
10 ரூபாய் நாணயத்தை வாங்காதீர் என்றும், பிறகு வாங்குங்கள் என்றும் திருப்பூர் போக்குவரத்து பணிமனை நடத்துனர்களுக்கு மாறி மாறி சுற்றறிக்கை விட்டதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.
தகவலின் விவரம்:

புதிய தலைமுறை இணையதளம் ஜூன் 23ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதுபற்றி அந்த இணையதளம் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியில், ஜூன் 21ம் தேதியன்று, 10 ரூபாய் நாணயங்களை பயணிகளிடம் இருந்து பெறவேண்டாம் என்று கூறி, நடத்துனர்களுக்காக, சுற்றறிக்கை ஒன்றை, திருப்பூர் போக்குவரத்து பணிமனை வெளியிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை பொதுமக்களை பீதியில் ஆழ்த்திய காரணத்தால், இதுபற்றி மறுவிளக்கம் அளித்துள்ள திருப்பூர் போக்குவரத்து பணிமனை, இந்த உத்தரவை வாபஸ் பெறுவதாக, மறு விளக்கம் ஒன்றும் அளித்துள்ளதாக, செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, திருப்பூர் போக்குவரத்து பணிமனை ஏதேனும் சர்ச்சை செய்ததா என கூகுளில் ஆதாரம் தேடினோம். அப்போது 10 ரூபாய் நாணய சர்ச்சை பற்றி தெரியவந்தது.

அதாவது, 10 ரூபாய் நாணயங்களை வங்கியில் சமர்ப்பிக்கும்போது சிக்கல் ஏற்படுவதாகவும், இதன்பேரில், பயணிகளிடம் இருந்து 10 ரூபாய் நாணயம் வாங்க வேண்டாம் எனவும் திருப்பூர் போக்குவரத்து பணிமனை ஜூன் 21ம் தேதியன்று சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இதற்கு பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்தனர். இதையடுத்து, இந்த சுற்றறிக்கையை திருப்பூர் போக்குவரத்து பணிமனை திரும்ப பெற்றுள்ளது. பொதுமக்களிடையே வீண் வதந்தி பரவுவதை தடுக்கும் நோக்கில், இம்முடிவை மேற்கொள்வதாக, திருப்பூர் போக்குவரத்து பணிமனை மேலாளர் தனபால் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்திதான் மேற்கண்ட புதியதலைமுறை ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ளது. இது உண்மைச் செய்திதான்.
இதுபற்றி விகடன் இணையதளம் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அத்துடன், 10 ரூபாய் நாணயம் தொடர்பான சர்ச்சை, கடந்த 2011 முதலே பரவி வருகிறது. இதன்பேரில், ரிசர்வ் வங்கியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று சொல்வது குற்றச் செயல் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
இதுபற்றி ரிசர்வ் வங்கி, கடந்த 2018, ஜனவரி 17 அன்று வெளியிட்ட அறிக்கையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதொடர்பாக, தி இந்து தமிழ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, நாட்டில் புதுப்புது வதந்திகளை சமூக விரோதிகள் பரப்பி வருகின்றனர். அதில் ஒன்றுதான் இந்த 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்தியும். இதனை அரசுப் போக்குவரத்துக் கழகமே நம்பியதுதான் இதில் வேதனையான விசயம்.
எனவே, இந்த செய்தியை படிக்கும் நமது வாசகர்கள், 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று யாரும் சொன்னால், அதை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட செய்தி உண்மைதான். முதலில், 10 ரூபாய் நாணயம் வாங்காதீர் என சுற்றறிக்கை வெளியிட்ட திருப்பூர் போக்குவரத்து பணிமனை பின்னர் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து, அந்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளதாக, தெரியவருகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட பதிவு உண்மைதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கை சார்ந்த செய்தி என்பதால் பலராலும் வைரலாக இது ஷேர் செய்யப்படுவதை உணர முடிகிறது.

Title:திருப்பூர் போக்குவரத்து பணிமனையில் நடந்த 10 ரூபாய் நாணய சர்ச்சை
Fact Check By: Parthiban SResult: True
