
‘’லார்டு லபக் தாஸ் என்று ஒருவர் இருந்தார். அவரை மெட்ராஸ் (சென்னை) மக்களுக்கு மிகவும் பிடிக்கும்,’’ என்று கூறி பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link | Archived Link |
இந்த பதிவில், ஆங்கிலேயே அதிகாரி போல தோற்றமளிக்கும் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, ஆங்கிலத்தில், ‘’லார்டு லபக்தாஸ் என்பவர் உண்மையில் யார்? இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, ஆன்மிகவாதி. இவரை மதராஸ் மாகாண மக்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதில் இருந்துதான் லாடு லபக் தாஸ் என்ற வார்த்தை உருவானது. இன்றளவும் புழக்கத்தில் உள்ளது,’’ என்று ஒரு கதை எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இதுதொடர்பான ஒரு போலி செய்தியை citytoday என்ற இணையதளத்திலும் உண்மைச் செய்தி போலவே பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.
Citytoday news Link | Archived Link |
உண்மை அறிவோம்:
நாமும் வரலாற்றில் மிக ஆர்வம் கொண்டவர்கள்; நிறைய வரலாற்று தரவுகளை ஆய்வு செய்திருக்கிறோம் என்பதால், இதுவரை படித்த இந்திய வரலாறு, மெட்ராஸ் மாகாண வரலாறு கதைகளில் இப்படி ஒரு நபரை பற்றி எதுவும் கேள்விப்பட்டதில்லை. எனவே, இப்படி யாரேனும் உண்மையில் இருந்தாரா என்ற சந்தேகம் எழவே, முதலில் நமக்கு தெரிந்த வரலாற்று ஆர்வலர்களிடம் பேசினோம். யாரைக் கேட்டாலும் இப்படி ஒருவர் மெட்ராஸ் மாகாண மக்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டதில்லை என்றே குறிப்பிட்டனர்.
பிறகு, கூகுளில் தகவல் ஆதாரம் தேட தொடங்கினோம். முதலில் குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படத்தில் இருக்கும் ஆங்கிலேயேர் யார் என ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம்.
அப்போது இதில் இருப்பவர் லார்டு லபக் தாஸ் இல்லை, அவர் உண்மையில் இந்திய வைசிராய் பதவி வகித்த லார்டு கர்சன் என்பது தெரியவந்தது. கர்சனின் உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து எடுத்து இப்படி தவறான தகவலை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுபற்றி படிக்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும்.
மேலும், லார்டு லபக் தாஸ் பற்றிய ஆய்வின்போது, இது ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று கூறி தி இந்து வெளியிட்ட செய்திக்கட்டுரை ஒன்றை காண நேரிட்டது. அதில், குஜராத்தைச் சேர்ந்த லாட் குடும்பத்தினர் சென்னை மக்களிடையே பிரபலமாக இருந்ததே இந்த வார்த்தை ஏற்பட காரணம் எனக் கூறப்பட்டிருந்தது.
The Hindu Article Link | Archived Link |
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் புதுப்புது புரளிகளை பரப்புவோர் சிந்தனையில் உருவானதே இந்த லாடு லபக் தாஸ் செய்தி.
2) இந்த புகைப்படத்தில் இருப்பவர் உண்மையில் இந்திய வைசிராய் பதவி வகித்த லார்டு கர்சன் ஆவார்.
3) மெட்ராஸ் மாகாண பிரிட்டிஷ் ஆளுநர்கள் பட்டியலில் எங்கேயும் லார்டு லபக் தாஸ் என்ற பெயர் காணவில்லை.
4) குஜராத்தைச் சேர்ந்த லாட் குடும்பத்தினர், சென்னை மக்களிடையே தனித்த செல்வாக்கு பெற்றவர்களாக இருந்துள்ளனர். அதில் இருந்தே லாடு லபக் தாஸ் என்ற சொல்லாடல் பிறந்துள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் இடம்பெற்றுள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
