
ரஜினிகாந்த் கட் அவுட்டுக்கு அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யும்போது, சாலையில் தேங்கிய அதை மூதாட்டி ஒருவர் அருந்துவது போன்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
ரஜினிகாந்த் படத்துக்கு அவரது ரசிகர்கள் பால் ஊற்ற, சாலையில் கழிவு நீருடன் கலந்த அதை மூதாட்டி ஒருவர் எடுத்து அருந்துவது போல புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “2020ல் என்னை மிகவும் பாதித்த புகைப்படம்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை Creativity பிருந்தாவனம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Senthilkumar M என்பவர் 2021 ஜனவரி 10 அன்று பதிவிட்டுள்ளார். ஆயிரக் கணக்கானோர் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தனித்தனிப் படத்தை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். ஆனால், பார்க்க ரஜினிகாந்த் படத்தின் மீது ஊற்றப்பட்ட பால் கீழே கொட்டுவது போல் உள்ளது. 2020ம் ஆண்டு எடுக்கப்பட்டது போல பதிவிடப்பட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

இரண்டும் தனித்தனிப்படங்கள் என்பது தெரிந்ததால், முதலில் ரஜினிகாந்த் படத்தை மட்டும் தனியாக எடுத்து ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அந்த புகைப்படம் 2018ம் ஆண்டு ‘காலா’ படம் வெளியான போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. எக்கனாமிக் டைம்ஸ் இந்த புகைப்படத்தை 2018 ஜூன் 8ம் தேதி வெளியிட்டிருந்தது.
அதில், “காலா படம் வெளியாவதையொட்டி ரஜினிகாந்த் ரசிகர்கள் சென்னையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், இந்த புகைப்படத்தை பிடிஐ செய்தி நிறுவனம் எடுத்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர். 2018ல் வெளியான மேலும் பல செய்திகளில் இந்த புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

அசல் பதிவைக் காண: indiatimes.com I Archive 1 I hindustantimes.comI Archive 2
அடுத்ததாக சாலையில் தேங்கிய கழிவு நீரை மூதாட்டி அருந்தும் புகைப்படம் எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
அப்போது அந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தெளிவான தகவல் கிடைக்கவில்லை. ஆனால், 2016ம் ஆண்டில் இருந்து அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. சில தெளிவான படங்களும் கிடைத்தன. அதைப் பெரிதுபடுத்திப் பார்த்த போது இருசக்கர மோட்டார் வாகனம் ஆந்திரப்பிரதேச பதிவு எண் கொண்டிருப்பது தெரிந்தது. எனவே, இது ஆந்திராவில் எடுக்கப்பட்டிருக்கலாம். இதன் மூலம் பழைய புகைப்படங்களை எடுத்து ஒன்று சேர்த்து 2020ல் எடுக்கப்பட்டது போன்று பதிவிட்டு வருவது உறுதியாகிறது.

அசல் பதிவைக் காண: reddit.com I Archive 1 I twitter.com I Archive 2
இந்த புகைப்படத்தை பதிவிட்டவர் 2020ல் தன்னை மிகவும் பாதித்த படம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனுடன் இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டது இல்லை என்றும், இரண்டு புகைப்படங்களும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருக்க வேண்டும். மேலும், இரண்டும் வெவ்வேறு படங்கள், ஒரு ஒப்பீடு என்று பதிவாளர் குறிப்பிட்டிருந்தால் பிரச்னை எழுந்திருக்காது.
ஆனால், இரண்டு புகைப்படத்தை ஒன்றிணைத்து 2020ம் ஆண்டு நடந்தது போல் பதிவிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், பார்வையாளர்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பதும் தெளிவாகிறது.
முடிவு:
ரஜினிகாந்த் படத்துக்கு பால் ஊற்றும் புகைப்படம் மற்றும் சாலையில் தேங்கிய தண்ணீரை மூதாட்டி அருந்தும் புகைப்படம் 2020ல் எடுக்கப்பட்டது இல்லை, இரண்டும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு ஆண்டுகளில் எடுக்கப்பட்டது என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ரஜினிகாந்த் படத்தின் மீது ஊற்றிய பால்… சாலையில் தேங்கிய நீரை அருந்திய மூதாட்டி… உண்மை இதோ!
Fact Check By: Chendur PandianResult: Missing Context
