
டெல்லியில் மதுபான வரி முறைகேடு வழக்கில் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் உதவியாளர் அபிஷேக் கைது செய்யப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தி.மு.க தலைவராக இருந்த மு.கருணாநிதி மறைவின் போது ஸ்டாலின் அழுத வீடியோவை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் சபரீசனின் தனி உதவியாளர் அபிஷேக் என்பவரை பல்லாயிரம்கோடி டெல்லி சாராய ஊழலில் சி_பி_ஐ கைது செய்துள்ளது.
ஸ்டாலினுக்கு நிரந்தர தூக்கமின்மை வரும்போல் உள்ளது. இரண்டு தி.மு.க மந்திரிகளும் கைது செய்யப்பட உள்ளனர் என்று தகவல்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை வெ.கந்தவேல் படையாட்சி பண்ருட்டி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 அக்டோபர் 13ம் தேதி பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
டெல்லியில் மது விற்பனை வரியில் முறைகேடு தொடர்பான வழக்கில் தெலங்கானாவைச் சேர்ந்த தொழிலதிபர் அபிஷேக் போயினப்பள்ளி என்பவரை சிபிஐ கைது செய்திருந்தது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அபிஷேக் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தனி உதவியாளர் என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
முதலில் கைது செய்யப்பட்ட நபரைப் பற்றி ஆய்வு செய்தோம். யார் இந்த அபிஷேக் போயினப்பள்ளி என்று கூகுளில் தேடிய போது, அவர் பற்றிய தகவல் கிடைத்தது. தற்போது அகில இந்தியக் கட்சியாக பெயர் மாற்றம் செய்துகொண்ட பாரத் ராஷ்டிர சமதி (தெலங்கானா ராஷ்டிர சமிதி) கட்சியின் நிறுவனத் தலைவர்களுள் ஒருவரான போய்னப்பள்ளி ஹனுமந்த ராவ் என்பவரின் மகன் என்று குறிப்பிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தி கிடைத்தது.
ஹனுமந்த ராவ் தற்போது தீவிர அரசியலில் இல்லை என்றும், அபிஷேக் தற்போது பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருவதாகவும் நண்பருடன் இணைந்து மதுபான தயாரிப்புத் துறையில் சமீபத்தில் இறங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இவ்வளவு பெரிய தொழிலதிபராக இருக்கும் அபிஷேக் ஏன் சபரீசனின் உதவியாளராக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

உண்மைப் பதிவைக் காண: timesofindia I Archive 1 I bizzbuzz.news I Archive 2
மேலும், நாம் பார்த்த எந்த ஒரு செய்தியிலும் சபரீசனின் உதவியாளர் அபிஷேக் என்று குறிப்பிடவில்லை. உண்மையில் அவர் சபரீசனின் உதவியாளராக இருந்திருந்தால் தேசிய ஊடகம் முதல் உள்ளூர் ஊடகம் வரை அனைத்திலும் அதுதான் மிகப்பெரிய செய்தியாக வந்திருக்கும். ஆனால், தீவிர பா.ஜ.க ஆதரவு ஊடகங்களிலும் கூட கைது செய்யப்பட்டவர் சபரீசனின் உதவியாளர் என்று குறிப்பிடவில்லை.
சபரீசனுக்கு அபிஷேக் என்று உதவியாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்று அறிய தி.மு.க முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். இந்த தகவல் தவறானது என்று அவர் உறுதி செய்ததுடன், “அபிஷேக் என்ற பெயரில் உதவியாளர் யாரும் இல்லை” என்று தெரிவித்தார். மேலும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர்களை முடக்க சிபிஐ பயன்படுத்தப்படுவதாக சில செய்திகளும் நமக்கு கிடைத்தன. இதன் மூலம் சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்பது உறுதியானது.
முடிவு:
முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் உதவியாளரை சிபிஐ கைது செய்தது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் சபரீசனின் உதவியாளரை சிபிஐ கைது செய்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
