பிரதமர் மோடி பேசியதை பார்த்து டிவியை உடைத்த நபர்- வீடியோ செய்தி உண்மையா?
மோடியின் நேரலை அறிவிப்பைப் பார்த்து கோபத்தில் டி.வி-யை ஒருவர் உடைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
வெறும் 20 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில் மோடி வீடுகளில் விளக்கேற்றுமாறு அழைப்பு விடுத்தது தொடர்பான செய்தி காட்சிகள் வருகின்றன. இதைப் பார்த்த நபர் டி.வி-யை தூக்கிப்போட்டு உடைக்கிறார்.
நிலைத் தகவலில், "அடப்பாவமே.. இவன் நம்மள விட பெரிய கோவக்காரனா இருப்பான் போலயே..." என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, மு.இரா. செந்தில் குமார் என்பவர் ஏப்ரல் 15, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தொலைக்காட்சியைப் பார்ப்பவரைப் பார்த்தால் தமிழர் போலத் தெரியவில்லை. மேலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காட்சிகள் எடிட் செய்யப்பட்டது போல உள்ளது. வீடியோவில் அந்த நபர் கையில் கிடைத்த பொருட்களை தூக்கி தொலைக்காட்சி மீது வீசுகிறார், ஆனால் அது தொலைக்காட்சி மீதோ அல்லது சுற்றின் மீது விடும் காட்சி இல்லாமல், தரையில் விழும் காட்சி மட்டுமே உள்ளது. எனவே, இது போலியான வீடியோ என்பது தெரிந்தது.
அசல் வீடியோவைக் கண்டறிய வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நம்முடைய தேடலில் துருக்கியைச் சேர்ந்த கால்பந்தாட்ட ரசிகர் ஒருவர் போட்டியைக் காண முடியாமல் தொடர்ந்து தடங்கல் ஏற்படவே எரிச்சலில் டி.வி-யை உடைத்தார் என்று பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் ஷேர் செய்து வருவது தெரிந்தது. யூடியூப் வீடியோக்களும் கிடைத்தன.
இவற்றுக்கு நடுவே, 2016ம் ஆண்டு டெய்லி மெயில் என்ற ஊடகம் இந்த வீடியோ மற்றும் செய்தியை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.
இந்த நபரின் மனைவி யூரோ கால்பந்தாட்டத்தின்போது தொலைக்காட்சியை ஆஃப் செய்து ஆஃப் செய்து விளையாடியுள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த நபர் டி.வி-யை உடைத்தார் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம், துருக்கியில் 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை தொடர்பான வீடியோவை சேர்த்து தவறான தகவலை பரப்பியது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:பிரதமர் மோடி பேசியதை பார்த்து டிவியை உடைத்த நபர்- வீடியோ செய்தி உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False