மாட்டிறைச்சி விவகாரம்: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு என்ன?

அரசியல் சமூக ஊடகம்

‘’உத்தரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு விதித்துள்ள தடையை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் வைரல் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை அறிய முடிவு செய்தோம். அதில், கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

தகவலின் விவரம்:

அவமானபட்டான் மொட்டையன்

Archived Link

இந்த பதிவில், யோகி ஆதித்யநாத் புகைப்படம் மற்றும் பெண் ஒருவரின் பாதங்களை இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன்மீது, ‘’அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு, உபியில் மாட்டிறைச்சி தடை உத்தரவை 10 நாளைக்குள் திரும்பப் பெறவேண்டும், இறைச்சி விற்பதும், உண்பதும் தனி மனித உரிமை, அதில் அரசு தலையிடக் கூடாது, யோகி ஆதித்யநாத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை,’’ என எழுதியுள்ளனர். ஏப்ரல் 9ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவை, இதுவரை 15000 பேர் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக கடந்த 2017 மார்ச் முதலாக, யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலியே, உத்தரப்பிரதேசத்தில், அறிவிக்கப்படாத மாட்டிறைச்சி தடை அமல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வெளியில் கேட்பவர்களிடம் சட்டவிரோதமாகச் செயல்படும் இறைச்சிக்கூடங்களை ஒழுங்குமுறை செய்கிறோம் எனக் கூறிவிட்டு, உள்ளுக்குள், மாட்டிறைச்சிக் கூடங்களையும், அதுசார்ந்த வியாபாரிகளையும் குறிவைத்து, உத்தரப்பிரதேச அரசு வேட்டையாடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மாட்டிறைச்சி மட்டுமின்றி, ஆடு, கோழி இறைச்சி விற்பனை கூட கடும் கட்டுப்பாடுகளை சந்திக்க நேரிட்டுள்ளது. மாட்டிறைச்சி விற்பவர்களை பாஜக.,வினர் பொதுவெளியில் வைத்து அடித்து நொறுக்குவதால், பலர் இறைச்சி விற்பனை செய்யவே பயப்படும் சூழல் உத்தரப்பிரதேசத்தில் நிலவுகிறது. இதுபற்றி, கடந்த 2017ம் ஆண்டே பலவித செய்திகள், வீடியோக்கள் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, பிபிசி வெளியிட்ட செய்தி ஒன்றை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இத்தகைய சூழலில்தான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. பாஜக மீதான கோபம், மோடி, யோகி ஆதித்யநாத் போன்றவர்களின் மீதான அதிருப்தி காரணமாக, இந்த பதிவை அதிகம் பேர் ஷேர் செய்துவருகின்றனர்.

இந்த பதிவில் கூறப்படுவதுபோல, அலகாபாத் நீதிமன்றம், மாட்டிறைச்சி தொடர்பாக உத்தரவு ஏதேனும் வெளியிட்டுள்ளதா என கூகுளில் தேடினோம். அப்போது, இதுதொடர்பாக, ஏராளமான செய்தி மற்றும் வீடியோ முடிவுகள் கிடைத்தன. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு சுவாரசியமான விவரம் இந்த தேடலில் கிடைத்தது. ஆம், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் கூறப்படுவதுபோல, அலகாபாத் உயர் நீதிமன்றம் மாட்டிறைச்சி தொடர்பாக, 2019ம் ஆண்டில், அதுவும் ஏப்ரல் மாதத்தில் எந்த உத்தரவையும், வெளியிடவில்லை. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஒன்று, கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், உத்தரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதே, வெளியிடப்பட்டதாகும்.

இதுபற்றி Scroll.in வெளியிட்டுள்ள விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். இந்த நீதிமன்ற உத்தரவில், உத்தரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு, கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாட்டிறைச்சிக்கு சட்டப்படி தடை எதுவும் விதிக்க முடியாது என்றும், உத்தரப்பிரதேச அரசுக்கு, நீதிபதிகள் அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அடுத்த 10 நாட்களுக்குள், அதாவது ஏப்ரல் 3, 2017ம் தேதி முதல், ஏப்ரல் 13, 2017ம் தேதிக்குள், மாட்டிறைச்சி தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு, ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்றும், நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.  

ஆனால், உத்தரப் பிரதேசத்தில், மாட்டிறைச்சிக்கு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டதாக, இந்த நீதிமன்ற உத்தரவிலோ அல்லது இதுபற்றி செய்திகளிலோ எதுவும் கூறப்படவில்லை. மாட்டிறைச்சி மீது அறிவிக்கப்படாத தடை கொண்டுவர யோகி ஆதித்யநாத் முயற்சி செய்வதாக மட்டுமே, நீதிமன்ற உத்தரவிலும், செய்திகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவிலோ, உத்தரப்பிரதேசத்தில் அமலில் உள்ள மாட்டிறைச்சி தடையை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாகவும், அடுத்த 10 நாட்களுக்குள் இதனை திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவை 2019,ஏப்ரல் 9ம் தேதி பகிர்ந்துள்ளனர்.

அதாவது, 2017ல் நடந்த ஒரு செய்தியை, 2 ஆண்டுகள் முடிந்தபிறகு, 2019ல் நடந்ததுபோல, சித்தரித்து, மறுபகிர்வு செய்துள்ளனர். இவர்கள் சொல்வது போல, உத்தரப் பிரதேசத்தில், மாட்டிறைச்சிக்கு அதிகாரப்பூர்வ தடை எதுவும் இல்லை. மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுவதற்கு மட்டுமே தடை உள்ளது. அதேசமயம், மாட்டிறைச்சி இறக்குமதி செய்யவோ, அதைப் பயன்படுத்தவோ தடை எதுவும் கிடையாது. இதுவும் யோகி ஆதித்யநாத் அரசால் ஏற்படுத்தப்படவில்லை. கடந்த 1955ம் ஆண்டிலேயே அமல்படுத்தப்பட்டுள்ள சட்டமாகும். இந்த உத்தரவின் விவரம் அறிய, இங்கே கிளிக் செய்யவும். ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

அதேபோல, நாம் ஆய்வு செய்யும் பதிவில் உள்ளதுபோல, இறைச்சி உண்பதும், விற்பதும் தனி மனித உரிமை, அதில் அரசு தலையிடக்கூடாது என, நீதிமன்றம் கூறியுள்ளதாகக் கூறப்படும் வரிகள் உண்மைதான். ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இவ்வாறு, பாதி உண்மை, பாதி தவறான செய்தி கலந்து, இந்த பதிவை பகிர்ந்துள்ளனர். எனவே, இது படிப்பவர்களை குழம்பச் செய்வதாக உள்ளது. இது 2 ஆண்டுகள் பழைய செய்தி என்றுகூட அறியாமல், இதன் உண்மையை பற்றி யோசிக்காமல் பலரும் வைரலாக பகிர்ந்துவருகின்றனர்.

எனவே, இந்த பதிவில் நம்பகத்தன்மை இல்லை என உறுதி செய்யப்படுகிறது. இது படிப்பவர்களை தவறாக வழிநடத்தக்கூடியதாகவும் உள்ளது.

முடிவு:

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் பாதி உண்மையும், பாதி தவறான செய்தியும் கலந்துள்ளது என உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:மாட்டிறைச்சி விவகாரம்: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு என்ன?

Fact Check By: Parthiban S 

Result: Mixture

 • 2
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2
  Shares