அயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்கப் போகும் ஸ்ரீரங்கப்பட்டினம்?

அரசியல் சமூக ஊடகம்

அயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்க போகும் ஸ்ரீரங்கப்பட்டினம் திப்பு சுல்தான் கட்டிய மசூதி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

TIPU SULTAN 2.png
Facebook Link 1Archived Link 1
Facebook Link 2Archived Link 2

மசூதி ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மூளைக்கல்லில் முகம் போன்ற உருவம் தெரிகிறது. அந்த பகுதி மட்டும் காவி நிறத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தான் கட்டியதாக ஜமாத்தின் சுற்றுச்சுவர் வேறு கதையைச் சொல்கின்றன. சுற்று சுவர் மதிலில் சிவன் உருவம் பதித்த கற்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சுவர் மேலே நமது இந்து கோயில்களில் கற்கள் எப்படி பதிக்கப்பட்டுள்ளதோ, அதே போன்று உள்ளது கோயிலை இடித்து தரைமட்டமாக்கி சுற்றுச்சுவர் மேலே மசூதி கட்டியுள்ளனர். அயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்க போகும் ஸ்ரீரங்கப்பட்டினம். இந்து மதத்தைக் காப்போம் இந்து ஆலயங்களை மீட்போம்!” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Ponni Ravi என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அக்டோபர் 20, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இவரைப் போல, Namhindu – நாம் இந்து என்ற ஃபேஸ்புக் பக்கம் உள்ளிட்ட பலரும் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணை முடிந்து தீர்ப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அயோத்திக்குப் பிறகு சர்ச்சையை எதிர்நோக்கி காத்திருக்கும் ஶ்ரீரங்கபட்டினம் திப்பு சுல்தான் கட்டிய மசூதி என்று குறிப்பிட்டுள்ளனர். இரு தரப்பினர் இடையே எப்போதும் பிரச்னை இருந்துகொண்டே இருக்க வேண்டும்… பிரச்னை செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே பதிவிட்டது போல உள்ளது. 

கர்நாடக மாநிலம் ஶ்ரீரங்கபட்டினத்தில் திப்புசுல்தான் கட்டிய மிகப்பெரிய மசூதி ஒன்று உள்ளது. இந்து- இஸ்லாமிய கலவையிலான கட்டிடக்கலையில் இந்த மசூதி கட்டப்பட்டது என்று கூறுவார்கள். ஆனால் தற்போது தீவிர வலதுசாரிகள் இந்து கோவிலை அழித்துவிட்டு இந்த மசூதி கட்டப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக மசூதியில் தூண்கள் போன்ற அமைப்பைக் குறிப்பிடுகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். 

TIPU SULTAN 3.png
Search Link

இந்து கோவிலை இடித்து ஶ்ரீரங்கபட்டனம் ஜமா மசூதி கட்டப்பட்டதா என்று கூகுளில் தேடியபோது, “திப்பு சுல்தான் இந்து கோவில்களை இடித்தார் என்கின்றனர். ஶ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ஶ்ரீரங்கநாதஸ்வாமி கோவிலை மட்டும் இடிக்க மறந்துவிட்டாரா” என்று பி.பி.சி வெளியிட்ட கட்டுரை மற்றும் “கோவில் கோபுரம் போன்ற தோற்றத்துடன் கூடிய மசூதி” என்று என்பது உள்பட பல பதிவுகள் நமக்கு கிடைத்தது. பி.பி.சி வெளியிட்டிருந்த செய்தி சிந்திக்கத் தூண்டும் வகையில் இருந்தது. கோவிலுக்கும் மசூதிக்குமான தொலைவு ஒன்றரை கிலோ மீட்டருக்குள்ளாகத்தான் உள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் கட்டுரையாளர் எழுப்பிய கேள்வி நியாயமானதாகவே இருந்தது. 

BBC TamilArchived Link 1
itslife.inArchived Link 2

itslife.in என்ற இணையதளம் வெளியிட்டிருந்த செய்தியில், இந்த மசூதி 1784ல் கட்டப்பட்டது என்றும், இந்து மற்றும் இஸ்லாமிய கட்டிடக் கலையில் இது உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டு இருந்தனர். 

வேறு ஆதாரங்கள், புகைப்படங்கள் நமக்கு கிடைக்கிறதா என்று தேடினோம். அப்போது டிரிப்அட்வைசர் என்ற இணையதளத்தில் பார்வையாளர் ஒருவர் பகிர்ந்திருந்த படங்கள் நமக்கு கிடைத்தன. அதில் ஒரு படத்தில் ஆர்க்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இந்த மசூதி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தனர். மசூதி பற்றி இந்திய தொல்லியல் துறை வெளியிட்டிருந்த குறிப்பில் இந்த மசூதி 1787ம் ஆண்டு திப்பு சுல்தானால் கட்டப்பட்டது என்றும், இந்து இஸ்லாமிய கட்டிடக்கலை அடிப்படையில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

TIPU SULTAN 4.png
tripadvisor.inArchived Link

இந்திய தொல்பொருள் துறை பெங்களூரு பிரிவு இணையதளத்தில் இந்த மசூதி பற்றி குறிப்பிட்டுள்ளனர். அதில் கூட இந்திய – இஸ்லாமிய கட்டிடக்கலை என்றே குறிப்பிட்டுள்ளனர். இந்து கோவிலை இடித்துவிட்டு இந்த மசூதி கட்டப்பட்டது தொடர்பாக யாராவது கருத்து தெரிவித்துள்ளார்களா என்று தேடினோம். ஆனால், அதுபோல் எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

asibengalurucircle.inArchived Link

நம்முடைய ஆய்வில்,

ஶ்ரீரங்கபட்டினத்தில் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட மசூதி இந்து – இஸ்லாம் கட்டிடக் கலையின் கலவை என்று இந்திய தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது.

ஶ்ரீரங்கபட்டினத்தில் உள்ள இந்து கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

மசூதிக்கு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் மிக பழமையான ஶ்ரீரங்கநாதர் ஆலயம் உள்ளது. திப்பு சுல்தான் கோவில்களை எல்லாம் இடித்தார் என்று கூறினால் உலக புகழ்பெற்ற இந்த கோவில் மட்டும் தப்பியது எப்படி என்று பிபிசி வெளியிட்டுள்ள கட்டுரை நமக்கு கிடைத்துள்ளது.

தொடர்ந்து இரு தரப்பினர் இடையே பதற்றம், பிரச்னையை உருவாக்கும் வகையில் தொடர்ந்து பதிவுகள் இடப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவாளர் தன்னுடைய நிலைத் தகவலில், அயோத்திக்குப் பிறகு திப்பு சுல்தான் மசூதி பிரச்னை பெரிதாகும் என்று கூறியிருப்பது இரு பிரிவினர் இடையே பிரச்னை ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் விஷமத்தனமாக இந்த பதிவை வெளியிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஶ்ரீரங்கபட்டினத்தில் இந்து கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் திப்பு சுல்தான் மசூதி கட்டியுள்ளார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்கப் போகும் ஸ்ரீரங்கப்பட்டினம்?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •