
திருநெல்வேலியில் லஞ்சம் கேட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை இளைஞர் தாக்கியதாக புகைப்படங்களுடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
சப்-இன்ஸ்பெக்டரை இளைஞர் ஒருவர் தாக்குகிறார். அவரை அடிக்க இன்னும் சிலர் தயாராக உள்ளனர். எந்த இடம் என்பது தெரியவில்லை. நிலைத் தகவலில், “நெல்லையில் லஞ்சம் கேட்ட காவலரை புரட்டி எடுத்த வாலிபர்…. பாராட்ட நினைத்தால் ஷேர் பண்ணுங்க நண்பர்களே…, (அரசாங்க உடையில் பிச்சை எடுப்பது உனக்கு அவமானம் இல்லையா)” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை நந்தினி என்பவர் 2017 டிசம்பர் 1ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நெல்லையில் லஞ்சம் கேட்ட காவல் துறை அதிகாரியை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், படத்தைப் பார்க்கும்போது வட இந்தியாவில் நடந்தது போல உள்ளது. எனவே, படத்தை ரிவாஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் தொடர்பான செய்தி நமக்கு கிடைத்தது.
Search Link |
2017ம் ஆண்டு ஜூன் மாதம் 16-17 வயதான சிறுமி ஒரு நிகழ்ச்சியில் மயக்கமுற்று விழுந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த சிறுமியை கொண்டு சென்றுள்ளனர். ஐ.சி.யு வார்டில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுயை வார்டு பாய் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இது பற்றி சிறுமியின் தாய் புகார் கூறவே, கோபமடைந்த பொது மக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கூட்டத்தை கட்டுப்படுத்த வந்த காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், தடியடி நடத்தி பொது மக்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர். பதிலுக்கு பொது மக்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தனியாக சிக்கிய காவல் உதவி ஆய்வாளரை இளைஞர்கள் சிலர் மிக மோசமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான செய்தி மற்றும் புகைப்படங்கள் அதிலிருந்தன.
mirror.co.uk | Archived Link |
செய்தி, புகைப்படங்கள் கிடைத்தாலும், வீடியோ ஏதும் உள்ளதா என்று யூடியூபில் தேடினோம். அப்போது இந்தியா டி.வி என்ற இந்தி ஊடகம் வெளியிட்டிருந்த வீடியோ கிடைத்தது. கான்பூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கோபம் அடைந்த பொது மக்கள் போலீசாரை தாக்கினர் என்று தலைப்பிட்டு அந்த வீடியோ 2017 ஜூன் 19ம் தேதி வெளியிடப்பட்டு இருந்தது. அதில், நாம் புகைப்படத்தில் கண்ட காட்சி இடம் பெற்றிருந்தது.
Archived Link |
நம்முடைய ஆய்வில்,
சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்ற தகவலைத் தொடர்ந்து கான்பூரில் சப் – இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட செய்தி, புகைப்படம் கிடைத்துள்ளது.
பொது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த தாக்குதல் தொடர்பாக இந்தியா டிவி வெளியிட்ட வீடியோ கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நெல்லையில் லஞ்சம் கேட்டதால் தாக்கப்பட்ட காவலர் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நெல்லையில் லஞ்சம் கேட்ட காவலரை தாக்கிய இளைஞர்; ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
