைப்படத்தை இணைத்து பகிர தொடங்கியுள்ளனர். பிறகு, அந்த சம்பவம் அயோத்தியில் தற்போது கட்டப்படும் ‘ராமர் கோயில் வளாகத்திலேயே நடந்தது’ என வதந்தியில் கூடுதல் கதை சேர்த்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவைக் கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Title:அயோத்தி ராமர் கோயில் கட்டும் இடத்தில் தலைமை பூசாரி பலாத்காரம் செய்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
