
‘’சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்தபோது எடுத்த புகைப்படம்,’’ எனக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
செப்டம்பர் 29, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், பணம், நகைகள் நிறைந்து கிடக்கும் புகைப்படம் ஒன்றை இணைத்து, அதன் மேலே, ‘’ சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் நகைகள் என அப்போது கைப்பற்றியவர்களே வெளியிட்ட புகைப்படம் இது. இப்போது இது ஆதாரமாக இல்லையாம். அப்படி என்றால் ஆதாரம் எங்கே..? காக்கா தூக்கிகிட்டு போயிடுச்சு..!,’’ என எழுதப்பட்டுள்ளது.
இதனைப் பலர் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரங்களில் ஒன்று சேகர் ரெட்டி என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு மற்றும் அவருக்கு பல முக்கிய பிரமுகர்களுடன் உள்ள தொடர்பு பற்றிய விவரங்களும் ஒன்றாகும்.
இந்த விவகாரத்தில் அவர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் உள்ளிட்டவை முறைகேடான வழியில் சேர்க்கப்பட்டவை என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி செப்டம்பர் 28, 2020 அன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டது.
இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை பகிர்ந்து, விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் மேலே நாம் கண்ட புகைப்பட பதிவும்.
அதில், சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தியபோது பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகளின் புகைப்படம் இது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலமாக, இந்த புகைப்படம் சேகர் ரெட்டியின் வீட்டில் எடுக்கப்பட்ட ஒன்று என தெளிவாக அடையாளப்படுத்துகின்றனர்.
உண்மையில், இது சேகர் ரெட்டி வீட்டில் நடந்த ரெய்டின்போது எடுத்த புகைப்படம் கிடையாது. கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது.
ஆனால், அதே காலக்கட்டத்தில் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் சிபிஐ தரப்பினர் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத பணம், நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். ஏனெனில், அப்போது, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாகவே, சேகர் ரெட்டி வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதேபோல, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஹவாலா டீலர் ஒருவரின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அங்கே பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகள் உள்ளிட்டவற்றின் புகைப்படம்தான் மேலே நாம் காண்பது…
இதுதொடர்பான வீடியோ ஆதாரத்தையும் கீழே இணைத்துள்ளோம்.
மேலும், சேகர் ரெட்டி வீட்டில் நிகழ்ந்த ரெய்டின்போது எடுத்த காட்சிகளையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
எனவே, வேறு ஒரு ரெய்டில் எடுத்த புகைப்படத்தை சேகர் ரெட்டியுடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படம் தவறான ஒன்று என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்ட போது எடுத்த புகைப்படம் இதுவா?
Fact Check By: Pankaj IyerResult: False
