
Boldsky செய்தி இணையதளம் ஒன்றில், மசாஜ் செய்துகொள்ளும் பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவாக பார்த்து ரசித்த இளைஞன் என்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர். அது எங்கே நடந்தது, எப்போது நடந்தது என்று இல்லை. இதனால், இந்த செய்தி உண்மையா? அல்லது ஒரு கதையை செய்தியாக வெளியிட்டுள்ளார்களா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்…
முன்னணி செய்தி இணைய தளங்களுள் ஒன்றான ஒன் இந்தியாவின் boldsky.com பக்கத்தில் 2019 மே 28ம் தேதி இந்த செய்தி வெளியாகி உள்ளது. மசாஜ் செய்துகொள்ளும் பெண்ணை, மசாஜ் செய்த நபர் வீடியோ கால் மூலம் லைவாக தன்னுடைய நண்பருக்கு காட்டியுள்ளார். அந்த நண்பனோ, அரை நிர்வாணமாக இந்த காட்சியை நேரலையில் பார்த்து ரசித்திருக்கிறான், என்று இதில் எழுதியுள்ளனர். ஆனால், இந்த சம்பவம் எங்கே நிகழ்ந்தது, இதில் ஈடுபட்டவர்கள் யார் என்ற அடிப்படை விவரம் கூட குறிப்பிடப்படவில்லை. போல்ட் ஸ்கை வெளியிட்ட செய்தி என்பதால், இதுபற்றி முன்யோசனை எதுவும் இன்றி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முன்னணி செய்தி இணைய தளங்களுள் ஒன்று ஒன் இந்தியா. இதன் அழகு, ஆரோக்கியம், வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை அளிக்கும் தளம்தான் போல்ட்ஸ்கை. இதில், “மசாஜ் செய்துகொள்ளும் பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்” என்று ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பரபரப்பான செய்தி என்பதால், பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
தலைப்பில் மட்டுமின்றி செய்தியின் உள்ளேயும், இந்த சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்று ஒரு தகவலும் இல்லை. இதனால், இந்த செய்தி உண்மைதானா… அல்லது பரபரப்புக்காக புனையப்பட்ட ஒன்றா என்ற சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த செய்தி தொடர்பான ஆய்வை மேற்கொண்டோம்.
இது தொடர்பாக சமீபத்தில் செய்தி ஏதேனும் வெளியானதா என்று தேடினோம். ஆனால், இந்தியாவில் எங்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக செய்தி நமக்குக் கிடைக்கவில்லை. Boldsky செய்தியில் பயன்படுத்தப்பட்ட ஒரு படத்தில் “xiyue life” என்று இருந்தது. இதை வைத்து கூகுளில் தேடியபோது இது தொடர்பான செய்தி நமக்கு கிடைத்தது.
கடந்த மே 9ம் தேதி சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகையில் இந்த செய்தி முதலில் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளது. மத்திய சீனாவில் உள்ள ஹூபி மாகாணத்தில் உள்ள உஹான் நகரில் உள்ள Xiyue Life என்ற ஸ்பாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று லி என்ற பெண், மசாஜ் செய்வதற்காக வந்துள்ளார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழிந்த நிலையில், தன்னை நோக்கி ஒரு மொபைல் கேமரா வைக்கப்பட்டுள்ளதை அவர் பார்த்துள்ளார். உடனே, அதை எடுத்து பார்த்தபோது, மசாஜ் அனைத்தும் லைவ் ஆக ஒருவருக்குக் காட்டப்பட்டிருந்தது. அந்த நபர் அரை நிர்வாணத்திலிருந்தபடி மசாஜை பார்த்துள்ளார். கிட்டத்தட்ட 33 நிமிடங்கள் நேரலையில் மசாஜ் காட்சிகளை அந்த நபர் பார்த்திருக்கிறார்.
