
ஊட்டி – கோவை சாலையை மயில்கள் ஆக்கிரமித்துள்ளதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ஊட்டி – கோவை சாலை அதன் உண்மையான உரிமையாளரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று சாலை முழுக்க மயில்கள் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதை Vanakkam Chennai என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஏப்ரல் 6ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்து சாலையில் மான்கள், மயில்கள், சிங்கங்கள் என்று விதவிதமாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஊட்டி – கோயமுத்தூர் சாலையில் மான்கள் என்று சில வாரங்களுக்கு முன்பு வதந்தி பரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து ஊட்டி – கோவை சாலையில் மயில்கள் நடமாட்டம் உள்ளதாக பகிரப்பட்டுள்ளது. படத்தைப் பார்க்க கிராமப்புற சாலை போல உள்ளது. உண்மையில் இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இணைய ஊடகம் ஒன்றில் மகாராஷ்டிரா சிவாஜி பல்கலைக் கழகம் கோலாப்பூர் வளாகத்தில் மயில்கள் (Archived Link) என்று குறிப்பிட்டிருந்தது. இந்த செய்தி ஏப்ரல் 5, 2020 அன்று வெளியாகி இருந்தது. 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி இதே படத்தை ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதன் மூலம் இந்த புகைப்படம் நாடு தழுவிய ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது. ஆனால் இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் அதில் குறிப்பிடவில்லை.
தொடர்ந்து தேடியபோது வீடியோ ஒன்று கிடைத்தது. சாட்பீர் உயிரியல் பூங்கா என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் 3.12வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் படத்தில் உள்ளது போன்ற சாலை, காட்சிகள் இருந்தன. எனவே, மயில்கள் படம் சண்டிகரில் உள்ள சாத்பீர் உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.
சண்டிகர், சாத்பீர் உயிரியல் பூங்கா, மயில்கள் ஆகிய கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தி உள்பட பல ஊடகங்கள் இந்த புகைப்படம் தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வுகள் நடத்தியிருப்பது தெரிந்தது. அவற்றைப் பார்த்தபோது இந்த புகைப்படம் சண்டிகரில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் அடிப்படையில் ஊட்டி – கோவை சாலையில் மயில்கள் நிறைந்துள்ளன என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஊட்டி – கோவை சாலையில் திரியும் மயில்கள்; இந்த புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
