ஒரு லட்சம் மரக்கன்று நட ரூ.198 கோடியா? – அதிர்ச்சி ஏற்படுத்திய செய்தி

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

தமிழகத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் மெகா திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.198 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக செய்தி மற்றும் மீம்ஸ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Thanthi TV 2.png

Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2

தந்தி டி.வியின் ஃபேஸ்புக் பக்கத்தில், “ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் மெகா திட்டம்: ரூ.198 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் 71 லட்சம் மரக் கன்றுகள் நடும் மெகா திட்டம் என்று இருந்தது. தந்தி டி.வி செய்தி லிங்க்கை இதனுடன் வெளியிட்டுள்ளனர். 

செப்டம்பர் 9ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஒரு லட்சம் மரக் கன்றுகளை நட ரூ.198 கோடி என்றால், ஒரு மரக் கன்றை நடுவதற்கான செலவு ரூ.19,800 என்று வருகிறது. இவ்வளவு செலவில் மரக் கன்று நடப்படும் என்று அரசு அறிவிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.இந்த பதிவுக்கு பலரும் கமெண்ட் செய்திருந்தனர். அத்தனைபேரும், தமிழக அரசு மிகப்பெரிய ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இருந்தனர்.

Thanthi TV 3.png

இது தொடர்பாக தேடியபோது, சமூக ஊடகங்களில் இந்த செய்தியை அடிப்படையாக வைத்து மீம்ஸ் உருவாக்கப்பட்டது தெரிந்தது. மரம் நடும் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது போல அதில் குறிப்பிட்டு இருந்தனர். அதற்கும் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

Thanthi TV 4.png

Facebook Link I Archived Link

தந்தி டி.வி வெளியிட்ட செய்தியைப் படித்துப் பார்த்தோம். செய்தியின் உள்ளே 71 லட்சம் மரக் கன்றுகள் நடும் மெகா திட்டத்துக்கு ரூ.198 கோடி ஒதுக்கீடு என்று லீடில் குறிப்பிட்டு இருந்தனர்.

Thanthi TV 5.png

முதல் கட்டமாக ஒரு லட்சம் மரக் கன்றுகள் தயாரிக்கிறார்களா, தலைப்பில் ஏன் ஒரு லட்சம் மரக்கன்று நடும் மெகா திட்டம் என்று குறிப்பிட்டுள்ளனர் என்று அறிய முழு செய்தியையும் படித்தோம்.

“மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 64 லட்சம் மரக்கன்றுகளும், வனத்துறை சார்பில் 7 லட்சம் மரக்கன்றுகளும் நட்டு அதனைப் பராமரித்திட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 198 கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

71 லட்சம் மரக்கன்றுகள் நட என்று திருத்தி கூகுளில் தேடியபோது, இது தொடர்பாக தினத்தந்தி, மாலைமலர் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியிட்டது நமக்குக் கிடைத்தது. அவை அனைத்திலும் 71 லட்சம் மரக் கன்றுகள் என்று தெளிவாகவே இருந்தன.

தினத்தந்தி

மாலைமலர்

ஸீ தமிழ்

நியூஸ் ஜெ

இதன் மூலம், 71 லட்சம் என்று தலைப்பிடுவதற்கு பதில், 1 லட்சம் என்று தவறாக தலைப்பிட்டுள்ளது புரிந்தது. இது சாதாரண எழுத்துப் பிழை என்று விட்டுவிட முடியவில்லை. ஒரு லட்ச மரக் கன்று ரூ.198 கோடி செலவில் நடப்பட உள்ளது என்ற தகவல் மிகப்பெரிய ஊழல் என்பது போல பலராலும் விமர்சிக்கப்பட்டு வருவதைக் காண முடிந்தது. நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், தவறான தலைப்பு காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு மற்றும் செய்தியின் தலைப்பில் தவறு உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஒரு லட்சம் மரக்கன்று நட ரூ.198 கோடியா? – அதிர்ச்சி ஏற்படுத்திய செய்தி

Fact Check By: Chendur Pandian 

Result: False Headline