கோவை கிரைண்டருக்கு 18 சதவீதம், குஜராத் கிரைண்டருக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறதா?

இந்தியா வர்த்தகம்

‘’கோவை கிரைண்டருக்கு 18 சதவீதம், குஜராத் கிரைண்டருக்கு 5 சதவீதம்,’’ என்று ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Anwar Sadhath என்பவர் ஆகஸ்ட் 20, 2019 இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’கோவை கிரைண்டருக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி, குஜராத் கிரைண்டருக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி, இதுதான் ஒரே நாடு, ஒரே வரி,’’ என்று இதற்கு முன் ஒருவர் பகிர்ந்த பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இங்கே இணைத்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது உண்மையா என்ற சந்தேகத்தில் குறிப்பிட்ட பதிவின் கமெண்ட்களை ஒருமுறை விரிவாகப் படித்து பார்த்தோம். அதில் ஒருவர், ‘’இது தவறான தகவல், கிரைண்டருக்கு இந்தியா முழுக்க ஒரே மாதிரியாக, 12 சதவீத ஜிஎஸ்டி வரியே தற்போது வசூலிக்கப்படுகிறது,’’ என்று கூறியிருந்தார். 

இதன்பேரில் தகவல் ஆதாரம் தேடிப் பார்த்தோம். அப்போது, இவர்கள் கூறுவது போல கிரைண்டருக்கு இத்தகைய பாரபட்சமான வரி எதுவும் கிடையாது என தெரியவந்தது. முதன்முதலில் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டபோது, கிரைண்டர் உற்பத்தி உள்ளிட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோருக்கு அதிகபட்ச வரி விதிக்கப்பட்டதாகவும், பிறகு அவர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டில், இவற்றுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து, 12 சதவீதமாக திருத்தி அமைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே மற்றும் இங்கே கிளிக் செய்யவும்.

இதன்பேரில், மத்திய அரசு சார்பாக, ஏதேனும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதா என ஆதாரம் தேடினோம். அப்போது CBIC எனப்படும் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம், நிதித்துறை அமைச்சகம், வருவாய் துறை மற்றும் இந்திய அரசு சார்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக வெளியிடப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு கையேடு விவரம் கிடைத்தது. அதனை முழுதாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த பிடிஎஃப் ஆவணத்தின் 41வது பக்கத்தில், கிரைண்டர்களுக்கு எத்தகைய வரி வசூலிக்கப்படுகிறது என விவரம் தரப்பட்டுள்ளது. 

இதன்படி, கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக திருத்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது. நாடு முழுவதும் ஒரே ஜிஎஸ்டி வரி விதிப்புதான் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதேசமயம், இதில் சில விதிவிலக்குகள் உண்டு. குறு தொழில் நிறுவனங்களின் ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு உள்ளாகவும், சிறு தொழில் நிறுவனங்களின் ஆண்டு வருமானம் ரூ.75 கோடிக்கு உள்ளாகவும், நடுத்தர தொழில் நிறுவனங்களின் வருமானம் ரூ.250 கோடிக்கு உள்ளாகவும் இருக்க வேண்டும். இதன் கீழ் வரும் கிரைண்டர் (அல்லது வேறு ஏதேனும்) தயாரிப்பு நிறுவனங்களுக்குத்தான் மேலே கூறியுள்ளது போல, 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு கட்டாயமாகும்.

இந்த விவரம் குறிப்பிட்ட கையேடு அறிக்கையின் 9வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு உள்ளாக, அல்லது 10 லட்சம் முதல் 40 லட்சம் வரை இருக்கும் கிரைண்டர் அல்லது வேறு ஏதேனும் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு, இந்த 12 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய தேவையில்லை. அத்தகைய தொழில் நிறுவனங்கள் தமிழகம், குஜராத் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கிருந்து இயங்கினாலும் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய தேவையில்லை. இது மேற்குறிப்பிட்ட கையேட்டின் 12வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கிரைண்டர் நிறுவனங்களுக்கு நாடு முழுவதும் ஒரே ஜிஎஸ்டி வரிதான் வசூலிக்கப்படுகிறது. கிரைண்டர் தயாரிப்பு உள்ளிட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அவர்களின் ஆண்டு வருமான அடிப்படையில், ஜிஎஸ்டி வரி விதிப்பில் சில வித சலுகைகள் தரப்பட்டுள்ளன.

எனவே, குஜராத் கிரைண்டர் நிறுவனங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி, கோவையை சேர்ந்த கிரைண்டர் நிறுவனங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி என்ற தகவலில் உண்மையில்லை என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கோவை கிரைண்டருக்கு 18 சதவீதம், குஜராத் கிரைண்டருக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •