
கோவையில் கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டதாக மீடியாக்கள் வதந்தி பரப்பி வருகின்றன என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில் கோவையில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் கொரோனா தேவி சிலைக்கு பூஜை செய்யும் படத்துடன் தமிழில் டைப் செய்யப்பட்ட பதிவு இருந்தது. அதில், “கொரோணா தேவி என எங்கும் எழுதபடவில்லை மீடியாக்கல் பரப்பிவிட்டது , இது நவகிகிரக நாயகி சிலை , மீடியா வின் கீழ் தரமான பிரச்சாரம் தொடரும் ஹிந்துக்கள் விழித்துக்கொள்ளாத வரை” என்று கூறப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதை ஃபேஸ்புக்கில் யாராவது ஷேர் செய்துள்ளார்களா என்று பார்த்தோம். கிஷோர் கே சுவாமி என்ற நபர் வெளியிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட்டை Ajay Krishna என்ற நபர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 20 மே 2021 அன்று பதிவிட்டிருந்தார். பலரும் அதை ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது.
உண்மை அறிவோம்:
கொரோனாவை ஒழிக்க கோவையில் கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகின. எல்லா ஊடகங்களும் இது தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தன. வலதுசாரி ஆதரவு தினமலரிலும் கூட அந்த செய்தி வெளியாகி இருந்தது.
சிலை அமைக்கப்பட்டது மற்றும் பூஜை தொடர்பாக காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வரா ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “கோவிட்19 என்ற வைரஸ், மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இதை மனதில் வைத்து, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம். பிளேக் நோய் பரவியபோது, பிளேக் மாரியம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு வழிபடப்பட்டது. காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்களின்போது, தங்களை காப்பாற்ற, அம்மனை வழிபட்டது வரலாறு.

அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive 1 I vikatan.com I Archive 2
கடவுள் மட்டுமே ஒரே நம்பிக்கை என்ற நிலையில், இதுபோல சிலைகள் வடிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. அதே மாதிரிதான், கொரோனாவின் கோரத் தாண்டவத்தை நிறுத்த, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம். 48 நாட்கள் மகா யக்ஞம் நடத்தி, வழிபடுவோம். பக்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் பூஜையில் கலந்து கொள்ள அனுமதியில்லை. கோவில் பூசாரிகள் மட்டுமே பூஜைகள் நடத்துவார்கள். மாரியம்மன், மாகாளியம்மன் வழிபாட்டை போலவே, கொரோனா தேவி வழிபாடும் முக்கியமானது” என்று கூறியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான வீடியோக்களை ஆய்வு செய்தோம். அப்போது காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வரா பேட்டியை ஒரு ஊடகம் வெளியிட்டிருந்தது. அதில் இந்த சிலை ஏன் அமைக்கப்பட்டது, அதற்கான பூஜைகள் பற்றி அவர் விரிவாக பேசுவதைக் காண முடிந்தது. மேலும், கொரோனா தேவிக்கு பூஜை செய்வதையும் கேட்க, காண முடிந்தது.
நம்முடைய ஆய்வில் கொரோனா தேவிக்கு சிலை அமைத்து பூஜை செய்வதாக காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வரா அளித்த வீடியோ பேட்டி ஆதாரம் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கொரோனா தேவிக்கு சிலை அமைக்கப்பட்டது உண்மைதான் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கோவையில் கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டது என்று ஊடகங்கள் வதந்தி பரப்பியதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கொரோனா தேவி சிலை நிறுவப்பட்டதாக ஊடகங்கள் வதந்தி பரப்பியதா?
Fact Check By: Chendur PandianResult: False
