நேருவின் முகத்தில் ஸ்வாமி வித்யானந்த் விதே அறைந்தார் என்றும் அவருக்கு பதிலடி கொடுக்க வந்த நேருவை பின்னல் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள் என்றும் படத்துடன் கூடிய ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

நேருவை யாரோ பின்னால் இழுக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், "இந்த பதிவை படிச்சதும் அம்புட்டு சந்தோஷம் எனக்கு! நீங்களும் அனுபவிங்க! நேருவின் முகத்தில் ஸ்வாமி வித்யானந்த் விதே கொடுத்த அறை...1962. ஒருமுறை நேரு தனது உரையில் ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த அகதிகள் என்று கூறினார். தலைமை விருந்தினராக வந்திருந்த ஸ்வாமிஜி உடனே எழுந்து மேடைக்குச் சென்று நேருவை பளாரென அறைந்து, மைக்கை அவரிடமிருந்து இழுத்து, ஆரியர்கள் ...அவர்கள் அகதிகள் அல்ல எம் மூதாதையர்கள் மற்றும் அவர்களே பாரதத்தின் உண்மையான குடியிருப்பாளர்கள்.

ஆனால் உங்கள் (நேருவின் மூதாதையர்கள்) அரேபிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், உங்கள் நரம்புகளில் அரபு ரத்தம் பாய்கிறது, எனவே நீங்கள்தான் உண்மையில் இந்த பெரிய நாட்டின். உண்மையான குடியிருப்பாளர்கள் அல்ல ... உங்களுக்ககு பதிலாக சர்தார் படேல் பிரதமராக இருந்தால், நாங்கள் இப்படிப்பட்ட துர்பாக்கிய நிலையில் இருந்திருக்க மாட்டோம் " என ஆவேசமாக பேசினார். படம்: நேரு பதிலடி கொடுக்க வந்தவரை பின்னிருந்து இழுத்தனர் சிலர்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது, பிரதமர் நேருவை சாமியார் ஒருவர் அறைந்துவிட்டதாகவும், அதற்கு பதிலடி கொடுக்க முயன்ற நேருவை தடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Ramaprabha Rajagopalan என்பவர் 2020 ஜனவரி 17ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீப காலமாக எதற்கெடுத்தாலும் நேருதான் காரணம் என்று கூறும் போக்கு அதிகரித்துவிட்டது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் நேரு பற்றிய தவறான பதிவுகள் நிறைய சமூக ஊடகங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பரப்பப்படுகின்றன. நேரு பிரதமராக பதவியேற்றபோது சிறுமி இந்திரா காந்தி கை பிடித்து இழுத்து தேச பக்தர் ஒருவர் சீண்டினார் என்றும் கொந்தளித்த நேருவிடம் இளைஞர் ஒருவர் வீர வசனம் பேசியதாகவும் ஒரு பதிவு சில மாதங்களுக்கு முன்பு பகிரப்பட்டது. அதன் பிறகு, நேருவுக்கும் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தபோது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டனின் மனைவி எட்வினாவுக்கும் தொடர்பு இருந்ததாக ஒரு பதிவு பரப்பப்பட்டது. இவை அனைத்தும் தவறானவை என்று அவ்வப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டு வருகிறது.

இந்திரா காந்தியின் கையைப் பிடித்து சீண்டிய தேசபக்தர்
எட்வினாவுடன் ஜவஹர்லால் நேரு நெருக்கமாக இருக்கும் படம் உண்மையா?

தற்போது, வல்லபாய் படேலை தூக்கிப்பிடித்து, நேருவை தாழ்த்தி பதிவிட்டுள்ளார். நாட்டின் பிரதமரை ஒருவர் வந்து அறைய முடியுமா? அப்படி அறைந்தால் அவர் நிலை என்னவாகியிருக்கும் என்ற பொதுவாக எழும் கேள்விகளை ஒதுக்கிவைத்துவிட்டு இந்த பதிவு உண்மையா என்று மட்டும் ஆய்வு மேற்கொண்டோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படத்தை வைத்து பல கதைகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் விஷயம் நமக்கு தெரிந்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவிலிருந்த தகவலும் ஒன்று.

Search Link

சீனப் போரில் தோல்விக்கு காரணம் நேருதான் என்று கூறி பொது மக்கள் தாக்கியதாக ஒரு வதந்தி, சீன போரில் தோல்விக்கு நேருதான் காரணம் என்று கூறி வீரமிக்க ராணுவ வீரர் ஒருவர் நேருவின் கன்னத்தில் அறைந்தார் என்று ஒரு வதந்தி என்று பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பல மொழிகளிலும் பரப்பப்பட்டு வருவது தெரிந்தது. இது தொடர்பாக பல உண்மை கண்டறியும் ஆய்வுகளும் நடத்தி கட்டுரை வெளியிட்டதும் தெரிந்தது. அவற்றை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தேடினோம்.

apimages.comArchived Link

நீண்ட தேடுதலுக்குப் பிறகு வதந்திகளுக்கு நடுவே ஒரு apimages.com வெளியிட்டிருந்த படம் நமக்கு கிடைத்தது. அதை பார்த்தோம். அதில் பட்னாவில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் கலகக்காரர்களை அடக்க கூட்டத்துக்குள் பாய முயன்ற நேருவை பாதுகாவலர் தடுத்து நிறுத்துகிறார் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் அதில் இந்த சம்பவம் 1962ம் ஆண்டு ஜனவரியில் நடந்தது என்றும், இந்த ஆண்டு இறுதியில்தான் இந்தியா மீது சீனா போர் தொடுத்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

ஸ்வாமி வித்யானந்த் விதே என்று யாராவது உள்ளார்களா, அவர் நேருவை சந்தித்தாக செய்தி உள்ளதா என்று தேடினோம். அப்போது இது தொடர்பான வதந்திகள் மற்றும் கட்டுரைகள்தான் நமக்கு கிடைத்தன. அவற்றைப் பார்த்தோம். அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதற்கு எந்த ஒரு செய்தி ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை. அனைத்திலும் ஏ.பி செய்தி நிறுவனம் வெளியிட்ட படத்தை அடிப்படையாகக் கொண்டே செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்தது.

ayupp.comaltnews.in

நம்முடைய ஆய்வில்,

இந்த படம் பாட்னாவில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் கலகக் காரர்களைக் கட்டுப்படுத்த நேருவே களமிறக்க முயன்றபோது பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கண்ட பதிவில் குறிப்பிட்டதுபோன்று ஆரியர்கள் வருகை பற்றி நேரு பேசிய கூட்டம் இது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேருவை ஸ்வாமி வித்யானந்த் விதே சந்தித்தார் என்றோ, நேருவின் கன்னத்தில் ஸ்வாமி வித்யானந்த் விதே அறைந்தார் என்றோ எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள் என்று நேரு பேசியபோது அவரை தடுத்த ஸ்வாமி வித்யானந்த் விதே நேரு கன்னத்தில் அறைந்தார் என்று பகிரப்படும் பதிவு பொய்யானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நேருவை கன்னத்தில் அறைந்த வித்யானந்த் விதேவ்- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False