ரஜினிக்குப் பயந்து மு.க.ஸ்டாலின் வணக்கம் வைத்ததாக பரவும் வதந்தி…

அரசியல் | Politics தமிழ்நாடு | Tamilnadu

‘’ரஜினிகாந்துக்கு பயந்து வணக்கம் வைத்த மு.க.ஸ்டாலின்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில், ரஜினிகாந்தின் புகைப்படத்தை பார்த்து, மு.க.ஸ்டாலின் வணங்குகிறார் என்பதைப் போல தகவல் இடம்பெற்றுள்ளது.

இது பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், இதில் உள்ள கமெண்ட்களை பார்க்கும்போது, ‘’ரஜினியை பார்த்து ஸ்டாலின் பயந்துவிட்டார்; ஸ்டாலின் ஒரு மக்கு,’’ என்பன போன்ற கருத்துகள் இடம்பெற்றிருந்ததைக் கண்டோம். எனவே, இதனை உண்மை என நம்பி ரஜினி ரசிகர்கள், பகிர்ந்து வருவதாக, தெரியவருகிறது. 

உண்மை அறிவோம்:
சமீபத்தில் கந்தசஷ்டி கவசம் பற்றி சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டதாகக் கூறி கறுப்பர் கூட்டம் என்ற யூடியுப் சேனல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட சேனலை ஆதரித்தும், எதிர்த்தும் பலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

அதையொட்டி, இதுபற்றி நடிகர் ரஜினிகாந்தும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரது கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Archived Link

இந்நிலையில், கறுப்பர் கூட்டத்தை திமுக ஆதரிப்பதாகச் சொல்லப்படுவதால், அதற்கு பதில் அளித்து, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஊடகங்களில் பேட்டி வழங்கினார். அதில், திமுகவில் இந்துக்கள் ஒரு கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு எதிரான கட்சி திமுக கிடையாது. ஸ்டாலின் பெயரில் சிலர் வதந்தி பரப்புகிறார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

Maalaimalar News Link

திமுகவின் இந்த விளக்கத்தைப் பார்த்த மற்ற அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள், திமுக இந்துக்களுக்கு பயந்துவிட்டதாக தகவல் பகிர தொடங்கினர். அதில், ஒன்றுதான் நாம் மேலே பார்க்கும் ஃபேஸ்புக் பதிவும்.

‘’ரஜினியின் கருத்துக்குப் பயந்து, மு.க.ஸ்டாலின் அமைதியாகிவிட்டார். ரஜினியின் போட்டோவைப் பார்த்தாலே பயந்துபோய் கும்பிடுகிறார்,’’ என்று கூறி இதனை வெளியிட்டுள்ளனர்.

உண்மையில், இந்த புகைப்படத்தில் ரஜினியை பார்த்து மு.க.ஸ்டாலின் வணங்கவில்லை. அவர், கொரோனா ஊரடங்கு காரணமாக, ஆன்லைன் வீடியோ அழைப்பு வசதியை பயன்படுத்தி, கட்சி சார்ந்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து வருகிறார்.

இதன்படி, வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம், அவரது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதற்கான நிகழ்ச்சி கடந்த ஜூலை 22, 2020 அன்று நடைபெற்றது. அப்போது எடுத்த புகைப்படத்தை எடிட் செய்து தவறான தகவலை பரப்பியுள்ளனர்.

Archived Link

எனவே, வேறு ஒரு நிகழ்ச்சி தொடர்பாக எடுத்த புகைப்படத்தை எடிட் செய்து, தங்களது அரசியல் நோக்கத்திற்கு ஏற்ப தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான புகைப்படம் இடம்பெற்றுள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ரஜினிக்குப் பயந்து மு.க.ஸ்டாலின் வணக்கம் வைத்ததாக பரவும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: False