இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் விஜய் ரசிகர்களை அடிக்க உத்தரவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Vijay 2.png
Facebook LinkArchived Link

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் படம் உள்ளது. அதன் அருகில், "நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் தான் வெளியில் கலவரம் செய்தவர்களை அடித்து விரட்ட சொல்லி உத்தரவிட்டார் - பாதுகாப்பு போலீஸ் அதிகாரி தகவல்" என்று உள்ளது.

நிலைத் தகவலில், "தகப்பனோ, போலீசை வைத்து ரசிகர்களை போட்டு தாக்க உத்தரவு போட.. மவனோ, ரசிகர்களை அடிக்காதீங்க என மேடையில் சீன் போட

அடேய் என்ன நடிப்புடா" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Kumar Velusamy என்பவர் 2019 செப்டம்பர் 26ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிகில் பட பாடல் வெளியீட்டு விழா மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நிகழ்ச்சியில் விஜய் பேசியது மட்டுமல்ல, நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை அதிக விலைக்கு விற்றது, டிக்கெட் வாங்கியவர்களைக் கூட நிகழ்ச்சியில் அனுமதிக்காதது, ரசிகர்கள் மீது தடியடி நடத்தியது, நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தது என்று பல வகையிலும் பிகில் பேசும் விஷயமாகிவிட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிக அளவில் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை விற்பனை செய்ததால் அதிக அளவில் ரசிகர்கள் திரண்டதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறியதாகவும் இதனால் லேசாக தடியடி நடத்தப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கேள்விப்பட்ட நடிகர் விஜய், நிகழ்ச்சியிலேயே அது பற்றி அதிருப்தி வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

thanthitv.comArchived Link 1
puthiyathalaimurai.comArchived Link 2

மெர்சல், சர்க்கார் என்று தொடர்ந்து விஜய் தன்னுடைய படங்களில் அரசியல்வாதிகளை விமர்சித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் பற்றிய வதந்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்கள் துரோகிகள் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு பரவியது. பிகில் பிரச்னையைத் தொடர்ந்து, ஜெயலலிதா காலில் விழுந்த விஜய் என்று மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டது. தற்போது, ரசிகர்களை அடிக்கச் சொல்லி நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உத்தரவிட்டதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

இந்துக்களை திட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்
ஜெயலலிதா காலில் விழுந்த விஜய்

எஸ்.ஏ.சந்திரசேகர் உத்தரவிட்டு அதன் அடிப்படையில் செயல்படும் வகையில் தமிழக போலீஸ் இல்லை. எஸ்.ஏ.சந்திரசேகர் எந்த அரசு உயர் பதவியிலும் இல்லை... அவர் உத்தரவிட்டதன் அடிப்படையில் தடியடி நடத்தினோம் என்று எந்த ஒரு காவல் துறை அதிகாரியும் கூறமாட்டார். மேலும், நியூஸ் 7 பெயரில் வெளியான நியூஸ் கார்டு போலியானது போல உள்ளது. உண்மையில் இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 வெளியிட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம். அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் சென்று ஆய்வு செய்தபோது, அப்படி எந்த ஒரு கார்டும் நமக்கு கிடைக்கவில்லை.

Vijay 3.png

நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டில் தேதி, நேரம் இருக்கும். மேலும் தற்போது அந்த தொலைக்காட்சி வெளியிடும் பிரேக்கிங் நியூஸ் கார்டு டிசைன் இது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட நியூஸ் கார்டில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. ஃபான்டும் வழக்கமான நியூஸ் 7 பயன்படுத்தும் ஃபான்ட் இல்லை.

பிகில் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொடர்பாக வித்தியாசமான நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது தெரிந்தது. அதில், தேதி, நேரம் என வழக்கமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் வகையில் படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

எஸ்.ஏ.சந்திரசேகர் உத்தரவிட்டதன் அடிப்படையில் விஜய் ரசிகர்களைத் தாக்கியதாக போலீஸ் அதிகாரி யாராவது பேட்டி, தகவல் தெரிவித்துள்ளாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

Vijay 5.png
Search Link

நம்முடைய ஆய்வில்,

நடிகர் விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்பாக தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருவது உறுதியாகி உள்ளது.

நியூஸ் 7 தமிழ் சமீபத்திய பிரேக்கிங் கார்டுக்கும் இந்த கார்டுக்கும் உள்ள வித்தியாசம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எஸ்.ஏ.சந்திரசேகர் உத்தரவின் அடிப்படையில் காவல் துறையினர் தடியடி நடத்தும் அளவுக்கு அவர் உயர் பதவியில் இல்லை.

தடியடிக்கு எஸ்.ஏ.சந்திரசேகர்தான் காரணம் என்று எந்த ஒரு காவல் துறை அதிகாரியும் கூறியதாக செய்திகள் இல்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், "எஸ்.ஏ.சந்திரசேகர் உத்தரவிட்டதன் அடிப்படையில் விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது" என்று போலீஸ் அதிகாரிகள் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:விஜய் ரசிகர்களை அடிக்கச் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்? - ஃபேஸ்புக் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False