
தேவைப்பட்டால் கொரோனா காலத்தில் மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் பணியில் ஆசிரியர்களைப் பயன்படுத்துவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதே போன்று எடப்பாடி பழனிசாமி, டி.ஆர்.பாலு, அமைச்சர் சக்கரபாணி பெயரிலும் போலியான நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆசிரியர்கள் மீது அமைச்சர் காட்டம். தற்போதைக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியமே போதுமானதாக உள்ளது. அதனால் தொகுப்பு ஊதியம் நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை வழங்கப்படாது. தேவைப்பட்டால் கொரோனா காலத்தில் மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் பணியில் ஆசிரியர்களைப் பயன்படுத்துவோம். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி” என்று இருந்தது.
இந்த பதிவை கோணவாயன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜனவரி 20ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது, நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை தொகுப்பூதியம் வழங்கப்படமாட்டது. கொரோனா காலத்தில் தேவைப்பட்டால் மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவோம் என்று மிகவும் மோசமான முறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு உள்ளதால் பலரும் இதை பகிர்ந்து, அமைச்சருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட், வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. எனவே, இது போலியாக இருக்க வேண்டும். தந்தி டி.வி உண்மையில் இப்படி ஏதும் நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று பார்த்தோம். அப்படி தந்தி டி.வி-யின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்ட போது ஒரே நாளில் 4 நியூஸ் கார்டுகள் “ஃபேக்” என்று முத்திரை குத்தி தந்தி டிவி பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியும் ஒன்று.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சமீபத்தில் இப்படி ஏதும் கருத்தை தெரிவித்தாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில் அமைச்சர் பெயரில் பரவும் செய்தி மற்றும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
அமித்ஷா காலில் விழுந்து அனுமதி பெற்றிருப்பேன் – இபிஎஸ்!

அசல் பதிவைக் காண: Facebook I Archive
“திறமையில்லாதவர் ஸ்டாலின் – ஈபிஎஸ். குடியரசு தின பேரணிக்கு தமிழக ஊர்திகள் தேர்வு செய்யப்படாததிற்கு ஸ்டாலினின் திறமையின்மையே காரணம். நானாக இருந்தால் அமித் ஷா அவர்களின் காலில் விழுந்தாவது தேர்வு செய்ய வைத்திருப்பேன்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக போலியாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது என்று தந்தி டிவி பதிவிட்டிருந்தது.
பொங்கல் பரிசு பரிசுத்தமானது – சக்கரபாணி!

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பொங்கல் பரிசுப் பொருட்கள் தொடர்பாக மேலும் ஒரு போலியான நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், “பொங்கல் பரிசு தொகுப்பு பரிசுத்தமானது. ரேஷனில் வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பரிசுத்தமானது. அரசு இலவசமாக வழங்குவதைக் குறை சொல்லக்கூடாது. பிடிக்காதவர்கள் வாங்க வேண்டாம். உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி” என்று தந்தி டிவி பெயரில் நியூஸ் கார்டு பரவி வருகிறது. அந்த நியூஸ் கார்டையும் போலியானது என்று உறுதி செய்துள்ளது தந்தி டிவி.
பிரியமான பா.ஜ.க அரசு மரியாதையாக நடத்தியது – டி.ஆர்.பாலு!

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பாரதிய ஜனதா கட்சிக்கு தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு புகழாரம் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “காங்கிரஸ் அரசு பல நேரங்களில் எங்களை இரண்டாம் தரமாக நடத்தியது இத்தனைக்கும் எங்கள் தயவில் தான் அவர்கள் ஆட்சியே நடந்தது ஆனால் எதிரியாக இருந்தாலும் எங்களுக்கு பிரியமான பாஜக அரசு எங்களை மரியாதையோடு நடத்துகிறார்கள் திமுக பொருளாளர் டிஆர் பாலு” என்று இருந்தது. இதையும் போலியான நியூஸ் கார்டு என்று தந்தி டிவி உறுதி செய்துள்ளது. தந்தி டிவி இந்த நான்கு நியூஸ் கார்டுகளையும் போலியானது என்று உறுதி செய்துள்ளது.
சமீப நாட்களாக போலியான நியூஸ் கார்டுகளை பகிர்வது அதிகரித்துள்ளது. சர்ச்சைக்குரிய நியூஸ் கார்டுகளை பகிர்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஊடகத்தின் சமூக ஊடக பக்கங்களை பார்ப்பது நல்லது. இதன் மூலம் வதந்திகளை பரப்புவதை தவிர்க்க முடியும்!
முடிவு:
எடப்பாடி பழனிசாமி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் அன்பில் மகேஸ், சக்கரபாணி ஆகியோர் பெயரில் பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:எடப்பாடி பழனிசாமி, அன்பில் மகேஸ், சக்கரபாணி, டி.ஆர்.பாலு பெயரில் பரவும் போலி நியூஸ் கார்டுகள்!
Fact Check By: Chendur PandianResult: False
