பெரியார் படத்தை வெளியிட இயக்குனர் வேலு பிரபாகரனுக்கு ரஜினி உதவினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

பெரியார் படம் வெளிவர வேண்டும் என்று ரஜினிகாந்த் தனக்கு பணம் கொடுத்து உதவினார் என்று இயக்குநர் வேலு பிரபாகரன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

இயக்குநர் வேலு பிரபாகரன் படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மன்னிப்பு கேட்க முடியாது. பெரியார் படத்துக்கு பைனான்ஸ் செய்த பெரியாரிஸ்ட் கூட வட்டிக்கு வட்டிபோட்டு, என் வீட்டை எழுதி வாங்கிட்டான்க. ஆனா, பெரியார் படம் வெளியில் வர வேண்டும் என்ற ரஜினிதான் தனக்கு பணம் கொடுத்து உதவினார் – வேலு பிரபாகரன்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை ரஜினி ஹரிஷ் மதுரை என்பவர் 22 ஜனவரி 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெரியார் படத்தை லிபர்டி கிரியேஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தயாரித்தது. இதில் நடிகர் சத்யராஜ், குஷ்பு உள்ளிட்டோர் நடித்தனர். பெரியார் படத்தை வேலு பிரபாகரன் தயாரித்ததாகவும், அந்த படம் வெளியாக ரஜினி நிதி உதவி செய்தார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

vikatan.comArchived Link 1
tamil.oneindia.comArchived Link 2

இந்த படத்தை தயாரித்த லிபர்டி கிரியேஷன்ஸ் லிமிடெட்டில் வேலு பிரபாகரன் உள்ளாரா என்று ஆய்வு செய்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், இந்த படத்தைத் தயாரிக்க தமிழக அரசு தன்னுடைய பங்குக்கு ரூ.95 லட்சத்தை 2006ம் ஆண்டு அளித்தது. இதற்கான அறிவிப்பை 2006ம் ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட்டில் அப்போதைய நிதி அமைச்சர் அன்பழகன் அறிவித்தார் என்ற செய்தி கிடைத்தது.

பெரியார் படத்தை தயாரிக்க ரஜினிகாந்த் உதவினார் என்று எங்காவது வேலு பிரபாகரன் கூறினாரா என்று ஆய்வு செய்தோம். அப்போது, வேலு பிரபாகரன் அளித்த பேட்டி ஒன்று கிடைத்தது. அதில், “பெரியார் படம் எடுக்க ரஜினி பணம் கொடுத்தாரா? ” என்று தலைப்பிட்டிருந்தனர்.

அந்த வீடியோவைப் பார்த்தோம். வீடியோவின் 33.45 நிமிடத்தில் படம் பற்றிய கேள்வி வந்தது. பேட்டி எடுத்தவர், “உங்களுக்கு ஒரு ஐந்து லட்ச ரூபாயை ரஜினிகாந்த் கொடுத்தாரே, பெரியாரிய படங்களை எடுக்கச் சொல்லி கொடுத்தாரா?” என்று கேட்கிறார்.

Archived Link

அதற்கு வேலு பிரபாகரன், “இல்லை. நட்பாக என்னிடம் ரஜினிகாந்த் பேசுவார். அப்படி ஒரு நிகழ்வின்போது, ‘ஏதோ கேள்விபட்டேன், படம் சென்சாரில் வெளிவர முடியாமல் என்பது போல…’ என்றார். நான் ஆமாம் என்றேன்”. 

பேட்டி கண்டவர், “அது என்ன மாதிரியான படம்?” என்று கேட்டபோது, “நான் என்ன படம் எடுத்தாலும் அது சமூக புரட்சியை, சமூக மேம்பாட்டைத்தான் அதில் வைப்பேன்” என்கிறார். அதற்கு பேட்டி கண்டவர், “பெரியாரிய கருத்துக்கள் இருக்கும்” என்று சொல்ல, வேலு பிரபாகரன் இருக்கும் என்கிறார். தொடர்ந்து அவர், அது வேலு பிரபாகரனின் காதல் கதைதான், அதில் பெரியாரின் கருத்துக்கள் 10 நிமிடம் வரும் வகையில் வைத்தேன். 

இந்த விஷயத்தை எல்லாம் நீங்கள் ரஜினிக்கு சொன்னீர்களா என்று கேட்க, அதற்கு வேலு பிரபாகரன், நான் எடுத்தாலே இப்படித்தான் படம் எடுப்பேன் என்பது ரஜினிக்கு தெரியும் என்கிறார்.

இந்த பேட்டியில் வேலு பிரபாகரனின் காதல் கதை என்ற படத்தை எடுத்தபோது, அது சென்சார் பிரச்னையால் வெளிவராமல் இருந்த நிலையில் ரஜினிகாந்த் உதவியதாக அவர் கூறியுள்ளார். எந்த இடத்திலும் பெரியாரிஸ்டுகள் வட்டிக்கு வட்டி போட்டு என் வீட்டை எழுதி வாங்கிக் கொண்டார்கள் என்று அதில் கூறவில்லை.

நம்முடைய ஆய்வில்,

பெரியார் படத்தை வேலு பிரபாகரன் எடுக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரியார் படத்தை லிபர்டி கிரியேஷன்ஸ் எடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரியார் படத்துக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி உதவி செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலு பிரபாகரன் காதல் கதை என்ற ஒரு படத்தை எடுத்து அது வெளியாக முடியாத நிலையில் சென்சார் போர்டில் சிக்கியிருந்த காலகட்டத்தில், அவருக்கு ரஜினிகாந்த் உதவி செய்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் ரஜினிகாந்த் பெரியார் படம் வெளியாக உதவி செய்யவில்லை என்பதும், வேலு பிரபாகரனின் காதல் கதை என்ற படம் வெளியாகாமல் வேலு பிரபாகரன் கஷ்டப்பட்ட காலத்தில் அவர் உதவியதை தவறாக புரிந்துகொண்டு பெரியார் படம் எடுக்க உதவினார் என்று தவறாக பகிர்ந்து வருவதும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு சிறிது உண்மையுடன் நிறைய தவறான தகவல் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பெரியார் படத்தை வெளியிட இயக்குனர் வேலு பிரபாகரனுக்கு ரஜினி உதவினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •