
மகாராஷ்டிரா மாநிலத்தில் போர் போடும்போது எரிமலைக் குழம்பு வந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. அதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:
போர் போடும் இயந்திரம் பற்றி எரிகிறது. தீயை அணைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். வீடியோவில், மகாராஷ்டிராவில் நடந்தது என்று எந்த தகவலும் இல்லை. ஆனால், இதை பகிர்ந்துள்ளவர்கள், “மகாராஷ்டிராவில் 1200 அடி ஆழத்துக்கு போர் போடும்போது எரிமலைக் குழம்பு வந்தது” என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற சூழல் தமிழகத்திலும் நடக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். 2.10 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவை தீப்தி என்பவர் 2019 மே 17ம் தேதி பகிர்ந்துள்ளார். இதை 21 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
இந்த ஃபேஸ்புக் பதிவில் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எந்த ஊரில் எப்போது நடந்தது என்று எதுவும் குறிப்பிடவில்லை. இதனால், Fact Crescendo மராத்தி பிரிவில் இது தொடர்பாக ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று ஆய்வு செய்தோம். 2019 மே 13ம் தேதி இது தொடர்பான கட்டுரை வெளியானது தெரிந்தது.
அதில், மகாராஷ்டிரா மாநிலம் பீட் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக வதந்தி பரவி வருகிறது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், அந்த பகுதி தீயணைப்புத் துறையைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று அவர்கள் தெரிவித்ததாக கூறப்பட்டு இருந்தது. மேலும், இந்த சம்பவம் ஆப்ரிக்காவில் உள்ள மாலி நாட்டில் நடந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த தகவல் பொய்யானது என்று தெரிவித்திருந்தனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த தகவலை அடிப்படையாக வைத்துக்கொண்டு நாம் நம்முடைய ஆய்வைத் தொடங்கினோம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1200 அடி ஆழத்துக்கு போர் போடும்போது எரிமலைக் குழம்பு வந்தது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். அப்போது, எரிமலைக் குழம்பு வந்தது தொடர்பான உண்மை கண்டறியும் கட்டுரைகள் பல கிடைத்தன. அதன் நடுவே, எரிமலைக் குழம்பைக் கண்டு மக்கள் பீதி என்று ஒரு செய்தி கிடைத்தது.

அந்த செய்தியை படித்தபோது, மகாராஷ்டிரா மாநிலம் பீட் அருகே, உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாக கம்பி விழுந்த பகுதியிலிருந்த பாறை, மண் உருகி கருப்பு நிறத்துக்கு மாறியுள்ளது. இதைக் கண்டு, மக்கள் பயப்படத் தேவையில்லை என்று பீட் மாவட்ட ஆட்சித்தலைவர் அஸ்திக் குமார் பாண்டே தெரிவித்ததாகக் கூறப்பட்டு இருந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதுதான், வதந்திக்கு மூலகாரணம் என்று தெரிகிறது. பாறை, மண் உருகிய செய்தியை போர் போடும்போது எரிமலைக் குழம்பு வந்தது என்று கூறியுள்ளனர். தொடர்ந்து ஆங்கிலத்தில் வெளியான மற்ற உண்மை கண்டறியும் ஆய்வுகளைப் படிக்கும்போது வேறு ஒரு தகவல் நமக்கு கிடைத்தது. அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவின் மற்றொரு வைரல் வீடியோ கிடைத்தது. மே 11ம் தேதி பதிவிடப்பட்ட வைரல் வீடியோ அது.
வீடியோவுக்கு கமெண்ட் செய்த ஒருவர், இந்த சம்பவம் மாலியில் நடந்துள்ளது. இது என்னுடைய போர் போடும் இயந்திரம்தான் என்று கூறியிருந்தார் செய்திருந்தார். ஆனால், அவருடைய தன்னைப் பற்றியோ, தன்னுடைய நிறுவனத்தைப் பற்றியோ அவர் எதையும் குறிப்பிடவில்லை.


அந்த வீடியோவை நன்கு ஆராய்ந்த போது, போர் போடும் இயந்திர வாகனத்தில் சில பெயர்கள், தொலைபேசி எண்கள் ஓரளவுக்குத் தெரிந்தன. அதை வைத்து ஆய்வைத் தொடர்ந்தோம். அப்போது, அந்த வண்டியிலிருந்த தொலைபேசி எண்ணின் முதல் மூன்று எழுத்து கிடைத்தது. அது +223 என்று தொடங்கியது. முடிவில் மாலி என்றும் வார்த்தை தெளிவின்றி தெரிந்தது.

அந்த தொலைபேசி கோட் எண் எந்த நாட்டுக்கு உரியது என்று தேடினோம். அது மாலி நாட்டின் தொலைபேசி சர்வதேச அழைப்பு கோட் என்பது உறுதியானது. இதன் மூலம், இந்த வீடியோ மாலியில் நடந்த சம்பவத்தினுடையது என்று உறுதியானது.

forage sarl Mali என்று டைப் செய்து தேடியபோது, மாலியில் ஆழ்துளை கிணறு அமைப்பது உள்ளிட்ட வேலைகளை FORAGE FTE DRILLING MALI SARL நிறுவனம் செய்துவந்தது தெரிந்தது.

நாம் மேற்கொண்ட ஆய்வில் நமக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில்,
1) எரிமலைக் குழம்பு வந்ததாக கூறப்படும் சம்பவம் மகாராஷ்டிராவில் நடக்கவில்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தி பிரிவு ஆய்வு உறுதி செய்துள்ளது.
2) உயர் அழுத்த மின்சார கேபிள் துண்டித்து விழுந்ததால் பாறை மற்றும் மண் உருகிய சம்பவம் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம் என்று கலெக்டர் தெரிவித்த செய்தி கிடைத்துள்ளது.
3) போர் போடும் இயந்திரம் தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்த ஒருவர், இந்த சம்பவம் மாலியில் நடந்தது. அது என்னுடைய இயந்திரம்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
4) வீடியோவில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்கள் போல உள்ளனர்.
5) எரிந்துகிடக்கும் வாகனத்தில் இருந்த வார்த்தைகள் மற்றும் தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தபோது அது மாலியின் தொலைபேசி எண் என்பது தெரிந்தது. குறிப்பிட்ட நிறுவனம் மாலியில் செயல்பட்டு வருவது உறுதியானது.
நமக்கு கிடைத்த இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மகாராஷ்டிராவில் போர் போடும்போது வந்த எரிமலைக் குழம்பு: வைரல் வீடியோவால் பரபரப்பு
Fact Check By: Praveen KumarResult: False
