FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

கோவையில் உடைக்கப்பட்டவை தேச துரோகிகளுடைய கடைகள்தான் என்று வானதி ஶ்ரீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

வானதி ஶ்ரீனிவாசன் புகைப்படத்துடன் கூடிய Simplicity.in என்ற இணைய ஊடகத்தின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உடைக்கப்பட்டவை தேசதுரோகிகளுடைய கடைகள்தான். யோகிஜியை வரவேற்க இதை கூட செய்யாமல் இருந்தால்தான் தவறு – வானதி ஶ்ரீனிவாசன்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்த நியூஸ் கார்டை அப்துல் காதர் என்பவர் 2021 ஏப்ரல் 1, 2021 அன்று பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவைக்கு வந்ததைத் தொடர்ந்து பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தமிழர்களுக்கு இந்து கலாச்சாரம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும், தமிழக கோவில்களுக்கு பலரும் வருவதால் அதன் புனிதம் பாதிக்கப்படுகிறது என்று கூறியதாக எல்லாம் வதந்தி பரப்பப்பட்டது. 

யோகி ஆதித்யநாத் வருகையையொட்டி அவரை வரவேற்கச் சென்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில கடைகள் முன்பு போராட்டம் நடத்தினர். பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பா.ஜ.க வேட்பாளர் வானதி ஶ்ரீனிவாசன் ஆதரவு தெரிவித்ததாக கருத்து பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் இந்த நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கும்போதே தெரிந்துகொள்ள முடிகிறது. வானதி ஶ்ரீனிவாசனின் கருத்து உள்ள பகுதியை அரைகுறையாக எடிட் செய்து மாற்றியிருப்பது நன்கு உற்று கவனித்தால் தெரிந்துகொள்ள முடிகிறது. இது போலியானது என்பதை உறுதி செய்ய சிம்ப்ளிசிட்டி தளத்தில் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். அவர்கள் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டுகளை பார்த்தோம். அதில், “கமல் லிப் சர்வீஸ் தான் செய்வார்” என்று வானதி பேசியதை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தனர். இந்த நியூஸ் கார்டை எடிட் செய்திருப்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I simplicity.in I Archive 2

இது தொடர்பாக சிம்பிளிசிட்டி தளத்தை தொடர்புகொண்டு கேட்டோம். அவர்களை வாட்ஸ் அப் (+91 95858 55577) மூலம் தொடர்புகொண்டு கேட்ட போது. இது போலியானது என்று கூறி, இது தொடர்பாக அவர்கள் தளத்தில் வெளியான செய்தியையும் கொடுத்தனர். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.

இது தொடர்பாக வானதி ஶ்ரீனிவாசன் கருத்து எதுவும் தெரிவித்துள்ளாரா என்று பார்த்தபோது, அப்படி எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. வானதியைத் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவர் நம்முடைய தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசியபோது, வானதி இவ்வாறு கூறவில்லை என்றனர்.

இதன் அடிப்படையில் கோவையில் தேச துரோகிகளின் கடைகள்தான் தாக்கப்பட்டது என்று வானதி ஶ்ரீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கோவையில் தேச விரோதிகளின் கடைகளே தாக்கப்பட்டது என்று வானதி ஶ்ரீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

2 thoughts on “FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

  1. ஒரு போஸ்ட்டின் உண்மைதன்மை அறிந்து கொள்ள உங்களுக்கு எப்படி அனுப்புவது குறித்து விளக்கமுடியுமா?

Comments are closed.