இது தொடர்பாக அந்த பெண், ஸ்பா நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அவர்கள், “மசாஜ் செய்துவிட்ட பெண் 16 வயதுக்கு கீழ் உள்ளவர். அதனால், அவர் மீது புகார் அளித்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால், நாங்கள் தரும் சீன பணம் 20,000 யென்னை (2900 டாலர்) வாங்கிக்கொண்டு அமைதியாக வேண்டும்” என்று கூறியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த பெண், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அவர்கள் வந்து கேமராவைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து சமூக ஊடகங்களில் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்பா நிர்வாகி சான் என்பவர் கூறுகையில், “மசாஜ் செய்துவிட்ட பெண்ணின் வயது 16தான். அவர் எங்கள் நிறுவனத்துக்கு பயிற்சிக்காக வந்தவர். அவர் தவறுதலாக தன்னுடைய நண்பருக்கு லைவ் வீடியோ கால் செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண், நாங்கள் தருவதாகக் கூறியதைவிட அதிக அளவில் இழப்பீடு தொகையை எதிர்பார்த்தார். எங்களால் அவ்வளவு தர முடியாது என்ற நிலையில், இதைப் பற்றி சமூக ஊடகங்களில் எழுதியுள்ளார்” என்றார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இனி போல்ட் ஸ்கை செய்திக்கு வருவோம்…
தலைப்பு, லீட், செய்தியின் எந்த ஒரு இடத்திலும் இந்த சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்று குறிப்பிடவில்லை. குறைந்தபட்சம், எந்த நாட்டில் இது நடந்தது என்றுகூட குறிப்பிட அவர்களுக்கு எண்ணம் வரவில்லை போலும். நம் ஊரில் நடந்தது போன்றே செய்தி சொல்லப்பட்டுள்ளது.
இதுதவிர, செய்தியின் இரண்டாவது பத்தியில், “நம்முடைய பர்சனல் செயல்களை கூட சூறையாடும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து நிற்கிறது. அப்படித்தான் ஒரு பெண் மசாஜ் சென்டருக்கு செல்லும் போது நேர்ந்த கொடுமையை பாருங்க. அரை நிர்வாண கோலத்தில் ஒரு ஆண் உள்ளே இருந்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளனர். இதைப் படிக்கும்போது, மசாஜ் செய்யும் இடத்தில் அரை நிர்வாணத்தில் ஒரு ஆண் அங்கே இருந்திருக்கிறார்… அல்லது அரை நிர்வாண கோலத்தில் மசாஜ் செய்யும் ஆண் அங்கே இருந்திருக்கிறார் என்று எண்ணவே தோன்றுகிறது.

உண்மையில், 16 வயது இளம் பெண் ஒருவர்தான் மசாஜ் செய்துள்ளார். அவர் தன்னுடைய மொபைலில் லைவ் போன் கால் மூலம் தன்னுடைய ஆண் நண்பருக்கு மசாஜ் நிகழ்வுகளை காண்பித்துள்ளார். கட்டுரையாளர் தொடர்ந்து எழுதும்போது, மொபைல் கேமரா லைவில் மசாஜை காட்டியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தியில் மற்றொரு இடத்தில், “இந்த சம்பவத்தை அந்த பெண் சமூக வலைத்தளங்களில் போட்டு அந்த மசாஜ் சென்டரை கிழித்துள்ளார். அவர்கள் செய்த செயலுக்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னுடைய பணம் 2,256 டாலரையும் அவர்கள் செட்டில் பண்ண வேண்டும் என்றும் முறையீட்டு உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதைப் படிக்கையில், மசாஜ் செய்வதற்கு 2256 டாலரை அந்த பெண் கட்டணமாக, அளித்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் அந்த பெண்ணுக்கு, அமெரிக்க டாலர் மதிப்பில் ரூ.2900 நஷ்ட ஈடு வழங்க சம்பந்தப்பட்ட ஸ்பா நிறுவனம்தான் முன் வந்துள்ளது. ஆனால், அந்த பெண் அதை வாங்க மறுத்திருக்கிறார்.

நாம் மேற்கொண்ட ஆய்வில் நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், இந்த சம்பவம் உண்மைதான். ஆனால் சீனாவில் நடந்துள்ளது உறுதியாகிறது.
முன்னணி செய்தித்தளம் நடத்தும் ஒன் இந்தியா, இப்படி எங்கே, எப்போது நடந்தது என்ற விவரம் ஏதுமின்றி, கட்டுக்கதை எழுதுவதுபோல ஒரு செய்தியை எழுதி பகிர்ந்துள்ளதை பார்க்கும்போது, அதிர்ச்சியாக உள்ளது. இது சீனாவில் நடந்தது என்று கூட குறிப்பிடாத இவர்கள் வெளியிடும் செய்திகளை உண்மை என நம்பி படித்தும், பகிர்ந்தும் வரும் வாசகர்களை நினைத்தால் கவலையாக உள்ளது.
இதுவரை நமக்குக் கிடைத்த ஆதாரங்களின்படி, குறிப்பிட்ட Boldsky செய்தியில் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட செய்தியில் நம்பகத்தன்மை இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மசாஜ் செய்துகொண்ட பெண்ணை நேரலையில் பார்த்து ரசிக்கும் இளைஞன்; boldsky செய்தி உண்மையா, கதையா?
Fact Check By: Praveen KumarResult: Mixture
