
ஊடகங்கள் நடுநிலை தவறி நடப்பதாக பேச்சு அடிபடுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று வாசகர்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அது பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

ஸ்டாலின் ட்வீட் செய்தது போன்ற ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “சில நாட்களாக சமூக வலைதளங்களில், ஊடகங்கள் நடுநிலை தவறி நடப்பதாக பேச்சு அடிப்படுகிறது. இந்நிலையில் தமிழ் நாட்டிலேயே கலைஞர் தொலைக்காட்சி தான் நடுநிலை தவறாமல் நடக்கிறது என்று பெரும்பாலான மக்கள் பாராட்டுகின்றனர். இது திமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை தமிழக இந்துக்கள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் குமார் என்பவர் 2020 ஜூலை 16ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் “மு.க.ஸ்டாலின்” பெயரில் பல போலியான ட்வீட் அக்கவுண்ட் வைத்து தொடர்ந்து ஸ்டாலின் கூறியதாக அவதூறான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதை ஸ்டாலின் கூறியதாக நினைத்து அவரது எதிர்ப்பாளர்கள் மிகப்பெரிய அளவில் பரப்புகின்றனர். அந்த வகையில் இதுவும் ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு இல்லை. இருந்தாலும் ஸ்டாலின் ஊடகங்களை விமர்சித்து, தான் நடத்தும் கலைஞர் தொலைக்காட்சி மட்டுமே நடுநிலையோடு இருப்பதாகக் கூறியதாக பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

ஸ்டாலின் ட்விட்டர் அக்கவுண்ட் ட்விட்டர் நிறுவனத்தால் வெரிஃபைடு செய்யப்பட்டதாகும். அதன் முகவரி @mkstalin. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்விட்டர் அக்கவுண்டின் பெயர் M.K.Stalin தான். ஆனால் இது வெரிஃபைடு செய்யப்பட்ட அக்கவுண்ட் இல்லை. மேலும் இதன் முகவரி @Sudalaii12.

இந்த முகவரியை எல்லாம் சரி பார்க்கத் தெரியாத பலரும் மு.க.ஸ்டாலின் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பார்த்து இது ஸ்டாலின் வெளியிட்ட பதிவு என்று கருதி அதிக அளவில் ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது. இந்த பக்கம் பற்றிய குறிப்பில் போலியான ஐ.டி, வேடிக்கைக்காக என குறிப்பிடப்பட்டு இருந்தது. இவர் வேடிக்கைக்காக பதிவிடும் பதிவுகளை பலரும் உண்மை என்று பரப்பி வருகின்றனர் என்பது வேதனையைத் தருகிறது.

போலியான ட்விட்டர் அக்கவுண்டை ஆய்வு செய்தபோது, ஸ்டாலினை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் விஷமத்தனமான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதைக் காண முடிந்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இருந்த ட்வீட்டும் இருந்தது.

மேலும், இந்த ட்விட்டர் அக்கவுண்டில் வெளியாகும் பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை மு.க.ஸ்டாலின் கூறியது போன்று பல்வேறு பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது.

நம்முடைய ஆய்வில், இந்த ட்வீட் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலினை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கில் வேடிக்கைக்காக பதிவிடுகிறேன் என்று யாரோ ஒருவர் பதிவிடுவதை, உண்மையான பதிவு என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடியது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஊடகங்கள் நடுநிலை தவறி நடக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் போலி ட்வீட்!
Fact Check By: Chendur PandianResult: False
