இம்போர்டட் வீல்சேர் இலவசமாக வழங்கப்படுகிறதா? – வதந்தியால் விபரீதம்!

சமூக ஊடகம் சமூகம்

மத்திய அரசின் நிப்மெட் நிறுவனத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வீல் சேரை மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது என்று ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்…

தகவலின் விவரம்:

40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்… மத்திய அரசு இல‌வ‌ச‌மா குடுக்குது. தேவை இருக்கிறவ‌ங்க நேர்ல‌போய்… வ‌ருமான‌ சான்றித‌ழ், ரேஷ‌ன் கார்ட், மாற்றுதிறனாளி அடையாள‌ அட்டை குடுத்து வாங்கிக்க‌லாம்.

இட‌ம் : National institute

for empowerment of persons with multiple disabilities, muttukadu, Chennai.

http://niepmd.tn.nic.in/schemes.php

ஒரு ஷேர் பண்ணிவிடுங்க. யாருக்காவது உபயோகப்படும் !!!

Archived link

40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட வீல் சேர் வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். ஒரு ஷேர் செய்துவிடுங்கள் யாருக்காவது உபயோகப்படும் என்று தெரிவித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகள் யாருக்காவது பயன்படட்டுமே என்ற எண்ணத்தில் பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு ஆட்டோமேடிக் வீல் சேர் வழங்கப்படுகிறது என்ற தகவலில் அதற்கு ஆதாரமாக லிங்க் ஒன்றை அளித்துள்ளனர். இந்த பதிவில் இடம் பெற்றிருந்த லிங்கை கிளிக் செய்தோம்.

அது சென்னை முட்டுக்காட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நிப்மெட் என்ற அரசு நிறுவனத்தின் இணைய தளம்தான். அதில், உதவி பெறுவது பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர்,டிரை சைக்கிள் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. வருமான சான்றிதழ், இறுப்பட சான்றிதழ், மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் விண்ணப்பித்தால் உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இம்போர்டட் வீல் சேர் பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை.

NIEPMED 2.png
NIEPMED 3.png

இது குறித்து நிப்மெட் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள போன் நம்பரைத் தொடர்பு கொண்டு பேசினோம். சோஷியல் வொர்க் துறையைச் சேர்ந்த மெலின் என்பவர் நம்மிடம் பேசினார். “ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்டட் ஆட்டோமேடிக் வீல் சேர் வழங்குவதாக பரவும் தகவல் வதந்திதான். இங்கே மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அந்த பதிவில் குறிப்பிட்டது போன்ற இறக்குமதி செய்யப்பட்ட வீல் சேர் எல்லாம் இல்லை. சாதாரண தள்ளும்படியான வீல்சேர் வழங்கப்படுகின்றன. அதுவும் தற்போது எங்களிடம் ஸ்டாக் இல்லை.

இந்த வதந்தியை பார்த்துவிட்டு கார், ஆட்டோ பிடித்து எல்லாம் நிறைய பேர் வந்து ஏமாற்றம் அடைகின்றனர். வருபவர்கள் சாதாரண வீல் சேர் ஆவது தாருங்கள் என்கின்றனர். நிப்மெட்டில் வழங்கப்படும் உதவிகளைப் பெறக் கூட முதலில் யாரும் நேரில் வர வேண்டாம். எங்கள்  044 – 27472104, 27472113 என்ற போன் நம்பரைத் தொடர்புகொண்டு, ஸ்டாக் உள்ளதா என்பதை தெரிந்துகொண்டு தகுந்த ஆவணங்களுடன் வருவது நல்லது” என்றார்.

ஃபேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக தீபக் நாதன் என்பவர் வெளியிட்ட பதிவும் கிடைத்தது. அதில் இந்த தகவல் தவறு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Archived link

இந்த பதிவுக்கு டாக்டர் ஜான் முருகசெல்வம் என்பவர் பதில் அளித்திருந்தார். அதில், ஆட்டோமேடிக் வீல் சேர் தொடர்பான பதிவு வதந்தி என்று நிப்மெட் குறிப்பிட்டுள்ளதாக போட்டோ ஒன்றும் இருந்தது. மேலும், இதன் பின்விளைவுகளுக்கு வதந்தியை பரப்பியவர்களே பொறுப்பு என்றும் குறிப்பிட்பட்டுள்ளது.

NIEPMED 4.png

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நிம்பெட் நிறுவனத்தில் உதவிகள் வழங்கப்படுவது உண்மைதான். ஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற படத்தில் உள்ளது போன்ற இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டோமேடிக் வீல் சேர் வழங்கப்படவில்லை என்பது உறுதியாகிறது.

முடிவு

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட வீல் சேர் இலவசமக வழங்கப்படுகிறது என்ற மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:இம்போர்டட் வீல்சேர் இலவசமாக வழங்கப்படுகிறதா? – வதந்தியால் விபரீதம்!

Fact Check By: Praveen Kumar 

Result: False