நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தாரா பிரதமர் மோடி?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி விப்லவ் தாக்கூர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி விழித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

மக்களவையில் இருக்கும் பிரதமர் மோடி மற்றும் மாநிலங்களவையில் பேசும் விப்லவ் தாக்கூர் வீடியோ காட்சிகளை ஒன்றிணைத்து 1.14 நிமிடத்துக்கு ஒரே வீடியோவாக வெளியிட்டுள்ளனர். 

நிலைத் தகவலில், “பாராளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் திறு திறுனு முழிக்கும் பிரதமர் மோடி… #டியூப்லைட்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Singaraj D என்பவர் பிப்ரவரி 7, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எடுக்கப்பட்ட இரு வேறு வீடியோக்களை இணைத்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. மக்களவையில் பிரதமர் மோடி பேச நிற்கும் காட்சிகளையும் மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் விப்லவ் தாக்கூர் பேசியதையும் ஒன்றிணைத்துள்ளனர்.

மோடி இருக்கும் காட்சிகளில் எல்.எஸ்.டி.வி (லோக்சபா டெலிவிஷன்) லோகோ தெளிவாகத் தெரிகிறது. ஓம் பிர்லா, மாண்புமிகு அவைத் தலைவர் என்று உள்ளது. ஆனால் விப்லவ் தாக்கூர் பேசும் காட்சிகளில் லோகோ, அவைத் தலைவர் யார் என்ற விவரங்கள் அகற்றப்பட்டு இருந்தன. 

இது இரு வேறு வீடியோக்களின் தொகுப்பு என்பதை உறுதி செய்வதற்கான வீடியோக்களைத் தேடினோம். பிரதமர் மோடி இருப்பது மக்களவை என்பது தெளிவாகத் தெரிந்தாலும், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசிய காட்சியைத் தேடினோம். மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் முழு உரையும் நமக்குக் கிடைத்தது. அதில் 24.40வது நிமிடத்தில் மோடி பின்னால் கையைக் கட்டிக்கொண்டு நிற்கும் காட்சிகள் வருகின்றன. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளித்து மோடி பேசியது 2020 பிப்ரவரி 6ம் தேதி பிற்பகல் 12.38 முதல் 2.18 வரையாகும்.

அடுத்ததாக, விப்லவ் தாக்கூர் உரையை மாநிலங்களவை டி.வி யூடியூப் பக்கத்தில் தேடினோம். பிப்ரவரி 6 அன்று விப்லவ் தாக்கூர் மாநிலங்களவையில் பேசியது தெரிந்தது. அவர் பிற்பகல் 2.36 முதல் 2.45 வரை பேசியது தெரிந்தது. அந்த நேரத்தில் பிரதமர் மோடி மாநிலங்களவையிலிருந்தாரா என்று பார்த்தோம். தொடக்கத்தில் முழு தோற்றத்தையும் காட்டுகின்றனர். ஆளுங்கட்சிப் பகுதியில் பெரும்பாலான நாற்காலிகள் காலியாக இருந்தன. 

முதல் வரிசையில் பிரதமர் இல்லை. விப்லவ் தாக்கூரின் 10 நிமிட உரையின்போது மூன்று முறை மொத்த அவையும் காட்டப்படுகிறது. அதில் மோடி இருப்பதைக் காண முடியவில்லை. இதன் மூலம் விப்லவ் தாக்கூர் பேசியபோது பிரதமர் அங்கு இல்லை என்பது உறுதியானது.

ராஜ்யசபா டி.வி வெளியிட்ட விப்லவ் தாக்கூர் பேச்சு வீடியோவில், லோகோ, நேரம் உள்ளிட்டவற்றை அகற்றிவிட்டு, விப்லவ் மட்டும் தெரியும் வகையில் எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளித்து மோடி எப்போது பேசினார் என்று பார்த்தோம். மாநிலங்களவை தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் அந்த வீடியோ கிடைத்தது. மோடி பிப்ரவரி 6ம் தேதி பதில் அளித்து பேசியுள்ளார். விப்லவ் தாக்கூர் பேசிய சில மணி நேரம் கழித்து மோடி பேசியது தெரியவந்தது. அதாவது அதே நாள் மாலை 5.14க்கு தன்னுடைய உரையை மோடி தொடங்குகிறார். அப்போது அவை நிரம்பியிருந்ததைக் காண முடிந்தது.

நம்முடைய ஆய்வில்,

பிரதமர் மோடி இருக்கும் காட்சி மக்களவையில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் உறுப்பினர் விப்லவ் தாக்கூர் பேசியது மாநிலங்களவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விப்லவ் தாகூர் பேசியபோது அங்கு மோடி இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோடி அதே நாள் மாலையில் மாநிலங்களவையில் பேசியதும் நமக்கு கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மக்களவையில் மோடி பேசியபோது எடுக்கப்பட்ட காட்சிகளை, மாநிலங்களவையில் விப்லவ் தாக்கூர் பேசியதுடன் இணைத்து, விப்லவ் தாக்கூர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மோடி திணறியது போன்று தவறான பதிவு உருவாக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தாரா பிரதமர் மோடி?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •