
ராகுல் காந்தியின் அதிரடி செயல்பாட்டைக் கண்டு அஞ்சி பாஜக கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் வெளியேறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நக்கீரன் இதழ் வெளியிட்ட வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “பாஜகவுக்கு ஆதரவு வாபஸ். கூட்டணியில் இருந்து EXIT” என்று இருந்தது.
நிலைத் தகவலில், “தன் கோவனம் அவரத்துக்குள்ள நாம் இதிலிருந்து விலகி இருக்கணும்னு விவரமா விலகிட்டான்
ராகுல் இன்னும் அடிக்கவே இல்லை தொடக்கமே அமர்க்களம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் திடீரென்று நீக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பிரச்னை எழுப்பினார். அதைத் தொடர்ந்து வாக்குத் திருட்டு என்று காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் தனக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயந்து பாஜக கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதுடன், கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகுவதாக ஒரு பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் பாஜக-வுக்கு அளித்து வந்த ஆதரவை நிதிஷ் குமார் கட்சி திரும்பப் பெற்றது. அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தே அவர் வெளியேறியது போன்று தலைப்பை வைத்து செய்தி வெளியிட்டிருந்தது நக்கீரன் இதழ். அந்த வீடியோ தொடர்பான செய்தியை அப்போதே பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்திருந்தனர்.
எனவே, ராகுல் காந்தியின் அதிரடிக்கும் இந்த செய்திக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
வீடியோவில் இடம் பெற்ற தலைப்பை அப்படியே கூகுளில் டைப் செய்து தேடிய போது, 2025 ஜனவரியில் நக்கீரன் வெளியிட்டிருந்த யூடியூப் வீடியோ நமக்குக் கிடைத்தது. நக்கீரன் வெளியிட்ட வீடியோவின் முகப்பு புகைப்படத்தை எடிட் செய்து, முழு வீடியோவிலும் பாஜகவுக்கு ஆதரவு வாபஸ் என்ற தலைப்பு வரும் வகையில் மாற்றி தற்போதைய செய்தி போல சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
உண்மையில் மணிப்பூரிலும் கூட நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளிவரவில்லை. மணிப்பூர் மாநில ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் இந்த ஆண்டு ஜனவரியில் திடீரென்று மணிப்பூர் பாஜக அரசுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவித்தார்.
மாநில தலைவரின் இந்த அறிவிப்பைக் கட்சித் தலைமை ஏற்கவில்லை. “தன்னிச்சையாக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கட்சித் தலைமையின் ஆலோசனையை அவர் பெறவில்லை. அவர் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் ஒரு அங்கமாக உள்ளது. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியதாகப் பரவும் செய்தி அடிப்படையற்றது” என்று அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாக ராஜீவ் ரஞ்சன் பிரசாத் 2025 ஜனவரியிலேயே தெளிவுபடுத்திவிட்டார்.
ஆனால் இந்த விவரம் தெரியாமல், நக்கீரன் இதழ் பரபரப்புக்காக வைத்த தலைப்பு செய்தியை ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து வரும் சூழலில் நிதிஷ்குமாரும் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு செய்தது போன்று தவறான செய்தியை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2025 ஜனவரியில் மணிப்பூர் மாநிலத்தில் கூட்டணியில் இருந்து விலகுவதாக மணிப்பூர் மாநில ஐக்கிய ஜனதா தளம் அறிவித்த பழைய செய்தியை ராகுல் காந்தியின் அதிரடி நடவடிக்கை காரணமாக பாஜக கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை நிதிஷ் குமார் திரும்ப பெற்றார் என்று தவறாக 2025 ஆகஸ்டில் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ராகுல் காந்தியின் அதிரடியால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக நிதிஷ் குமார் அறிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
