
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாத்திமா பாபு வரும் காட்சியை தன்னுடைய பேரன் – பேத்திகளுடன் மு.க.ஸ்டாலின் பார்த்தது போன்று ஒரு படம் ஃபேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I Archived Link
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய பேரன் – பேத்திகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது போன்று படத்தை பகிர்ந்துள்ளனர். டி.வி-யில் பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு வரும் காட்சி உள்ளது. நிலைத் தகவலில் மு.க.ஸ்டாலின் தன்னுடைய பேரன் – பேத்திகளுடன் பேசுவது போன்று உரையாடலை வெளியிட்டுள்ளனர்.
அதில், “அடேய் பேராண்டிகளா இதான்டா உங்க #சின்னாயா. இதுக்குதான் பிக்பாஸ்ல எல்லாரும் ஓட்டு போடனும் சரியா…
பேராண்டிகள் பேத்திகள்: சரி தாத்தா” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மூலம், மு.க.ஸ்டாலினுக்கும் பாத்திமா பாபுவுக்கும் ரகசிய தொடர்பு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர். இந்த பதிவை, DMK Fails என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூன் 23ம் தேதி வெளியிட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிக் பாஸ் நிகழ்ச்சியை மு.க.ஸ்டாலின் பார்ப்பது போன்ற புகைப்படத்தை பார்க்கும்போதே இது மார்ஃபிங் செய்யப்பட்டது என்று தெரிந்தது. புகைப்படத்தில் உள்ள தொலைக்காட்சியின் படம் தொலைக்காட்சியைத் தாண்டியும் தெரிந்தது. சரியாக ஃபோட்டோ எடிட் கூட செய்யத் தெரியவில்லை என்பது தெரிந்தது.

உண்மைப் படத்தைக் கண்டறிய, yandex.com-ல் இந்த படத்தை பதிவேற்றித் தேடினோம். அப்போது, அசல் படம் கிடைத்தது.

2017ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றை மு.க.ஸ்டாலின் தன்னுடைய பேரன் பேத்திகளுடன் அமர்ந்து பார்த்தார் என்று படம் மற்றும் செய்தி வெளியாகி இருந்தது. அந்த படத்தை எடுத்து மார்ஃபிங் செய்து தவறாக வெளியிட்டுள்ளது உறுதியானது. இது தொடர்பான செய்தி மற்றும் படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த பதிவுக்கு கமெண்ட் செய்த பலரும் இது தவறான செய்தி என்று குறிப்பிட்டிருந்தனர். இருப்பினும் தவறை திருத்திக்கொள்ள மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டவர் முன்வரவில்லை. ஆதாரத்துடன் தவறு என்ற கமெண்ட்கள் மட்டும் சிறிது நேரத்தில் காணாமல் போயின.

DMK Fails பக்கத்தை பார்த்தபோது, ஃபோட்டோ ஷாப் செய்வதை விட, மு.க.ஸ்டாலினைப் பற்றி அவதூறு பரப்ப வேண்டும் என்பதுதான் இந்த பக்கத்தின் நோக்கம் என்பது புரிந்தது. மு.க.ஸ்டாலின் – பாத்திமா பாபு இடையே தொடர்பு இருப்பது போன்று பல பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டிருந்தது தெரிந்தது.
இந்த வதந்தியின் பின்னணி தொடர்பாக நம்முடைய தமிழ் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
30 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை மு.க.ஸ்டாலின் கடத்திவிட்டதாக வதந்தி பரவியது. 1989ம் ஆண்டிலேயே மு.க.ஸ்டாலினும் பாத்திமா பாபுவும் இந்த தகவலை மறுத்தனர். ஆனாலும் தொடர்ந்து இந்த வதந்தி மட்டும் பரவிக்கொண்டே இருந்தது.
கடைசியில் கடந்த ஆண்டு பாத்திமா பாபு இது பற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட விளக்கத்தை அளித்திருந்தார். எத்தனை முறைதான் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று விளக்கம் அளிப்பதோ தெரியவில்லை. இனி இது தொடர்பாக நான் பேசப்போவது இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக தினமணி நாளிதழில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்று தெரிந்தது.
மு.க.ஸ்டாலின் தன்னுடைய பேரன் – பேத்திகளுடன் கிரிக்கெட் பார்த்த படம் கிடைத்துள்ளது.
மு.க.ஸ்டாலினுக்கும் பாத்திமா பாபுவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று இரு தரப்பினரும் விளக்கம் அளித்த ஆதாரம் கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்த மு.க.ஸ்டாலின்! – ஃபேஸ்புக் போட்டோ உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: False
