10 ஆண்டுகளுக்குப் பிறகும் அழுகாத இஸ்லாமிய அறிஞர் உடல் என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

மலேசியாவில் மழை வெள்ளம் காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட இஸ்லாமிய அறிஞர் உடல் கல்லறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது என்றும், உடல் அழியாமல் புதிதாக இருந்தது என்றும் ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சடலம் ஒன்றின் மீது போர்த்தப்பட்டிருந்த துணிகள் மற்றும் பாலிதின் உறைகள் அகற்றப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மலேசியாவில், வெள்ளம் காரணமாகக் கல்லறைகளை வேறு இடத்திற்கு மாற்றவேண்டியிருந்தபோது, ​​​​10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒரு இளம் ஹாஃபிள்(குர்ஆன் மனனம் செய்தவர்) கல்லறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டபோது இறைவன் நம் அனைவருக்கும் நல்ல மரணத்தை தருவானாக” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வீடியோவை தக்கலை செய்திகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 செப்டம்பர் 18ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மலேசியாவில் மழை வெள்ளம் காரணமாக கல்லறைகளை வேறு இடத்துக்கு மாற்றினார்கள் என்ற தகவல் வித்தியாசமாக இருந்தது. உடல் மண்ணோடு மண்ணாக வேண்டும் என்பதற்காக அடக்கம் செய்யப்படுகிறது. மழை வெள்ளம் வடிந்ததும் கல்லறைகள் காய்ந்துவிடப் போகிறது… இதற்கு எதற்காக கல்லறைகளைத் திறந்து, அதில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் உடலை வெளியே எடுத்து வேறு இடத்தில் வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுவ, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, சாலை அகலப்படுத்தும் பணிக்காக இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் கல்லறை திறக்கப்பட்டது என்று இந்த வீடியோவை பல ஆண்டுகளாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது. மேலும், இந்தோனேஷியாவில் பாலித் தீவுகளில் 2002ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு 2008ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இமாம் சமுத்ரா (Imam Samudra) என்பவரின் அழியாத உடல் என்றும் பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்திருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடிய போது, வீடியோவில் இருப்பது இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவைச் சார்ந்த பயங்கரவாதி என சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யாசர் பின் எம்.தம்ரின் (Yaser Bin M. Thamrin) என்பவரது உடல் என்று சில பதிவுகள் நமக்குக் கிடைத்தன. எனவே, யாசர் பின் எம். தம்ரின், மேற்கு ஜாவா என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ தொடர்பாக இந்தோனேஷிய போலீஸ் வெளியிட்டிருந்த விளக்கம் தொடர்பான செய்தி நமக்கு கிடைத்தது.

அதில், “வீடியோவில் இருப்பது யாசர் பின் தம்ரின் பயங்கரவாத குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையிலிருந்த குற்றவாளி ஆவார். அவர் உடல் நலக் குறைவு காரணமாக 2018ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி உயிரிழந்தார். இமாம் சமுத்ராவின் உடல் என்று பரவும் தகவல் தவறானது” என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: detik.com I Archive 1 I republika.co.id I Archive 2

மேலும், இந்தோனேஷிய போலீஸ் தரப்பில், சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ தவறானது என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிடப்பட்டிருப்பதும் தெரிந்தது. அதை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதிலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கல்லறையில் இருந்த இமாம் உடல் என்று பரவும் தகவல் தவராறனது. இது 2018ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி உயிரிழந்த பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் யாசர் பின் தம்ரின் என்பவரின் உடல் என்று குறிப்பிட்டிருந்தனர். ஃபேஸ்புக்கில் அந்த வீடியோ 2018ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதாவது, யாசிர் இருந்த ஒரு சில நாட்களில் இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது.

இதன் மூலம், மலேசியாவில் இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் உடல் வெள்ளம் காரணமாக இடம் மாற்றம் செய்ய வெளியே எடுக்கப்பட்டது என்றும், அந்த உடல் அழியாமல் உயிருள்ள நபர் உடல் போல இருந்தது என்றும் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மலேசியாவில் வெள்ளம் காரணமாக வெளியே எடுக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த இஸ்லாமிய அறிஞரின் உடல் என்று பரவும் வீடியோ, 2018ல் உடல் நலக் குறைவால் உயிரிழந்த பயங்கரவாதி என்று கைது செய்யப்பட்ட நபருடையது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:10 ஆண்டுகளுக்குப் பிறகும் அழுகாத இஸ்லாமிய அறிஞர் உடல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False