நக்கீரன் கோபாலை சிதறடிக்கும் சின்மயி: குழப்பம் தரும் ஏசியாநெட் செய்தி!

சமூக ஊடகம் சினிமா

“வைரமுத்து இப்படி தடவினாரா… அப்படி ஒரசினாரா?” என்று பாடகி சின்மயி நக்கீரன் கோபாலிடம் கேள்வி கேட்டது போன்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவந்தது. தலைப்பே குழப்பமாக இருக்க அது என்ன என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link 1

Archived link 2

ஏஷியாநெட் தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 மே 21ம் தேதி ஒரு செய்தி ஷேர் செய்யப்பட்டு இருந்தது. அதன் தலைப்பு “’வைரமுத்து இப்படி தடவினாரா அப்படி ஒரசினாரா..?’ நக்கீரன் கோபாலை சிதறடிக்கும் சின்மயி..!” என்று இருந்தது. அதாவது, நக்கீரன் கோபாலிடம் பாடகி சின்மயி “வைரமுத்து இப்படி தடவினாரா, அப்படி ஒரசினாரா?” என்று கேட்பது போல் இருந்தது. வைரமுத்து – சின்மயி விவகாரம் பெரிதாக பேசப்படும் சூழலில், இந்த செய்தி குழப்பத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளது. வைரமுத்து பற்றி நக்கீரன் கோபாலிடம் சின்மயி ஏன் இப்படி கேட்க வேண்டும் என்ற சந்தேகமே அதிகரிக்கிறது. ஆனால், இதுபற்றி யோசிக்காமல் பலரும் இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கவிஞர் வைரமுத்து தன்னிடம் பாலியல் அத்துமீறல் செய்ய முயன்றதாக பாடகி சின்மயி கடந்த ஆண்டு பரபரப்பு புகாரை தெரிவித்தார். ஆனால், அதுதொடர்பாக எந்த ஒரு ஆதாரத்தையும் அவரால் கொடுக்க முடியவில்லை. இது தொடர்பான செய்திக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

“என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. குற்றம் உண்மையென்றால், சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். வழக்கை சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களுடனும், அறிவுலகத்தின் ஆன்றோர்களுடனும் கடந்த ஒருவார காலமாக ஆழ்ந்து ஆலோசித்து அசைக்க முடியாத ஆதாரத்தைத் தொகுத்துத் திரட்டி வைத்துள்ளேன். நீங்கள் வழக்கு போடுங்கள்.  சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவனா கெட்டவனா என்பதை இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலை வணங்குகிறேன்” என்று வைரமுத்து பதில் அளித்திருந்தார்.

சட்ட ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்து வைரமுத்து மீது வழக்கு தொடருவேன் என்று சின்மயி கூறியிருந்தார். ஆனால், இதுவரை வழக்கு எதுவும் அவர் தொடரவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். அந்த பெண்ணுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை போலீசில் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் சின்மயி.

இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வந்தது. நக்கீரன் இதழ் குழுமத்தில் இருந்து வெளிரும் சினிகூத்து இதழில், “பொள்ளாச்சி விவகாரத்தில் போராட முன்வராதவர், தலைமை நீதிபதி விவகாரத்துக்குப் போராட வருவது ஏன்” என்று கேட்டு செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்து சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “நக்கீரன் கோபாலுக்கு என் மீது ஏன் இவ்வளவு உறுத்தல் என்று ஆச்சரியப்படுகிறேன்… அவர் ஏன் இவ்வளவு அசிங்கமாக நடந்துகொள்கிறார்? வைரமுத்துவுக்கு நெருங்கிய நண்பர் என்றால் வைரமுத்துவின் கதைகள் அனைத்தும் அவருக்கு தெரிந்திருக்கும் இல்லையா? எவ்வளவு பெண் வெறுப்பு உள்ளது என்பதை பார்க்கையில், வைரமுத்துவை கேள்விகேட்க தமிழ்நாட்டில் முதுகெலும்பு உள்ள ஒருவர் கூட இல்லை என்பதில் ஆச்சரியம் இல்லை” என்று கூறியிருந்தார்.

