FACT CHECK: போப் தன் தாய் மண்ணுக்கு முத்தமிட்ட புகைப்படமா இது?

இந்தியா சமூக ஊடகம் சர்வதேசம்

போப் தன்னுடைய தாய் மண்ணை வணங்கினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

போப் 2ம் ஜான் பால் தரைக்கு முத்தமிடும் புகைப்படத்தைப் பயன்படுத்திப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “போப் தன் தாய் மண்ணை வணங்கிய நிகழ்வு! போப்-க்கு தெரிவது இங்குள்ள டூப்-க்கு தெரிவதில்லை!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடக பிரிவு தஞ்சை தெற்கு என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த பதிவை 2021 ஜூலை 24ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் என்று கருதப்படும் போப் தன்னுடைய சொந்த நாட்டு மண்ணுக்கு முத்தமிட்டார். ஆனால், இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த மண்ணை மதிக்காமல் உள்ளனர் என்ற வகையில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த அரசியலுக்குள் நாம் செல்லவில்லை. போப் 2ம் ஜான் பால் தரைக்கு முத்தமிடும் புகைப்படம் அவரது தாய்நாட்டில் எடுக்கப்பட்டதா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Search Link I nytimes.com I Archive 1 I latimes.com I Archive 2

புகைப்படத்தில் இருப்பது முன்னாள் போப் இரண்டாம் ஜான் பால் ஆவார். போப் இரண்டாம் ஜான் பால் எந்த ஒரு நாட்டுக்குச் சென்றாலும் தரையிறங்கியதும் முதலில் அந்த நாட்டு மண்ணுக்கு முத்தமிடுவது வழக்கமாக வைத்திருந்தார். அவரை பின்பற்றி இப்போது போப் ஆக உள்ள பிரான்சிசும் தரைக்கு முத்தமிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

போப் இரண்டாம் ஜான் பால் தரையை முத்தமிட்டார் என்று கூகுளில் டைப் செய்து தேடினால் பல நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதும், அந்த நாட்டுத் தரையில் கால் வைத்ததும் தரையை முத்தமிட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் நிறைய நமக்குக் கிடைத்தன. 1986ம் ஆண்டு முதன் முறையாக இந்தியா வந்த போதும் இந்திய மண்ணை அவர் முத்தமிட்டதாகவும் செய்திகள் நமக்கு கிடைத்தன.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் தன் தாய் மண்ணை போப் முத்தமிட்ட நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளனர். இரண்டாம் ஜான் பாலின் சொந்த நாடு போலந்து. இந்த புகைப்படம் போலந்தில் எடுக்கப்பட்டதா என்று பார்த்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் பல ஆண்டுகளாக பல செய்தி ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று தொடர்ந்து தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 1993ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி லித்துவேனியா நாட்டுக்கு சென்ற போது விமான நிலையத்தில் தரைக்கு முத்தமிட்டார் என்ற தகவல் நமக்கு கிடைத்தது. லித்துவேனியா என்பது ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இது போப் இரண்டாம் ஜான் பாலின் சொந்த நாடான போலந்துக்கு பக்கத்து நாடாகும்.

அசல் பதிவைக் காண: eastnews.ua I Archive

நம்முடைய ஆய்வில், போப் இரண்டாம் ஜான் பால் தன் சொந்த நாடான போலந்து உள்பட தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகளில் எல்லாம் தரை இறங்கியதும் தரைக்கு முத்தம் கொடுத்தது தொடர்பான செய்திகள், படங்கள், வீடியோக்கள் கிடைத்துள்ளன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தரைக்கு முத்தமிடும் புகைப்படம் லித்துவேனியா நாட்டில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் போப் இரண்டாம் ஜான் பால் தன் சொந்த நாடு என்பதற்காக தரையில் முத்தமிட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

போப் ஜான் பால் தன் தாய் நாட்டின் மண்ணை முத்தமிட்டார் என்று பகிரப்படும் படம் போலந்தில் எடுக்கப்பட்டது இல்லை, லித்துவேனியாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:போப் தன் தாய் மண்ணுக்கு முத்தமிட்ட புகைப்படமா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •