கிரிக்கெட் விளையாடி கீழே விழுந்த திமுக எம்.பி செந்தில் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடி கீழே விழுந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கிரிக்கெட் விளையாடும் நபர் ஒருவர் பந்தை அடிக்க முயற்சி செய்து கீழே விழும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தர்மபுரி எம்பியின் அபாரமான பேட்டிங்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Vinoth Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 8ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் உள்ள நபரைப் பார்க்கும் போது தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் போல இல்லை. வீடியோவில் எங்கும் தி.மு.க எம்.பி கிரிக்கெட் விளையாடும் போது கீழே விழுந்தார் என்று குறிப்பிடவும் இல்லை. சற்று உடல் பருமனாக இருக்கிறார். அதைத் தவிர வீடியோவில் இருப்பவருக்கும் தி.மு.க எம்.பி செந்தில் குமாருக்கும் வேறு எந்த ஒரு உருவ ஒற்றுமையும் தெரியவில்லை. யாரோ ஒருவர் கீழே விழுந்த வீடியோவை எடுத்து தி.மு,க எம்.பி என்று வதந்தி பரப்பி மகிழ்ந்திருப்பது தெரிகிறது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

தி.மு.க எம்.பி செந்தில்குமார் தான் மேற்கொள்ளும் செயல்பாடுகள், அறிவிப்புகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் உடனுக்குடன் பதிவிடும் பழக்கம் கொண்டவர். உண்மையில் கிரிக்கெட் விளையாடி கீழே விழுந்திருந்தால் அதையும் அவர் பதிவு செய்திருப்பார். எனவே, முதலில் அவருடைய ட்விட்டர் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில், அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார். இதுவே இந்த வீடியோவில் இருப்பது தி.மு.க எம்.பி செந்தில் குமார் இல்லை என்பதை உறுதி செய்ய போதுமானதாக இருந்தது.

Archive

இருப்பினும், இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று கூடுதல் தகவல் கிடைக்கிறதா என்று வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 

அப்போது பல மாதங்களாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், வீடியோவில் இருக்கும் நபர் யார் என்ற விவரத்தை அவர்கள் வெளியிடவில்லை. கேலி – நையாண்டி வீடியோவாக இதைப் பலரும் பகிர்ந்து வந்துள்ளனர். உடல் பருமனாக உள்ள நபரை உருவக் கேலி செய்வதாக இந்த வீடியோ உள்ளது என்று பலரும் விமர்சித்து வருவதையும் காண முடிந்தது.

உடல் பருமனாக உள்ள யாரோ ஒருவர் கிரிக்கெட் விளையாடிய போது கீழே விழுந்த வீடியோவை, தி.மு.க எம்.பி என்று விஷமத்தனமாக வதந்தி பரப்பியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திமுக எம்.பி கிரிக்கெட் விளையாடும் போது கீழே விழுந்தார் என்று பரவும் வீடியோவில் இருப்பது செந்தில்குமார் இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கிரிக்கெட் விளையாடி கீழே விழுந்த திமுக எம்.பி செந்தில் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False