திருமாவளவன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று ஶ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கூறியதாக குமுதம் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

குமுதம் இதழின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "திருமாவளவன் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்! - ஶ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர்" என்று உள்ளது.

இந்த பதிவை, VCK News என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 அக்டோபர் 27 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்து மதத்தில் பெண்களைப் பற்றி எப்படி எல்லாம் கூறப்பட்டுள்ளது என்று திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமாவளவனின் சொந்த கருத்து போல அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த விவகாரத்துக்குள் செல்லவில்லை.

திருமாவளவன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று ஶ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கூறியதாக குமுதம் நியூஸ் கார்டு வெளியிட்டது போன்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஏராளமானோர் இந்த நியூஸ் கார்டை ஷேர் செய்து வரவே அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

அது மட்டுமின்றி ஒரே நியூஸ் கார்டை வைத்து "குஷ்புவைக் கிண்டலடிப்பது மனவேதனையாக இருக்கிறது. இது தொடர்ந்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் - ஶ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர்" என்று சில நியூஸ் கார்டுகள் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மற்றொன்றில் "திருமாவுக்கு எதிராக நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக புரளி கிளப்பிவிட்டு என் உயிரோடு விளையாடுகிறார்கள் - சடகோப ராமானுஜ ஜீயர் வேதனை" என்று இருந்தது. எனவே, இவற்றைப் பற்றியும் ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

முதலில் ராமானுஜ சடகோப ஜீயர் அப்படிக் கூறினாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

"பெண்கள், தாய்மார்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய திருமாவளவனைக் கைது செய்து, தண்டனை தராவிட்டால் அனைத்து தாய்மார்கள், சமுதாய தலைவர்கள், ஹிந்து மத தலைவர்கள், துறவிகள் அனைவரும் சேர்ந்து மிகப் பெரிய போராட்டத்தை ஏற்படுத்த வேண்டி இருக்கும்" என்று ஜீயர் கூறியதாக தினமலரில் செய்தி வெளியாகி இருந்தது. அதில் எந்த இடத்திலும் மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அவர் கூறியதாக இல்லை.

அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive

எனவே, குமுதம் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில் வெளியான நியூஸ் கார்டுகளை பார்த்தபோது, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது போலியானது, எடிட் செய்யப்பட்டது என்பது தெரிந்தது. குமுதம் வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட்டுக்கும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டில் உள்ள ஃபாண்டுக்கும் வித்தியாசம் இருந்தது.

அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive

தொடர்ந்து தேடியபோது குமுதம் 2020 அக்டோபர் 26ம் தேதி சடகோப ராமானுஜ ஜீயர் தொடர்பாக நியூஸ் கார்டு வெளியிட்டிருந்ததும், அதை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பதும் தெரிந்தது. குமுதம் வெளியிட்ட நியூஸ் கார்டில் "திருமாவளவன் போன்று பெண்களை இழிவாக பேசுபவர்கள் தேசவிரோதிகள் - ஶ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர்" என்று இருந்தது.

இதை உறுதி செய்ய குமுதம் இதழின் இணையப் பிரிவின் பொது மேலாளர் உமா சேகரைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் "இது நாங்கள் வெளியிட்டது இல்லை, போலியானது" என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில், திருமாவளவன் மன்னிப்பு கேட்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சடகோப ஜீயர் கூறியதாக பரவும் குமுதம் பெயரிலான நியூஸ் கார்டு உண்மை இல்லை, எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
மேற்கண்ட நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சடகோப ராமானுஜ ஜீயர் சாகும் வரை உண்ணாவிரதமா?

Fact Check By: Chendur Pandian

Result: Altered