Archived link

அந்த பதிவுக்கு அவரே ஒரு கமெண்ட்டையும் பகிர்ந்துள்ளார். அதில், “இத்தன நாள்ல airport லெருந்து வீடு வரைக்கும் என்ன துரத்தி இப்படி தடவினாரா அப்படி ஒரசினாரா, இப்ப ஏன்டி சொல்றன்னு ****ன்னு கேக்க முடிஞ்ச சில நபர்களுக்கு திரு வைரமுத்து அவர்களை ஒரு கேள்வி கூட கேக்க முடியல. அது யேனோ?? 🙂 ஆக, சில பேர் support இருந்தா இன்னா வேணா பண்ணலாம்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஏஷியா நெட் தமிழ் வெளியிட்டுள்ள செய்தியில், வைரமுத்து தொட்டாரா, உரசினரா என்று நக்கீரன் கோபாலிடம் சின்மயி கேள்வி கேட்பது போன்று “சிதறடிக்கும் சின்மயி” என்று தலைப்பிட்டிருந்தனர். அதன் உண்மையை அறிய செய்தியை படித்தோம். அதில், சின்மயி வெளியிட்ட, மேலே நாம் குறிப்பிட்ட ட்விட்டர் பதிவு மற்றும் கமெண்ட் இரண்டையும் செய்தியாக வெளியிட்டிருந்தனர். ஆனால், தலைப்பில் தவறு செய்திருந்தது தெரிந்தது.

தலைப்பில் கூறியிருப்பது போன்று, ’வைரமுத்து இப்படி தடவினாரா அப்படி ஒரசினாரா..?’ என்று நக்கீரன் கோபாலிடம் சின்மயி கேள்வி எழுப்பியதாக செய்தியில் ஏதும் கூறப்படவில்லை.

சின்மயி தன் ட்விட்டர் பதிவில், நக்கீரன் கோபால் தன்னிடம் வைரமுத்து இப்படி தடவினாரா, அப்படி ஒரசினாரா என்று கேட்டதாக கூறவில்லை. பொது இடங்களில், தான் சந்திக்கும் விமர்சனங்களை பற்றியே சின்மயி கூறியிருந்தார். மற்றவர்கள் இப்படி எல்லாம் என்னை கேட்கிறார்கள் என்று சின்மயி சொன்ன விஷயத்தை, நக்கீரன் கோபாலிடம் சின்மயி கேள்வி கேட்டது போன்று மாற்றித் தலைப்பிட்டுள்ளனர். அதாவது, சின்மயி சொல்வதன்படி பார்த்தால், தன்னை இப்படி பலரும் கேள்வி கேட்டார்கள், என்றுதான் ஆதங்கப்படுகிறார். ஆனால், இவர்கள் வெளியிட்ட தலைப்பை பார்த்தால், நக்கீரன் கோபாலுக்கும், வைரமுத்துவுக்கும் எதோ ரகசிய தொடர்பு உள்ளதுபோலவும், அதனைத்தான் சின்மயி கேள்வி கேட்கிறார் என்றும் அர்த்தம் தோன்றுவதாக உள்ளது. தலைப்பு என்ன வேண்டுமானாலும் வைப்போம், உள்ளே வந்து உண்மை செய்தியை தெரிந்துகொள்ளுங்கள் என்பது போல தலைப்பு இருந்தது.

நம்முடைய ஆய்வில், சின்மயி வெளியிட்ட ட்விட்டர் பதிவு, கமெண்ட் கிடைத்துள்ளது. அதே நேரத்தில், ஏஷியாநெட் தமிழ் செய்தியின் தலைப்பில் குறிப்பிட்டதுபோன்று நக்கீரன் கோபாலிடம் சின்மயி கேள்வி எழுப்பியதாக எதுவும் குறிப்பிடவில்லை. பரபரப்புக்காக தவறான புரிதலை ஏற்படுத்தும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது.

முடிவு:

மேற்கண்ட செய்தியின் தலைப்பில் தவறு இருப்பதாக, நம்முடைய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நக்கீரன் கோபாலை சிதறடிக்கும் சின்மயி: குழப்பம் தரும் ஏசியாநெட் செய்தி!

Fact Check By: Praveen Kumar 

Result: False Headline