விஜயா மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவைசிகிச்சை நடைபெற உள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஏ4 ஷீட் ஒன்றில் பிரிண்ட் செய்யப்பட்ட தகவலை புகைப்படமாக எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், "நவம்பர் 28-ம் தேதியிலிருந்து டிசம்பர் 5-ம் தேதி வரை குழந்தைகளுக்கு இலவச இருதய ஆப்ரேஷன் செய்யப்படுகிறது. இதற்காக 8 மருத்துவர்கள் இங்கிலாந்தில் இருந்து வருகிறார்கள்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

விஜயவா ஹாஸ்பிட்டல், மொபைல் நம்பர் 9710507105, 9629288403, 9380901361. இச்செய்தியை அதிகமாக பகிரவும். பிஞ்சு குழந்தைகளின் நலனுக்காக..." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை கன்னியாகுமரி மாவட்டம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஆகஸ்ட் 2 அன்று பதிவிட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதே போன்று யாருக்காவது பயன்படும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு போஸ்டர் வடிவில் இதே தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், "விஜயா ஹாஸ்பிடல்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை கனகலிங்கம் பாக்கியராஜா என்பவர் 2020 நவம்பர் 24ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

உண்மை அறிவோம்:

இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நன்மை செய்வதாக நினைத்து இலவச அறுவை சிகிச்சை பதிவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். யாருக்காவது நல்லது நடக்கட்டும் என்ற அவர்களின் நல்ல எண்ணம் நமக்கு புரிகிறது. இருப்பினும் இந்த தகவல் உண்மையானதுதானா என்று அவர்கள் உறுதிப்படுத்தினார்களா என்று தெரியவில்லை. பலரும் இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர். எனவே இந்த தகவல் உண்மையானதா என ஆய்வு செய்தொம்.

நாம் ஆய்வுக்காக இந்த பதிவில் குறிப்பிட்ட எண்களைத் தொடர்புகொண்டோம். அந்த நம்பர்கள் பயன்பாட்டில் இல்லை என்று தெரியவந்தது. இந்த பதிவை பகிர்ந்த நல்ல உள்ளங்கள் இந்த எண்களைத் தொடர்புகொண்டிருந்தால் விஷயம் புரிந்திருக்கும். ஷேர் செய்யாமல் இருந்திருப்பார்கள்.

இந்த பதிவு பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. சில பதிவுகளில் விஜயா மருத்துவமனை என்றும் சில பதிவுகளில் விஜயவா மருத்துவமனை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மருத்துவமனை எந்த ஊரில் உள்ளது என்று குறிப்பிடவில்லை. எனவே, எங்காவது விஜயவா மருத்துவமனை என்று உள்ளதா என்று கூகுளில் தேடினோம். அப்படி எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

அடுத்ததாக, சென்னை விஜயா மருத்துவமனையைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். சென்னை விஜயா மருத்துவமனை தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி உஜ்வாலா நம்மிடம் பேசினார். அப்போது அவர், "இந்த தகவல் தவறானது. விஜயா மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை முகாம் எதுவும் நடைபெறவில்லை" என்றார்.

பல ஆண்டுகளாக இந்த பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, முன்பு எப்போதாவது இப்படி நடந்ததா என்று கேட்டோம். அதற்கு அவர், "பல ஆண்டுகளாக இந்த வதந்தி பரவிவருவது உண்மைதான். விஜயா மருத்துவ மனையில் குழந்தைகளுக்கான இதய அறுவைசிகிச்சை (Pediatric Cardiac Surgery) பிரிவே இல்லை. குழந்தைகளுக்கான இதய அறுவைசிகிச்சைகள் இங்கு செய்யப்படுவது இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரையிலும் குழந்தைகளுக்கான இலவச அறுவைசிகிச்சை தொடர்பாக எங்களுக்கு நிறைய போன் கால் வருகிறது. இப்படி போன் செய்பவர்களுக்கு விளக்கம் அளிக்கவே தனி ஆப்பரேட்டரை நியமிக்கும் அளவுக்கு போன் கால் வருகிறது. அது மட்டுமின்றி பலரும் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு நேரடியாக மருத்துவமனைக்கு வந்துவிடுகின்றனர். உண்மை தெரிந்து வருத்தத்துடன் திரும்புகின்றனர். வதந்தியைப் பரப்புகிறவர்கள் இதை உணர்ந்து வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும்" என்றார்.

இதன் மூலம் விஜயா மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவைசிகிச்சை நடத்தப்படுகிறது என்றும், இதற்காக இங்கிலாந்தில் இருந்து மருத்துவர்கள் வருகிறார்கள் என்றும் பரவும் தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

விஜயா மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:விஜயா மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவைசிகிச்சை நடக்கிறதா? – வதந்தியால் விபரீதம்

Fact Check By: Chendur Pandian

Result: False