நிவாரண உதவியாக இரண்டு வாழைப் பழம் வழங்கிய பா.ஜ.க நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

கன மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு பா.ஜ.க-வினர் நிவாரண உதவி வழங்கியபோது எடுத்த படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

BJP 2.png

Facebook Link I Archived Link

படுக்கையில் அமர்ந்திக்கும் முதியவர் ஒருவருக்கு, கட்சிப் பிரமுகர்கள் நான்கு பேர் சேர்ந்து இரண்டு வாழைப் பழம் வழங்கும் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது, “கன மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு பா.ஜ.க-வினர் நிவாரண உதவிகளை வழங்கியபோது” என்று எழுதியுள்ளனர்.

நிலைத் தகவலில், “மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கியதாகத் தகவல்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, MKS For CM என்ற ஃபேஸ்புக் பக்கம் ஆகஸ்ட் 12, 2019 அன்று வெளியிட்டுள்ளது.

உண்மை அறிவோம்:

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார். அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் நீலகிரி சென்று பாதிப்புகளை பார்வையிட்டார். முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் நீலகிரி சென்றதும் அரசியல் ஆனது.

இந்த நிலையில், நீலகிரியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பா.ஜ.க சார்பில் உதவிகள் வழங்கப்பட்டதாக ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. அதில், நான்கு பேர் சேர்ந்து ஒருவருக்கு இரண்டு வாழைப்பழம் வழங்குகின்றனர். புகைப்படத்தில் உள்ளவர்களை பார்க்கும்போது தமிழகத்தைச் சார்ந்தவர்கள் போல இல்லை. அதிலும் ஒருவர் காங்கிரஸ் குல்லா மாட்டியிருக்கிறார். தமிழகத்தில், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூட குல்லா மாட்டுவது இல்லை.இதனால், படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படம் நீலகிரியில் எடுக்கப்பட்டது இல்லை, மிகவும் பழைய படம் என்று தெரிந்தது.

BJP 3.png

இந்த புகைப்படம் முதன் முதலில் யார், எப்போது வெளியிட்டார்கள் என்று கண்டறிய முடியவில்லை. ஓராண்டுக்கு மேலாகத் தொடர்ந்து இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

BJP 4.png

நம்முடைய தேடுதலின்போது இந்த புகைப்படம் கொண்ட ஆயிரக் கணக்கான பதிவுகள் நமக்குக் கிடைத்தன. வட இந்தியாவில் கட்சியினர் நிவாரண உதவி வழங்கியதாக ஒரு பதிவு கூறுகிறது, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியபோது எடுத்த படம் என்று மற்றொரு பதிவு கூறுகிறது.  அனைத்தையும் ஆய்வு செய்து, உண்மையில் இந்த படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது, படத்தில் இருப்பவர்கள் யார் என்று கண்டறிவது முடியாத காரியமாக இருந்தது.

நம்முடைய ஆய்வில் ஓராண்டுக்கு மேலாக மேற்கண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தற்போது நீலகிரியில் பெய்துவரும் கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோடியின் அறிவுரை அடிப்படையில் பா.ஜ.க-வினர் நிவாரண உதவியாக இரண்டு வாழைப் பழங்கள் வழங்கினார்கள் என்று எங்கோ, எப்போதோ எடுக்கப்பட்ட பழைய படத்தை பயன்படுத்தி தவறான தகவலை பரப்பியது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நிவாரண உதவியாக இரண்டு வாழைப் பழம் வழங்கிய பா.ஜ.க நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False