உறை பனியில் இந்திய ராணுவ வீரர்- இது எங்கே எடுத்த புகைப்படம் தெரியுமா?

சமூக ஊடகம் சமூகம் தமிழ்நாடு

உறைய வைக்கும் பனியில் தேசம் காக்கும் நமது ராணுவ வீரர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பனியில் காவல் காக்கும் ராணுவ வீரர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாம் இங்கு நிம்மதியாக தூங்க தனது தூக்கத்தை தொலைத்து, உயிரை உறைய வைக்கும் பனியில் தேசம் காக்கும் நமது ராணுவ சகோதரருக்கு ஒரு சல்யூட் போடுங்களேன். ஜெய்ஹிந்த்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை தீபா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Push Pagaran‎ என்பவர் 2020 செப்டம்பர் 10ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உறைபனியில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். எந்த நாட்டைச் சார்ந்த ராணுவ வீரர் என்று உறுதியாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, உண்மையில் இது இந்திய வீரர்தான என்ற சந்தேகம் எழுந்தது. அதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது பல ஆண்டுகளாக சியாச்சின் சிகரத்தில் உறைபனி மத்தியில் இந்திய ராணுவ வீரர் என்று இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதையும் அது தவறான தகவல் என்று செய்தி வெளியாகி இருப்பதையும் காண முடிந்தது. பெங்களுரு மிரர் என்ற ஆங்கில ஊடகத்தில் 2017ம் ஆண்டு செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. அதில், இந்த புகைப்படம் ரஷ்யாவில் எடுக்கப்பட்டது. 2013ல் இருந்து இந்த படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. 

bangaloremirror.indiatimes.comArchived Link

தொடர்ந்த தேடிய போது பல ரஷ்ய மொழி ஊடகங்கள், சமூக ஊடக பக்கங்களில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வந்திருந்ததை காண முடிந்தது. மேலும் இந்த புகைப்படத்தில் இருப்பது உக்ரைன் வீரர் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதாகவும் உண்மையில் இவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் என்றும் சில உண்மை கண்டறியும் ஆய்வுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்டு இருப்பதையும் காண முடிந்தது. 

stopfake.orgArchived Link

அந்த ஆய்வுகளில் சில இணைப்புகளை வழங்கியிருந்தனர். ஆனால், தற்போது அந்த இணைப்புகள் செயல்பாட்டில் இல்லை. அதே நேரத்தில் இந்தியாவில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. 

இதன் அடிப்படையில், உறை பனியில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் படம் இந்தியாவைச் சேர்ந்தது இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:உறை பனியில் இந்திய ராணுவ வீரர்- இது எங்கே எடுத்த புகைப்படம் தெரியுமா?

Fact Check By: Chendur Pandian 

Result: False