
‘’மாட்டு சிறுநீரை குடிக்கும் மனிதன், நிர்வாணமாக இருக்கும் மனிதனை வணங்கும் மக்கள்,’’ என்ற தலைப்பில் வைரலாகப் பகிரப்பட்டு வரும் வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
A Stanley என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை கடந்த செப்டம்பர் 19, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், நிர்வாணமாக நிற்கும் ஒருவரை பொதுமக்கள் வணங்குவது போன்றும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோமியத்தை அருந்துவது போன்றும் 2 புகைப்படங்களை இணைத்து பதிவிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்து பற்றி நாம் எந்த தவறும் கூறவில்லை. ஆனால், அதில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள்தான் நமக்கு சந்தேகம் ஏற்படுத்துகின்றனர். இதன்படி, அவை உண்மையான புகைப்படங்களா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
முதலில், நிர்வாணமாக உள்ள ஒருவரை பொதுமக்கள் வணங்குவது போன்ற புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். அந்த புகைப்படத்தை Yandex இணையதளத்தில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, அது உண்மையான ஒரு சம்பவத்தின் புகைப்படம்தான் என்பதற்கு ஆதாரம் கிடைத்தது.
இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் பற்றி பார்க்க இங்கே கிளிக் செய்யவும். ஆனால், இது எங்கே நிகழ்ந்தது என்ற விவரம் தெரியவில்லை. புகைப்படங்களை பார்க்கும்போது இது வட இந்தியாவில் நிகழ்ந்த சம்பவம்போல உள்ளது. அங்கே நிர்வாண சாமியார்களை மக்கள் வணங்குவது வழக்கம்தான். இதன்மூலமாக, மேற்கண்ட 2 புகைப்படங்களில் ஒன்று உண்மைதான் என உறுதியாகிறது.
இதேபோல, யோகி ஆதித்யநாத் பற்றிய புகைப்படத்தின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். ஆனால், அந்த புகைப்படம் போலியாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என தெரியவந்தது.
இதன்படி, 2017ம் ஆண்டில் பைப்பில் யோகி ஆதித்யநாத் தண்ணீர் குடித்த புகைப்படத்தை எடுத்து சிலர் தவறாகச் சித்தரித்து வதந்தி பரப்பியுள்ளதாக, தெரிகிறது. இதுபற்றிய செய்தி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, மேற்கண்ட 2 புகைப்படங்களில், நிர்வாண சாமியார் புகைப்படம் உண்மைதான். ஆனால், எங்கே நிகழ்ந்த சம்பவம் என்று தெரியவில்லை. அதேசமயம், யோகி ஆதித்யநாத் பற்றிய புகைப்படம் போலியானது என சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள 2 புகைப்படங்களில், ஒன்று உண்மை, ஒன்று தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:யோகி ஆதித்யநாத் கோமியம் குடிக்கும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Mixture
