
பஞ்சாபிகள் இந்தி எதிர்ப்பில் குதித்தார்கள் என்று ஒரு புகைப்படத் தொகுப்பு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2
பெயர்ப் பலகையில் இந்தி, ஆங்கில மொழியை கருப்பு பெயிண்ட் பூசி அழிக்கும் போராட்ட புகைப்படங்களை தொகுத்து பதிவிட்டுள்ளனர். அதில், “காலம் கடந்தாலும் பஞ்சாபிகள் விழித்து கொண்டார்கள். தன் மொழி காக்க, இந்தி எதிர்ப்பு பஞ்சாபில்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Kingdom Joker – பாணபத்திர ஓணாண்டி என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஜனவரி 9ம் தேதி வெளியிட்டுள்ளது. ஏராளமானோர் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விவசாய சட்டத்தை எதிர்த்து சீக்கியர்கள் மிகக் கடுமையாக போராடி வரும் நிலையில், தன் மொழி காக்க இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள பஞ்சாபிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தைப் பார்க்கும்போது உண்மையானதாக, தெரிகிறது.
அதே நேரத்தில் இந்தியுடன் சேர்த்து ஆங்கிலத்திற்கும் கருப்பு பெயிண்ட் பூசப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், தற்போது இந்தி எதிர்ப்பு போராட்டம் பஞ்சாபில் நடந்து வருவதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகாத நிலையில், இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படங்கள் எல்லாம் 2017ல் எடுக்கப்பட்டவை என்பது தெரியவந்தது.
அப்போது வெளியான செய்தியைப் பார்த்தோம். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழிகாட்டி பெயர்ப் பலகைகளில் இந்தி, ஆங்கிலம் அதற்குப் பிறகுதான் பஞ்சாபி மொழியில் எழுதப்பட்டிருந்தது. இது பஞ்சாபி மொழியைத் தாழ்த்துவது போல உள்ளது என்றும் எனவே, முதலில் பஞ்சாபி மொழி வர வேண்டும் என்றும் அப்போது நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த நிதின் கட்கரிக்கு சீக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சீக்கிய அமைப்புகள் பெயர் பலகையிலிருந்த இந்தி, ஆங்கில எழுத்துக்களைக் கருப்பு பெயிண்டால் அழித்தனர் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பான வீடியோக்களும் நமக்கு கிடைத்தன.
2017 அக்டோபர் 22ம் தேதி வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தியில் போராட்டத்தை நடத்திய மால்வா யூத் ஃபெடரேஷன் லேகா சித்தானா மற்றும் தால் கால்சா அமைப்பின் துணைத் தலைவர் ஹர்தீப் சிங் மேஹ்ராஜ் ஆகியோரின் பேட்டியை வெளியிட்டிருந்தது.
அதில், “பஞ்சாபில் பஞ்சாபி மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இங்கே இந்தி, ஆங்கிலத்துக்கு கீழ் பஞ்சாபியில் எழுதப்பட்டுள்ளது. எங்கள் மொழிக்கு எதிராக இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கைவிட வேண்டும். எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சில பெயர்ப் பலகைக்கு பெயிண்ட் பூசினோம். நாங்கள் எந்த ஒரு மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. எங்கள் பஞ்சாபி மொழிக்கு உரிய மரியாதை கொடுக்கும்படி மட்டுமே கேட்கிறோம்” என்று கூறியிருந்தனர்.

அசல் பதிவைக் காண: timesofindia.indiatimes.com I Archive 1 I tribuneindia.comI Archive 2
பஞ்சாபி சீக் சங்கத் என்ற அமைப்பு வெளியிட்டிருந்த செய்தியில், “நாங்கள் எல்லா மொழியையும் மதிக்கிறோம். எங்கள் மொழிக்கு உரிய மரியாதை அளிக்கக் கேட்கிறோம். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் கருப்பு பெயிண்ட் பூசும் போராட்டம் நடத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: punjabisikhsangat.org I Archive
இதன் மூலம் பஞ்சாபிகள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கவில்லை, பஞ்சாபி மொழியை முதலில் வைத்துவிட்டு அதன் பிறகு இந்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகை அமைக்க வேண்டும் என்று மட்டுமே கூறுவது உறுதியாகிறது. மேலும் இந்த போராட்டம் தற்போது நடக்கவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தை தற்போது நடந்தது போலக் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில், இந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் பஞ்சாபிகள் இறங்கியுள்ளார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தேசிய நெடுஞ்சாலை பெயர்ப் பலகையில் பஞ்சாபி மொழிக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என்று 2017ல் நடந்த போராட்டத்தை தற்போது நடந்தது போல சமூக ஊடகங்களில் தவறாகப் பகிர்ந்து வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:டெல்லி முற்றுகையை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கிய பஞ்சாப் மக்கள்?
Fact Check By: Chendur PandianResult: False
