வெட்கமற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா: ஃபேஸ்புக் வைரல் வீடியோ உண்மையா?

அரசியல் உலக செய்திகள்

‘’வெட்கமற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்த ஐநா சபை,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Fathima Safiyyah  என்பவர் இந்த பதிவை செப்டம்பர் 3, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், பொதுமக்களை போலீசார் மற்றும் ஆர்மி அதிகாரிகள் தாக்கும் வீடியோவை இணைத்து, அதன் கீழே,’’ “Shameful Nations” வெட்கக்கேடான நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்த UN கவுன்சில் – The Wire செய்தி. 50 வருட காங்கிரஸ் செய்ய முடியாததை மோடி RSS பி ஜே பி செய்தார்கள் என மார்தட்டிய முட்டாப்பசங்களுக்கு வாழ்த்துக்கள்..,’’ என்று எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
முதலில் இவர்கள் கூறுவது போல, ஷேம்ஃபுல் நாடுகள் பட்டியலில் இந்தியாவை ஐநா சபை இணைத்துள்ளதா என விவரம் தேடினோம். அப்போது, மனித உரிமை மீறல்கள், குற்றங்கள் அதிகளவில் நடக்கும் நாடுகள் எனக் கூறி, இந்தியா உள்பட 38 நாடுகளை ஐநா சபை பட்டியலிட்ட விவரம் கிடைத்தது. இது 2018ம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவமாகும். இதுபற்றி The Wire வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மேற்கண்ட செய்தி உண்மைதான் என்றாலும் அதில் உள்ள வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். முதலில், வீடியோ தொடக்கத்தில் வரும் காட்சியில் Abdul Ghaffar from Minhaj Ambulance என ஒருவரின் பெயர் காட்டப்படுகிறது. இதேபோல, 2வதாக Zulfiqar Butt என ஒருவரின் பெயர் வருகிறது. இவற்றை ஆதாரமாக வைத்து தேடியபோது, இது பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் நிகழ்ந்த சம்பவம் என விவரம் கிடைத்தது.

2014 Lahore Massacre: Killing the unarmed PAT workers என்ற தலைப்பில் யூ ட்யூப்பில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் இருந்து சில காட்சிகளை வெட்டியெடுத்து, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். அதாவது, பாகிஸ்தானில் நிகழ்ந்த சம்பவத்தை, இந்தியாவில் நடந்தது போல சித்தரித்துள்ளனர். இந்த வீடியோவின் முழு ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதன் 9.07வது நிமிடம் முதலாக, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள வீடியோ காட்சிகள் அப்படியே வருவதைக் காணலாம்.

இதுபற்றி ஏற்கனவே பிற மொழிகளில் பரவிய வதந்தியை Facthunt இணையதளம் விரிவாக ஆய்வு செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பாகிஸ்தான் நிகழ்ந்த பழைய வீடியோ காட்சியை தொகுத்து, இந்தியாவில் நிகழ்ந்ததுபோல தவறாக சித்தரித்துள்ளனர் என தெளிவாகிறது. அத்துடன், 2018ல் இந்தியாவை Shameful நாடுகள் பட்டியலில் ஐநா சேர்த்ததை 2019ல் நிகழ்ந்தது போலவும் எழுதியுள்ளனர்.

எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தவறான தகவல் உள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வெட்கமற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா: ஃபேஸ்புக் வைரல் வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •