கோட்சே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாரா மோடி?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை. ஆனால், மனிதர்கள்…,’’ என்ற தலைப்பில் கோட்சே சிலைக்கு மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாகக் கூறி ஒரு புகைப்பட பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்வதால், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\modi 2.png

Tamil Makkal என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை, கடந்த மே 15ம் தேதி வெளியிட்டுள்ளது. இப்பதிவில், காந்தி சிலைக்கும், காந்தியை கொன்றவர் சிலைக்கும் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாகக் கூறி, அதற்கான புகைப்படங்களையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றையும் சேர்த்து, அதன் அருகில், ‘’எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை.. ஆனால், மனிதன்…’’, என்றும், கீழே ‘’இதில் தீவிரவாதி யார்? கொல்லப்பட்டவரா? கொன்றவனா?,’’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் கூறியுள்ள பதிவில் இடம்பெற்றுள்ள நியூஸ்கார்டு உண்மையா என முதலில் ஆய்வு செய்தோம். அதில், ட்விட்டரில் இத்தகைய நியூஸ்கார்டை புதியதலைமுறை வெளியிட்டதன் ஆதாரம் கிடைத்தது.

அதன்பிறகு, மோடி காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பது போன்றுள்ள புகைப்படம் உண்மையானதுதானா என தேடிப்பார்த்தோம். அப்போது, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலின்போது, காந்தியின் மார்பளவு சிலைக்கு மோடி மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய புகைப்படம் உண்மையானதுதான் என தெரியவந்தது. இது அவர் பிரதமர் பதவியேற்ற புதிதில், 2015ம் ஆண்டு குஜராத் மாநிலம், காந்திநகரில் செய்தது என்றும் தகவல் கிடைத்தது. அதற்கான ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

C:\Users\parthiban\Desktop\modi 3.png

இவ்வாறு காந்தியின் மார்பளவு சிலைக்கு மரியாதை செலுத்தியமைக்காக, அப்போதே, இந்துத்துவ குழுக்களால், பிரதமர் மோடி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதுபற்றிய செய்தி ஆதாரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோட்சேயின் மார்பளவு உருவச்சிலைக்கு, மோடி மரியாதை செலுத்தினாரா என, அதே புகைப்படத்தை வைத்து மீண்டும் ஒருமுறை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இந்த புகைப்படத்தில் இருக்கும் மார்பளவு சிலை கோட்சே இல்லை என்றும், அவர் தீனதயாள் உபாத்யாயா என்றும் தெரியவந்தது. ஆதார படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

C:\Users\parthiban\Desktop\modi 4.png

மேற்கண்ட புகைப்படம் ஏப்ரல் 6, 2017 அன்று எடுக்கப்பட்டதாகும். பாஜக.,வின் 37வது ஆண்டு விழாவை முன்னிட்டு, உபாத்யாய சிலைக்கு மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இது ஆண்டுதோறும் செய்யப்படும் சம்பிரதாய நிகழ்வாகும். இதுபற்றிய விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், இதில் தீவிரவாதி யார், கொல்லப்பட்டவரா, கொன்றவரா என்பதெல்லாம், இந்த பதிவை வெளியிட்டவரின் சொந்த கருத்துகளாகும். மோடி பற்றிய உண்மையான நியூஸ் கார்டு, காந்தி மார்பளவு சிலை மரியாதை செலுத்துதல் போன்றவற்றை சரியாக பகிர்ந்து, அரசியல் விமர்சனம் செய்துள்ள இந்த பதிவர், அது கோட்சே சிலைதானா என உறுதி செய்யாமல் இணையத்தில் கிடைக்கும் தகவலை உண்மை என நம்பி பகிர்ந்துவிட்டதாக, தெரியவருகிறது. இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, பார்க்கும்போது, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவல் தவறு என உறுதி செய்யப்படுகிறது.

இதேபோல, இந்த ஆய்வின்போது, மேலும் ஒரு சுவாரசிய பதிவு ஒன்றும் ஃபேஸ்புக்கில் இருந்து கிடைத்தது. அதில், கோட்சே பற்றியும் காந்தி கொலை செய்யப்பட்டது பற்றியும் ஒருவர் விலாவரியாக எழுதியிருந்தார். ஆனால், கடைசியாக, கோட்சே புகைப்படம் என்று கூறி, இதே உபாத்யாய சிலைக்கு மோடி மரியாதை செலுத்தும் மற்றொரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அத்துடன், அதில், காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அன்று வெளியான செய்தியின் விவரமும் இடம்பெற்றுள்ளது. அந்த ஃபேஸ்புக் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Archived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படமும் தவறான ஒன்றாகும். கோட்சே சிலை என்ற பெயரில் ஆளாளுக்கு ஒரு புகைப்படத்தை இப்படி தவறாக பதிவிட்டு வருவது, இதன்மூலமாக உறுதியாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் இருப்பது கோட்சே சிலை இல்லை; உபாத்யாய சிலை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கோட்சே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாரா மோடி?

Fact Check By: Parthiban S 

Result: False