ஆதிபுருஷ் படத்தை திரையிடும் போது திரையரங்கத்தில் ஒன்பது இருக்கைகள் காலியாக ஒதுக்க வேண்டும், இல்லை என்றால் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "ஒன்பது சீட்டுகள் ஒதுக்க வேண்டும். இயக்குனர் அனுமார் பக்தர் என்பதால், அனுமாருக்கு மட்டும் இருக்கை ஒதுக்குவதை ஏற்க முடியாது. ராமர், சீதை, லட்சுமணர், அனுமர், பரதன், வாலி, சுக்ரீவன், அணில், குதிரை ஆகிய அனைவருக்கும் மொத்தம் 9 இருக்கைகள் ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால், திரையரங்குகள் முன்பு இந்து மக்கள் கட்சி அரைநிர்வாண போராட்டம் நடத்தும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Rupesh Psr என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த நியூஸ் கார்டை ஜூன் 8, 2023 அன்று பகிர்ந்திருந்தார். ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ராமாயணத்தை மையமாக வைத்து ஆதிபுருஷ் என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. படம் திரையிடப்படும் போது, திரையரங்கத்தில் ஒரு இருக்கை, அனுமாருக்காக ஒதுக்கப்படும் என்று படத் தயாரிப்பாளர் அறிவித்தார். அதை வைத்து நையாண்டி செய்யும் வகையில் நியூஸ் கார்டு ஒன்றை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

அணில், குதிரைக்கும் சீட் ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இந்து மக்கள் கட்சி அரை நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று பலரும் பகிரவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் இந்த நியூஸ் கார்டை கதிர் என்ற இணைய ஊடகம் வெளியிட்டதா என்று ஆய்வு செய்தோம். அந்த இணைய ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. இந்த நியூஸ் கார்டை கதிர் ஊடகத்தின் நிர்வாகிக்கு அனுப்பி உண்மையா என்று கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

அடுத்ததாக இப்படி ஏதும் அறிவிப்பை இந்து மக்கள் கட்சி வெளியிட்டதா என்று அறிய அதன் ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அதில் அப்படி எந்த அறிவிப்பும் இல்லை. அர்ஜுன் சம்பத் ட்விட்டர் பக்கத்திலும் இப்படி எந்த ஒரு கோரிக்கையும் அறிவிப்பும் இடம்பெறவில்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.

முடிவு:

ஆதிபுருஷ் திரைப்படம் திரையிடும் போது திரையரங்கில் ஒன்றுக்கு பதில் 9 இருக்கைகளை காலியாக விட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆதிபுருஷ் படத்துக்கு ஒன்பது சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கூறியதா?

Written By: Chendur Pandian

Result: False