
நடிகை காயத்ரி ரகுராம் மது அருந்துவதை நிறுத்திவிட முடிவு செய்துள்ளதாக ட்வீட் பதிவு வெளியிட்டார் என ஒரு ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரவே, அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும் நடிகரும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் வெளியிட்டது போன்ற ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் மற்றும் முன்பு அவர் வாகன தணிக்கையின் போது அவர் சிக்கிய போது வெளியான செய்தியின் ஸ்கிரீன்ஷாட் இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. ட்வீட் பதிவில், “இன்றில் இருந்து சரக்கடிப்பதை நிறுத்தலாம் என முடிவு செய்து உள்ளேன்” என்று உள்ளது.
நிலைத் தகவலில், “குடிபோதையில் வண்டி ஓட்டிய இந்த கேஸ் என்னாச்சு?” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை ஜெயராமன் திமுக என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 மே 19 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2018ம் ஆண்டு நடிகை காயத்ரி ரகுராம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், “நான் மது அருந்தவில்லை. சளிக்கு டானிக் அருந்தியிருந்தேன்” என்று காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், “இன்றில் இருந்து சரக்கடிப்பதை நிறுத்தலாம் என முடிவு செய்து உள்ளேன்” என்று காயத்ரி ரகுராம் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும் அவர் சொந்த பணத்தில் வாங்கி குடிக்கிறார் என்று கூறியதாக ட்வீட் பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இவை உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: puthiyathalaimurai I Archive
காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தபோது, அதில் அப்படி எந்த பதிவும் இல்லை. அதே நேரத்தில் அவருடைய பெயர், ஐ.டி-யை நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு Gayathri Raguramm என்ற பெயருடனும் @BJP_Gayathri_R ஐடியுடனும் இருந்தது.
ஆனால், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவின் ஐடி வித்தியாசமாக இருக்கவே இது போலியான கணக்காக இருக்கும் என்று தெரிந்தது. எனவே, அதைத் தேடினோம். Gayathri Rahuramm என்ற பெயரில், @GRahuramm என்ற ஐ.டி-யில் போலியாக ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் இருப்பது தெரிந்தது.

அதை ஆய்வு செய்தபோது அதில், “இன்றில் இருந்து சரக்கடிப்பதை நிறுத்தலாம் என முடிவு செய்து உள்ளேன்” என்று பதிவு வெளியாகி இருப்பது தெரிந்தது. இதன் மூலம் காயத்ரி ரகுராம் பெயரில் இயங்கும் போலியான அக்கவுண்டில் இருந்து இந்த பதிவு வெளியாகி இருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Twitter I Archive
அந்த அக்கவுண்டை பார்க்கும்போது காயத்ரி ரகுராமுக்கு எதிராக, அவரை விமர்சித்து, அவரை கிண்டல் செய்து பல பதிவுகள் வெளியாகி இருப்பதை காண முடிந்தது. அதே நேரத்தில் காயத்ரி ரகுராமின் அசல் அக்கவுண்டை பார்த்தபோது செய்தி ஊடகங்களில் காயத்ரி ரகுராமனின் கருத்தாக வெளியிடப்படும் பல்வேறு பதிவுகளைக் காண முடிந்தது.
அடுத்ததாக நாராயணன் திருப்பதியின் ட்வீட் பதிவைத் தேடினோம். அதுவும் போலியான அக்கவுண்டில் வெளியாகி இருப்பது தெரிந்தது. இந்த அக்கவுண்ட் போலியானது என்று ஏற்கனவே நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

அசல் பதிவைக் காண: Twitter I Archive
நம்முடைய ஆய்வில், பிரபலங்கள் பெயரில் அச்சு அசலாக போலியான ட்விட்டர் அக்கவுண்ட் உருவாக்கி தவறான தகவலை வெளியிடுவதும், அதை உண்மையில் காயத்ரி ரகுராம், நாராயணன் திருப்பதிதான் கூறினார்கள் என்று ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பி வருவதும் உறுதியாகி உள்ளது.
இவற்றின் அடிப்படையில் இந்த பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
காயத்ரி ரகுராம் பற்றி பரவும் ட்வீட் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இனி மது அருந்தமாட்டேன் என்று காயத்ரி ரகுராம் ட்வீட் வெளியிட்டாரா?
Fact Check By: Chendur PandianResult: False
